யாழ் தாதியர் பயிற்சிக்கல்லூரி பரீட்சை மேற்பார்வையாளர்கள் சிக்கலில்!


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடந்த முறைகேடு ஒன்று தொடர்பில் விசேட விசாரணை இடம்பெற்றுள்ளது. தாதிய மாணவர்களிற்கு நடத்தப்பட்ட பரீட்சையின்போது, போலிக் கையொப்பமிட்ட விவகாரத்தில் தாதிய போதனாசிரியர்கள், விடுதிப் பொறுப்பு தாதிகள் என சிலர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

யாழ் தாதியர் பயிற்சி கல்லூரியில் பயிலும் 67 தாதிய மாணவர்களிற்கான செய்முறை பரீட்சை கடந்த 10ம் திகதி முதல் யாழ் போதனா வைத்தியசாலையில் நடந்தது.

இந்த பரீட்சைகளை மேற்பார்வை செய்ய தாதிய போதனாசிரியர்கள், விடுதிப் பொறுப்பு தாதிகள் என ஆறுபேர் நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் மூவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையை சேர்ந்தவர்கள். மூவர் தென்னிலங்கையிலிருந்து வருகை தந்திருந்தவர்கள்.

இந்தநிலையில், சுகாதார திணைக்களத்திற்கு சில நாட்களின் முன்னர் ஒரு முறைப்பாடு சென்றிருந்தது. அந்த முறைப்பாட்டில்– “தாதிய பயிற்சி மாணவர்களிற்கான செய்முறை பரீட்சை நடைபெற்றபோது, மேற்பார்வையாளராக கடமைபுரிந்தவர்கள், சில நாட்கள் மேலதிகமாக பரீட்சை நடைபெற்றதை போல காண்பித்துள்ளனர். எனினும், அந்த நாட்களில் பரீட்சை நடக்கவில்லை. ஆனால், பரீட்சை மேற்பார்வையில் ஈடுபட்டதை போன்று கையொப்பமிட்டு, போலியான ஆவணம் தயார் செய்துள்ளார்கள்என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து, சுகாதார திணைக்களத்தில் இருந்து, யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரிற்கு தொலைநகலில் இந்த விடயம் குறித்த விசாரணை அறிக்கை கோரப்பட்டிருந்தது.

இந்த குற்றச்சாட்டு குறித்த விசாரணைகளை நடத்திய யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், பரீட்சைகள் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளதை விட மூன்று நாட்களின் முன்னரே பரீட்சைகள் முடிந்திருந்ததை கண்டறிந்தார். பரீட்சை நடந்ததாக பதிவேட்டில் காண்பிக்கப்பட்டிருந்த மூன்று நாட்களிலும், குறித்த ஆறு உத்தியோகத்தர்களும் விடுமுறையில் வீட்டில் நின்றிருக்கிறார்கள்.

குறித்த வரவு பதிவேடு தற்போது போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த விவகாரத்தால் யாழ் போதனா வைத்தியசாலை தாதிய பரிபாலகர் மேலதிக நெருக்கடியை சந்தித்துள்ளாார். இந்த பரீட்சைகளை மேற்பார்வை செய்யும் பொறுப்பில் அவரே இருந்தார். மூன்றுநாள் போலிக்கையெழுத்து விவகாரத்தில் அவரும் சிக்கலை சந்திக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கல்விச் சான்றிதழ் தொடர்பான நெருக்கடியொன்றை அவர் சந்தித்து வருகிறார்காபொத சாதாரணதரத்தில் கணித பாடத்தில் முன்முறை சித்தியடையாத இவர், பின்னர் அநுராதபுரத்தில் உள்ள பாடசாலையொன்றில் பரீட்சை எழுதி, சித்தியடைந்ததாக சான்றிதழ் சமர்ப்பித்திருந்தார். பல வருடங்களின் முன்னர் நடந்த சம்பவம் இது. எனினும், அது முறைகேடானது என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டிருந்தது.

இது தொடர்பான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here