7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை: பாகிஸ்தான் ‘சீரியல் கில்லருக்கு’ தூக்கு தண்டனை நிறைவேற்றம்

லாகூரில் சிறைக்கு வெளியே இன்று காத்திருந்த சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்கள்

பாகிஸ்தானில் 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த சீரியல் கில்லருக்கு இன்று சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

கொலையாளியை பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிட வேண்டும் என்று சிறுமியின் தந்தை தாக்கல் செய்த மனுவை நிராகரித்த நீதிமன்றம் சிறையில் தூக்கிலிட உத்தரவிட்டது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் லாகூரில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள கசூர் நகரில் 7வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டுக் குப்பையில் வீசப்பட்டுக் கிடந்தார். இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தொடர்புடைய கொலைகாரரைக் கைது செய்யக் கோரி கசூர், லாகூர் நகரில் மக்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தினார்கள், நாடுமுழுவதும் இந்தக் கொலை சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

போலீஸாரின் தீவிர விசாரணையில் இரு வாரங்களுக்குப்பின் இம்ரான் அலி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு லாகூரில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த வாரம் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, இம்ரான் அலிக்குத் தூக்கு தண்டனை விதித்துத் தீர்ப்பளித்து, அக்டோபர் 17-ம் தேதி தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டார்.

ஆனால், கொல்லப்பட்ட சிறுமியின் தந்தை அமின் அன்சாரி லாகூர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் கொலைக்குற்றவாளி இம்ரான் அலியை மக்கள் பார்க்கும் வகையில், பொதுஇடத்தில் தூக்கிலிட வேண்டும் என்று கோரி இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சர்தார் ஷாஹிம் அகமது, ஷாபாஸ் ரிஸ்வி ஆகியோர் மனுவைத் தள்ளுபடி செய்து, சிறையிலேயே தூக்கிலிட உத்தரவிட்டனர்.

இதையடுத்து, இன்று காலை லாகூரில் உள்ள கோட் லாக்பத் சிறையில், மாஜிஸத்திரேட் அதில் சர்வார் முன்னிலையில், இம்ரான் அலிக்குத் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்தத் தண்டனை அந்தச் சிறுமியின் மாமா முன்னிலையில் நிறைவேற்றப்பட்டது.

கசூர் நகரைச் சேர்ந்த இம்ரான் அலி, இதுவரை 9 பலாத்கார வழக்கில் சிக்கியுள்ளார். அனைத்துப் பலாத்காரங்களும் சிறுமிகளையும், குழந்தைகளையும் செய்தவையாகும். இம்ரான் அலி தூக்கிலிடுவதையொட்டி, சிறையைச் சுற்றி ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இம்ரான் அலி தூக்கிலிடப்பட்ட செய்தி அறிந்ததும், கொல்லப்பட்ட சிறுமியின் தந்தை, தாய் ஆகியோர் பாகிஸ்தான் நீதித்துறைக்குக் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here