சபரிமலையில் போராட்டம் தீவிரம்: நிலக்கலில் பக்தர்கள் மீது தடியடி, பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்

நிலக்கல் பகுதியில் குவிந்துள்ள பக்தர்கள், போராட்டக்காரர்கள்

உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து, சபரிமலைக்குச் செல்ல முயன்ற பெண் பக்தர்கள் இன்று நிலக்கலில் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். செய்தி சேகரிக்கச் சென்ற பெண் நிருபர்கள் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டனர்.

இன்னும் 2 மணிநேரத்தில் சபரிமலை நடை திறக்கப்பட இருப்பதால், நிலக்கல், பம்பையில் போலீஸார் குவிக்கப்பட்டு, பெரும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து, அனைத்து வயதுள்ள பெண்களும் சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்தத் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து பக்தர்களும், பந்தள மன்னர், பாஜகவினர், பெண்கள் கடந்த ஒருவாரத்துக்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று மாலை மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட உள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பின் கோயில் நடை திறக்கப்படுவதால், பெண் பக்தர்கள் தடையின்றி வருவதற்குக் கேரள அரசு தீவிரமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. ஆனால், 10 வயது முதல் 50வயதுள்ள பெண்களை அனுமதிக்க மறுத்த போராட்டக்காரர்கள் நிலக்கல், பம்பையில் காலை முதல் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நிலக்கலில் காரில் வந்த பெண் பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இரு தனியார் செய்தி சேனல்கள் சார்பில் செய்தி சேகரிக்க வந்த பெண் பத்திரிகையாளர்கள் பம்பைக்கு வந்தனர். அவர்களைப் போராட்டக்காரர்கள் சூழ்ந்து கொண்டு பம்பையில் இருந்து சபரிமலைக்குச் செல்ல அனுமதி மறுத்துவிட்டனர், சிலர் அந்தப் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்பட்டது. இதனால், போலீஸார் தலையிட்டு அந்தப் பத்திரிகையாளர்களை பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

ஆங்கில இணையதளத்தில் இருந்து ஒரு பெண் நிருபர் செய்தி சேகரிக்கக் கேரள அரசுப் பேருந்தில் சென்றார். அந்தப் பெண் சபரிமலைக்குச் செல்வதற்காக பம்பைப் பேருந்தில் ஏறியபோது அவர் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார்.

நிலக்கல், பம்பையில் குவிந்துள்ள பக்தர்கள் அரசுப் பேருந்து மீதும், போலீஸார் வாகனங்கள் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதினர். இதனால், போலீஸார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி அங்கிருந்து கலைத்தனர். இதனால் சிறிது நேரம் அங்குப் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here