லீனா மணிமேகலையை பத்து நாள் ஜெயிலுக்கு அனுப்புங்கள்: ஆதாரத்தை வெளியிட்ட சுசி கணேசன்!

நான் தவறு செய்திருந்தால் என்னைத் தூக்கில் தொங்கவிடுங்கள் என பரபரப்பாகப் பேசியுள்ளார் இயக்குநர் சுசி கணேசன். அத்துடன் லீனா மணிமேகலை பொய் சொல்கிறார் என்பதற்கான ஆதாரங்களையும் முன்வைத்தார்.

இயக்குநர் சுசி கணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார் கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை.

இதுகுறித்து நேற்று (அக்டோபர் 16) மாலை பத்திரிகையாளர்களைச் சந்தித்த சுசி கணேசன், “அவர் என்னை இண்டர்வியூ எடுத்தது 2004-ம் ஆண்டு. ஆனால், அவர் தோராயமாக 2005-ம் ஆண்டு இருக்கும் என்று சொல்கிறார். 2004-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி அரசு விருதை அறிவிக்கிறது. அக்டோபர் மாதம் அவர் சொன்ன இண்டர்வியூ நிகழ்ச்சி எடுக்கப்படுகிறது.

இந்த இண்டர்வியூ நடைபெற்ற 3 மாதங்களுக்குப் பிறகு என்னுடைய ‘வாக்கப்பட்ட பூமி’ நூல் வெளியீட்டு விழாவைத் தொகுத்து வழங்கியவர் லீனா மணிமேகலை. அவர் எழுதிய கவிதைகளைக் காண்பித்து, அவராகவே கேட்டு வாங்கித்தான் அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அன்றைய தினம் அவர் கூறிய சம்பவம் நடந்திருந்தால், மூன்று மாதங்களுக்குப் பிறகு என்னுடைய நூல் வெளியீட்டு விழாவை அவரால் எப்படித் தொகுத்து வழங்க முடியும்?

அவர் அந்த நிகழ்ச்சியில் இருக்கும் புகைப்படம் என்னிடம் இருக்கிறது. அதை உங்களிடம் என்னால் காண்பிக்க முடியும். ஆனால், அதை நான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். எனக்கு இருக்கக்கூடிய ஒரே ஆதாரம் அது மட்டும்தான்.

ஒரு பெண் சொல்லிவிட்டாள் என்பதாலேயே இந்தச் சமூகம் அதை உண்மையென நினைக்கிறது. எனவே, இந்தச் சமூகத்துக்கு நான் என்ன சொன்னாலும் மண்டையில் ஏறாது. ஏனென்றால் இந்தச் சமூகம் அப்படித்தான்.

அவர்களுக்கு ஒட்டுக் கேட்பது பிடிக்கும். இதுமாதிரியான கதைகளைக் கேட்பது பிடிக்கும். உண்மை எது, பொய் எது என்று தெரியாது. அதனால், சமூகத்துக்காக இந்த விளக்கத்தைச் சொல்லவில்லை. ‘என் அப்பா நியாயமானவர், அவர் நிச்சயம் தப்பு பண்ணியிருக்க மாட்டார்’ என என் பிள்ளைகளுக்குத் தெரிய வேண்டும். வேறு யாருக்கும் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

இந்த விஷயம் உண்மையென்றால், நீதிமன்றம் என்னைக் கண்டித்தது என்றால் இந்த இடத்திலேயே என்னைத் தூக்கில் தொங்க விடுங்கள். ஆனால், அந்தப் பெண் மீது தவறென்றால், குறைந்தது 10 நாட்களாவது ஜெயிலுக்கு அனுப்புங்கள். அப்போதுதான் இதுபோன்ற பெண்களுக்குப் பாடமாக அமையும்.

இதுபோன்ற குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களில், தமிழ்நாட்டில் முதன்முறையாக நான் தான் முதலில் சென்று போலீஸில் புகார் அளித்துள்ளேன். ஆன்லைன் மூலம் இந்தப் புகாரை அளித்துள்ளேன். நீங்கள் பேசுகிற பெண்ணியம் உள்ளிட்ட எல்லாவற்றையும் நீதிமன்றத்தில் வந்து நிரூபியுங்கள். நான் நல்லவனா, கெட்டவனா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும்” என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here