மட்டக்களப்பில் சமுர்த்தி மோசடி: எட்டு உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் எட்டு சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பணியிலிருந்து இடைநீக்கப்பட்டுள்ளார்கள். மட்டக்களப்பு சமுர்த்தி திணைக்களம் தொடர்பில் பல ஆதாரபூர்வ குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து சுமத்தப்பட்டு வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படவுள்ள குறித்த எட்டு சமுர்த்தி உத்தியோகதர்களும், நேற்று (16)ம் திகதியிலிருந்து இடைநீக்கப்பட்டுள்ளார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் பலர் 2011ஆம் ஆண்டில் இருந்து பல மோசடிகளில் ஈடுபட்டிருந்தனர். வாழ்வாதார உதவி வழங்கல், கடன் வழங்கல் போன்றவற்றில் இந்த மோசடிகள் நடந்தன.

இந்த மோசடிகள் குறித்த தமிழ்பக்கமும் பல ஆதாரங்களை வெளியிட்டு, மோசடியாளர்களை அம்பலப்படுத்தியிருந்தது. எனினும், முன்னைய மாவட்ட செயலாளர், சமுர்த்திப்பணிப்பாளர் இந்த மோசடியாளர்களையெல்லாம் பாதுகாத்து வந்தனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக நிலவியது. எனினும், தொடர்ந்து ஆதாரங்கள் வெளியாகிக் கொண்டேயிருந்தன.

இந்தநிலையில், கணக்காய்வாளர் திணைக்களத்தின் விசாரணை அறிக்கையின்படி மோசடியில் ஈடுபட்டவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டவர்களை, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம், இடைநிறுத்தம் செய்துள்ளது.

ஓட்டமாவடி பிரதேசசெயலகத்தின் சமுர்த்தி முகாமையாளர் எம்.ஐ.எம்.இசாக், அந்த பிரதேசசெயலகத்தில் பணியாற்றிய சமுர்தி உத்தியோகத்தர்கள் ஜே.உனைஸ்,  எம்.எஸ்.எஸ்.முகைதீன், என்.எம்.எச்.முகமட், ஏ.பி.எஸ்.பஸீர், எம்.எச்.ரவூப் ஆகியோரும், வாகரை பிரதேசசெயலகத்தில் கடமையாற்றிய சமுர்த்தி உத்தியோகத்தர் அசோகலிங்கம், வாழைசேனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய சமுர்த்தி உத்தியோகத்தர் ஜெயகாந்தன் ஆகியோரே இடைநீக்கப்பட்டுள்ளனர்.

பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட எம்.ஐ.எம்.இசாக், ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் சமுர்த்தி முகாமையாளராக கடமையாற்றியவர். முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரின் நெருங்கிய உறவினரான இவர், முன்னாள் மட்டு அரசாங்க அதிபர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோது, அதை நிராகரித்து சில அரச உத்தியோகத்தர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இவர் முக்கிய பங்காற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here