வவுனியாவில் பத்து மாதத்தில் எத்தனை பேர் தற்கொலை செய்தார்கள் தெரியுமா?

வவுனியா செட்டிக்குளத்தில் தனது மூன்று பிள்ளைகளிற்கும் விசம் கொடுத்து, தானும் விசம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற குடும்ப பெண்ணிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஆராயப்பட்டு வருவதாக வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.எஸ்.எம்.என்.தென்னக்கோன் தெரிவித்துள்ளார். தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.

அத்துடன், வவுனியா மாவட்டத்தில் கடந்த பத்து மாதங்களில் 22 தற்கொலை மரணங்கள் நிகழ்ந்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்- “வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் 13 பொலிஸ் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையப் பிரிவுகளில் கடந்த பத்து மாதங்களில் 22 தற்கொலை மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் பத்துப் பேர் பெண்கள். பன்னிரண்டு பேர் ஆண்கள்.  இவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.

இவர்களில் அதிகமானவர்கள் இளவயதினர். தற்கொலைக்கு இன்னொரு முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. விச மருந்துகள். இதில் செட்டிக்குளம் பகுதியில் தாயொருவர் தனது மூன்று பிள்ளைகளிற்கும் விசம் கொடுத்து விட்டு தானும் விசம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். அதிர்ஸ்டவசமாக அவர்கள் உயிர்தப்பினார்கள்.

எங்களிற்கு ஆச்சரியமாக இருந்தது 14,15,16 வயது சிறுவர்களும் தற்கொலை செய்கிறார்கள். 21 முதல் 25 வயதிற்கிடைப்பட்ட எட்டுப் பேர் தற்கொலை செய்துள்ளனர். 31 தொடக்கம் 35 வயதிற்கிடைப்பட்ட ஏழு பேர் தற்கொலை செய்துள்ளனர்.

வவுனியாவிலுள்ள பொலிஸ் நிலையங்களில் சிறுவர், பெண்கள் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்கொலை செய்துகொள்பவர்கள் எவருடனாவது பேச முயற்சிக்கிறார்கள். அதன் பின்னரே தற்கொலைக்கு முயன்று வருகிறார்கள். உங்களிற்கு என்ன பிரச்சனை இருந்தாலும் பொலிஸ் நிலையங்களிற்கு வந்து உங்கள் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அனைவரும் எமது பிள்ளைகள் என்று நினைத்தே கடமையாற்றி வருகிறோம். எனவே இளவயதினர், உங்கள் தாய், தந்தையராக நினைத்து எம்முடன் கலந்துரையாடுங்கள். உங்கள் பிரச்சனைகளை மனம்விட்டு பேச முன்வர வேண்டும். உங்களிற்கு ஏதும் சுகவீனம் இருந்தால் வைத்தியரிடம் சென்று சொல்ல வேண்டும். அதேபோல ஏதும் பிரச்சனைகள் இருந்தால் பொலிஸ் நிலையத்திற்கு சென்று சொல்ல வேண்டும்.

முன்னர் தற்கொலை செய்ய முயன்றால் தண்டப்பணம் செலுத்த வேண்டும். இப்போது அப்படியில்லை. இதனாலேயே பலர் தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள். செட்டிக்குளத்தில் பிள்ளைகளுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக சட்டநடவடிக்கை எடுக்க முயற்சித்து வருகிறோம்“ என்று தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here