60 கிலோ பித்தளையை ஐயாயிரம் ரூபாவிற்கு வாங்கினார்களாம்: திருடர்களிற்கு விளக்கமறியல்!

திருடப்பட்ட பெருமளவு பித்தளைப் பொருள்களுடன் யாழ்ப்பாணம் சங்கிலியன் வீதியில் வைத்து மக்களால் பிடிக்கப்பட்ட திருடர்கள் இருவரையும் வரும் 22ஆம் திகதி திங்கட்கிழமை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

நேற்று பொதுமக்களால் கையும்மெய்யுமாக பிடிக்கப்பட்ட இரண்டு திருடர்களும் இன்று புதன்கிழமை மாலை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

“60 கிலோ பித்தளையை 5 ஆயிரம் ரூபாவுக்கு வாங்கிக்கொண்டு வந்தார்கள். அதன்போதே இளைஞர்கள் இருவரை சிலர் பிடித்து தாக்குதல் நடத்தினர். சந்தேகநபர்கள் திருடர்கள் கிடையாது” என்று சந்தேகநபர்கள் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி மன்றுரைத்தார்.

“60 கிலோ பித்தளையை 5 ஆயிரம் ரூபாவுக்கு எங்கே வாங்க முடியும்? என்று கேள்வி எழுப்பிய மன்று, சட்டத்தரணியின் சமர்ப்பணத்தை நிராகரித்து சந்தேகநபர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம்,திருநெல்வேலி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் அண்மைய நாள்களாக திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றன.

இந்தத் திருட்டுக்களின் போது அந்தப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களின் பதிவுகளை ஆராய்ந்து திருடர்களை அடையாளம் கண்டுவைத்திருந்த திருநெல்வேலி, நல்லூர் இளைஞர்கள், திருடர்கள் வசமாக மாட்டுவார்கள் எனக் காத்திருந்தனர்.

இந்த நிலையில் நல்லூர் சங்கிலியன் வீதிப் பகுதியில் நடமாடிய 4 பேர், அந்தப் பகுதி இளைஞர்களால் விசாரிக்கப்பட்டனர். அவர்களிடமிருந்த பையைச் சோதனையிட்ட போது, அதற்குள் பெருமளவு பித்தளைப் பொருள்கள் இருந்தன.

இதன்போது 2 பேர் தப்பி ஓட்டம் எடுத்தனர். ஏனைய இருவரும் இளைஞர்களால் பிடிக்கப்பட்டு கட்டிவைக்கப்பட்டனர்.

அவர்களிடம் மீட்கப்பட்ட பித்தளைப் பொருள்கள் நல்லூர் பகுதியில் திருடப்பட்டவை என அடையாளம் காணப்பட்டன. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்குத் தகவல் வழக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்திருந்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here