நவராத்திரி விழாவை தடுத்த போதனாசிரியரின் இன்றைய நிலைமை தெரியுமா?


மட்டக்களப்பு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் நவராத்திரி விழா அனுட்டிக்க தடைவிதிக்கப்பட்டதாக சர்ச்சையில் சிக்கிய தாதிய போதனாசிரியர் திருமதி தேவரஜினி, கொழும்பு தாதியர் பயிற்சிக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட செய்தி நேற்று வெளியாகியிருந்தது.

நவராத்திரி விழாவை அனுட்டிக்க விடாமல், வகுப்பறையில் தம்மை பூட்டி வைத்ததாக கூறி தாதிய மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்ததையடுத்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் இது குறித்து சுகாதார திணைக்களத்திற்கு அறிக்கையொன்றை அனுப்பியிருந்தார். சுகாதார திணைக்களத்தின் உத்தரவிற்கமைவாக அவர் இடமாற்றம் செய்யப்பட்டார் என நேற்று செய்திகள் வெளியாகியிருந்தன.

இதன் மேலதிக விபரங்கள் சிலவற்றை- இன்று (19)ம் திகதிய சம்பவங்கள்- தமிழ்பக்கம் பெற்றுள்ளது.

சுகாதார திணைக்களத்தின் உத்தரவிற்கிணங்க, கொழும்பு தாதியர் பயிற்சி கல்லூரியில் திருமதி தேவரஜினி இணைக்கப்பட்ட போதும், அவரது நியமனத்திற்கு கொழும்பு தாதியர் கல்லூரியில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கந்தானை தாதியர் பயிற்சிக் கல்லூரியில் திருமதி தேவரஜினி இணைப்பு செய்யப்பட்டார். எனினும், அந்த கல்லூரி நிர்வாகமும் அவரை இணைத்துக் கொள்ள எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, நாளை வரையில் தீர்மானம் எடுப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனேகமாக அம்பாந்தோட்டையிலேயே அவர் நியமனம் செய்யப்படுவார் என தெரிகிறது.

தாதியர் பயிற்சிக் கல்லூரியில் போதனாசிரியராக கடமையாற்றிய சமயத்தில் அவர் சில வருடங்களின் முன்னரும் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளாகியிருக்கிறார். வவுனியா தாதியர் பயிற்சி கல்லூரியில் கடமையாற்றிய சமயத்தில், சில குற்றச்சாட்டக்களின் அடிப்படையில் கந்தானை தாதியர் பயிற்சி கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தார். இதன்பின்னர், நடந்த விசாரணையின் அறிக்கையின்படி, அவர் தண்டனைக்குள்ளாகி பதுளை பொதுவைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தராக கடமையாற்றினார்.

இம்முறையும் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளாகும் வாய்ப்புள்ளதாக சுகாதார திணைக்களத்தின் மூத்த அதிகாரிகள் சிலர் தமிழ் பக்கத்திடம் தகவல் தந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here