ஜனாதிபதியை கொல்ல முயன்றது றோ உளவுப்பிரிவா?: மோடியிடம் நேரில் முறையிட தயாராகும் மைத்திரி!

கொழும்புதுறைமுகத்தை இந்தியாவிடம் கையளிக்கும் ஐ.தே.கவின் திட்டத்திற்கு, ஜனாதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார். நேற்று (16) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே ஐ.தே.கவின் திட்டத்திற்கு ஜனாதிபதி வேட்டு வைத்துள்ளார்.

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனைக்கான கொள்கலன் தொகுதியை அமைப்பது தொடர்பான அமைச்சரவை பத்திரம் நேற்று விவாதிக்கப்பட்டபோதே ஜனாதிபதி இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார்.

கொள்கலன் அமைக்கும் பணியை இந்தியாவிடம் வழங்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் வலியுறுத்திய போதும், ஜனாதிபதி அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கும், கொழும்பு துறைமுகத்தை இந்தியாவிற்கும் வழங்கினால், இருநாடுகளிற்கிடையிலுமான யுத்தம் ஒன்று ஏற்பட்டால் இலங்கையின் கதி என்னவாகுமென்றும் ஜனாதிபதி கேள்வியெழுப்பியுள்ளார்.

அண்மையில் பிம்ஸ்டெக் மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியை சந்தித்தபோது, இதை அவருக்கு புரிய வைத்தேன், அவர் அதை ஏற்றுக்கொண்டார் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

விரைவில் இந்திய பயணம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்து பேச திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக கொழும்பு துறைமுக கொள்கலன் அமைக்கும் பணியை இந்தியாவிடம் கையளிக்கும் முடிவை அமைச்சரவையில் எடுத்தால், அது தொடர்பில் இந்திய பிரதமருடன் நேரில் பேசி, உடன்பாடுகளை இறுதிசெய்ய பிரதமர் திட்டமிட்டிருந்த நிலையில், ஜனாதிபதியின் மறுப்பு சிக்கலை தோற்றுவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில், தன்மீதான கொலை சதி முயற்சியின் பின்னணியில் இந்திய உளவு அமைப்பான றோ இருப்பதாக ஜனாதிபதி பகிரங்கமாக குற்றம் சுமத்தியிருக்கிறார்.

பொலிஸ் திணைக்களம் குறித்து கடுமையான குற்றச்சாட்டை சுமத்திய ஜனாதிபதி, தன்னை கொலை செய்ய நடந்த சதி முயற்சிகள் பற்றி வெளியான செய்திகளிற்கு என்ன நடந்தது என்றும் கேள்வி கேட்டு, பிரதமரையும், ஐ.தே.க அமைச்சர்களையும் சங்கடப்படுத்தியிருக்கிறார்.

மஹிந்த தரப்புடன் இணைந்து இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்க ஜனாதிபதி முயன்று வரும் நிலையில், அதை சீர்குலைக்க இந்திய உளவுப்பிரிவு – றோ- முயற்சிப்பதாக ஜனாதிபதிக்கு இலங்கை உளவுப்பிரிவின் இரகசிய அறிக்கைகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி கொலை சதி முயற்சியை வெளியிட்ட நாமல் குமாரவின் வீட்டிற்கு மனநிலை சரியென கூறப்படும் இந்தியர் சென்றது, ஜனாதிபதி செயலக அதிகாரிகளை அண்மையில் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் சிக்க வைத்தது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை றோ பின்னணியில் இருந்து இயக்கியதாக உறுதியான ஆதாரங்களுடன் உளவுப்பிரிவு ஜனாதிபதிக்கு அறிக்கையளித்துள்ளது.

ஐ.தே.கவை பின்னணியில் இருந்து இயக்கி, தனக்கெதிராக றோ செயற்படுவதாக கருதுவதால், விரைவில் இந்திய பிரதமரிடம் இது குறித்து முறையிடுவதென ஜனாதிபதி மைத்திரிபால தீர்மானித்துள்ளதாக கொழும்பு செய்திகள் குறிப்பிடுகின்றன.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here