என்னது…சயந்தனின் ஏரியாவிற்குள் ஜெயசேகரம்தான் சிக்கலை தீர்த்தாரா?

மீசாலையில் தொழில்நுட்பக்கல்லூரி அமைப்பதற்கான காணி வழங்குவதில் நீடித்த இழுபறிக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. காணியை விடுவிக்க நீண்ட தயக்கம் காட்டிய வடக்கு கல்வியமைச்சு, இப்பொழுது காணியை விடுவித்துள்ளது.

தென்மராட்சியில் 560 ரூபா மில்லியன் ரூபா செலவில் தொழில்நுட்பக் கல்லூரியொன்றை அமைப்பதற்கு கடந்த வருடம் அமைச்சரவை அனுமதியளித்தது.

யாழ் மாவட்டத்தில் இருந்து தொழில் பயிற்சிக் கல்விக்காக வருடாந்தம் 8,000 வரையான விண்ணப்பங்கள் அனுப்பப்படுகின்றன. எனினும், அதில் 1,500 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்க யாழ் தொழில்நுட்ப கல்லூரியில் வசதிகள் உள்ளன. இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்யவே, தென்மராட்சியில் இன்னொரு தொழில்நுட்ப கல்லூரிக்கான முயற்சி ஆரம்பிக்கப்பட்டது.

மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் இதற்கான இடமும் சிபாரிசு செய்யப்பட்டிருந்தது.

தொழில்நுட்ப கல்வி பயிற்சி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தால் இந்த வருட ஆரம்பத்தில்  சாவகச்சேரி பிரதேச செயலாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. மீசாலையில் குறித்த காணியை முறைப்படி பெற்றுத் தரும்படி அதில் கோரப்பட்டிருந்தது.

இந்த வருட ஆரம்பத்திலேயே, மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கு பிரதேச செயலாளரால் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டது. தொழில்நுட்ப கல்லுரிக்கு காணியை வழங்குவதற்கு பாடசாலை அறங்காப்பு சபை இந்த வருடம் மார்ச் மாதம் அனுமதித்தது. அடுத்த கட்ட நடவடிக்கைக்காக வலய கல்விப்பணிப்பாளர் ஊடாக மாகாண கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மாகாண கல்விப் பணிப்பாளர் சிபாரிசுடன், மாகாண கல்வியமைச்சிற்கு அங்கீகாரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனினும், மாகாண கல்வியமைச்சு அனுமதி வழங்காமல் இருந்தது.

இரண்டு வருடங்களிற்குள் தொழில்நுட்ப கல்லூரியை அமைக்க வேண்டும் என்ற நிலையில், அனுமதி இழுபறி ஏற்பட்டதையடுத்து, வடமாகாணசபை உறுப்பினர்  ஜெயசேகரம், மாகாணசபையில் இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டியிருந்தார். அத்துடன், கடந்த வாரம் கல்வியமைச்சின் செயலாளருடன் நேரில் சென்று கலந்துரையாடினார்.

இதையடுத்து இம்மாதம் 08ம் திகதி, மேற்படி காணியை விடுவிக்கும் கடிதத்தை சாவகச்சேரி பிரதேசசெயலாளருக்கு, கல்வியமைச்சின் செயலாளர் அனுப்பி வைத்துள்ளார்.

இதையடுத்து, தொழில்நுட்ப கல்லூரி அமைப்பதற்கான காணியை பெறுவதில் இருந்த இழுபறிகள் முடிவுக்கு வந்துள்ளன.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here