வடமராட்சி கிழக்கில் விவசாய நிலங்கை உரிமைகோரிய வனஜீவராசிகள் திணைக்களம்!

வடமராட்சி கிழக்கில் பொதுமக்களின் விவசாய நிலங்களை உரிமைகோரியுள்ள வனவள திணைக்களம், விவசாய நடவடிக்கைகளிற்கும் தடைவிதித்துள்ளது.

1938ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 18 ஆயிரம் ஏக்கர் நிலங்களை பராமரித்து வந்த வனஜீவராசிகள் திணைக்களம், போரின் பின்னர் தனது பராமரிப்பில் உள்ள நிலங்களை 48 ஆயிரம் ஏக்கராக உயர்த்தியுள்ளது. இது குறித்த தகவல்கள் மாவட்ட செயலாளரிற்கே அறிவிக்கப்படவில்லை.

வடமராட்சி கிழக்கின் வெற்றிலைக்கேணி, நிச்சியவெட்டை, சுண்டிக்குளம், போக்கறுப்பு பகுதிகளில் 6 ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்களில் மக்கள் நெற்செய்கை மேற்கொண்டு வந்தனர்.

இந்த வருடமும் வழக்கம்போல விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டனர். தற்போது பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில், வயல்களை உழுது, விதைப்பிற்கு தயாராகிக் கொண்டிருந்த சமயத்தில், கடந்த சில தினங்களிற்கு முன்னர் அங்கு சென்ற வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு பணித்துள்ளனர். இதனால் நெற்செய்கை மேற்கொள்ள முடியாமல் மக்கள் திரும்பியுள்ளனர்.

வனஜீவராசிகள் திணைக்களத்தின் நடவடிக்கை குறித்து பொதுமக்கள் கடுமையான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர். தனது பனங்காணிக்கு சென்று ஒரு மட்டையை கூட எடுக்க முடியாமலுள்ளது என்றும் விசனம் தெரிவித்தனர். சுண்டிக்குளம் நன்னீர் எரியில் மீன்பிடியில் ஈடுபடுபவர்களும் தொழில் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் யாழ் மாவட்ட செயலாளர் நா.வேதநாயகன் கருத்து தெரிவித்தபோது- “சுண்டிக்குளத்தை அண்டிய பகுதிகளில் உள்ள தனியார் காணிகளோடு இணைந்த நிலப்பரப்பையே வனஜீவராசிகள் திணைக்களம் அடையாளப்படுத்தியது. பிரதேசசெயலாளரிடம் முறைப்பாடு சென்றதும், அவர் வனஜீவராசிகள் திணைக்களத்துடன் கலந்துரையாடினார். அங்குள்ள உறுதிக்காணிகளிலும், நீண்டகாலமாக விதைப்பு மேற்கொண்ட காணிகளிலும் விவசாயம் மேற்கொள்ளலாமென்ற இணக்கம் காணப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் மேலதிகமாக சுவீகரித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இல்லாமல் செய்து, முன்னர் இருந்த நிலங்களையே வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு ஒதுக்கும் வர்த்தமானியை வெளியிடும் முயற்சிகள் நடக்கின்றன“ என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here