‘ரொமாண்டிக் காட்சி தத்ரூபமாக இருக்க வேண்டுமென சொல்லி…’: அர்ஜூன் மீது நடிகை #metoo குற்றச்சாட்டு!

பிரபல தமிழ் நடிகர் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.

உலகளாவிய மீ டூ பிரசாரத்தின் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த மீ டூ விவகாரத்தில் ஏராளமான பிரபலங்கள் பாலியல் குற்றச்சாட்டு சர்ச்சையில் சிக்கி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி சுமத்திய பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து, பலரும் துணிவுடன் தமக்கு நேர்ந்த மோசமான அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள்..

தற்போது இந்த லிஸ்ட்டில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் பெயரும் சிக்கியுள்ளது.

நிபுணன் பட ஷூட்டிங்கின் போது நடிகர் அர்ஜுன் தன்னிடம் தவறாக நடந்துக் கொண்டதாக கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக தனது ஃபேஸ்புக்கில் நீண்ட விளக்கத்தை பதிவிட்டுள்ளார் ஸ்ருதி ஹரிஹரன். அதில்- தனது ஆரம்ப கால கட்டத்தில் அர்ஜுன் போன்று பெரிய நடிகரின் படத்தில் நடிப்பதை மிக பெரிய விஷயமாக கருதினேன். தொழில் ரீதியாக நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள ஆர்வமாக இருந்தேன். அர்ஜுனுக்கு மனைவியாக தான் நடித்த அந்த படத்தின் ஷூட்டிங்கில், ரொமாண்டிக் காட்சி ஒன்றை படமாக்க வேண்டி இருந்தது. அதற்காக ரிஹர்சல் செய்தபோது, ஸ்க்ரிப்ட்டில் இருப்பதற்கு மாறாக தத்ரூபமாக இருக்க வேண்டும் என கூறிக் கொண்டு, தன்னை இறுக்கமாக அணைத்து, முதுகில் கை வைத்து தடவினார். நான் அப்போது அசௌகரியமாக உணர்ந்ததை இயக்குனரும் அறிவார்.

இந்த சம்பவத்திற்கு பின் தன்னிடம் மிகுந்த அட்வாண்டேஜ் எடுத்துக் கொண்டு, தவறான நோக்கத்தில் பேசி, ஷூட்டிங்கிற்கு பின் தனியாக சந்திக்க வேண்டும் என்று அவர் அழைத்தது எனக்கு மிகவும் அதிர்ச்சியை அளித்தது. அதன் பின் அவரிடம் இருந்து சற்று விலகியே இருந்தேன்’ என தெரிவித்துள்ளார்.

இது போன்ற அனுபவம் பல பெண்களுக்கு நடந்திருக்கும். இப்போது பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது, எத்தனை பெரிய புகழ், செல்வாக்கு கொண்ட பிரபலமாக இருந்தாலும், குற்றம் செய்தவர்களின் முகத்திரையை பொது வெளியில் அம்பலப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இதனை பகிர்ந்துள்ளேன் எனவும் ஸ்ருதி ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

அர்ஜூனின் மகளே நடிக்க வந்து விட்ட நிலையில், அர்ஜூனின் மீதான இந்த குற்றச்சாட்டால் அவரது ரசிகர்கள் அதிர்ந்து போயுள்ளனர். ஸ்ருதி குற்றம்சாட்டி பல மணிநேரமாகியும் அர்ஜூன் தரப்பிலிருந்து எந்த பதிலும் சொல்லப்படவில்லை.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here