அனந்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முறையற்றது: சட்டத்தரணி ஆட்சேபணை!

வடக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் மீது முறையற்ற விதத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய மூத்த சட்டத்தரணி கே.வி.எஸ்.கணேசராஜா, அவர் மீதான குற்றச்சாட்டுக்களை இரத்து செய்ய வேண்டுமென மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆட்சேபணை செய்தார்.

வடக்கு அமைச்சரவையிலிருந்து பா.டெனீஸ்வரனை நீக்கியதற்கு எதிராக டெனீஸ்வரன் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த தவறியமைக்கான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, மற்றும் டெனீஸ்வரனை பதவிநீக்கம் செய்த வழக்குகளில் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள வடக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் சார்பில் நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.எஸ்.கணேசராஜா முன்னிலையாகி இந்த ஆட்சேபணையை முன்வைத்தார்.

நேற்று (16) மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதியரசர்கள் ஜனக டி சில்வா, கே.கே.விக்கிரமசிங்க ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

முதலாவது பிரதிவாதியான வடக்கு முதலமைச்சர் சார்பிலான ஆட்சேபணை கடந்த அமர்வில் முன்வைக்கப்பட்டது. பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள மற்றைய இரண்டு அமைச்சர்கள் சார்பிலும் நேற்று ஆட்சேபணை முன்வைக்கப்பட்டது.

அனந்தி சசிதரன் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கே.வி.எஸ்.கணேசராஜா-

“இந்த வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் முறைப்பாட்டாளர் தான் அமைச்சராக பதவியில் நீடிப்பதற்கு தடைசெய்ய வேண்டாமென்றும் கூறப்பட்டுள்ளது. நாங்கள் இதை தடுக்கவில்லை. முறைப்பாட்டாளருக்கு வடக்கு மாகாணசபையால் வழங்கப்பட்ட உத்தரவில் அவரது பொறுப்புக்களை, அவரிடம் இருக்கும் ஆவணங்களை ஒப்படைக்குமாறு கூறப்பட்டுள்ளது. ஆனால் அவர் அதை மறுத்திருந்தார். இந்தநிலையில், அனந்தி சசிதரன் அமைச்சராக இருப்பதற்கு தடைவிதிக்குமாறும் கோரப்பட்டுள்ளது. அவர் வேறுசில துறைகளிற்கும் அமைச்சராக இருக்கும் நிலையில் அவரது அமைச்சு பதவியை தடைசெய்ய கோருவது ஏற்புடையதல்ல.

அத்துடன் குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய அமைச்சு பதவிக்கான கடித தலைப்பு மாத்திரமே அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கில் எனது தரப்பினர் வேண்டுமென்றே இணைக்கப்பட்டிருக்கிறார் என்றே கூற முடியும்.

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் வழக்கு தொடர்வதாக இருந்தால், ஏற்கனவே நீதிமன்றத்தில் கூறப்பட்ட அல்லது சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பாகவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை தொடர முடியும். ஆனால் இந்த வழக்கில் புதிதாக சில விடயங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அவை ஏற்புடையதல்ல.

மொழிப்பிரச்சனையையும் கருத்தில் கொள்ள வேண்டும். நீதிமன்ற நடவடிக்கைகளின் போது சம்பந்தப்பட்டவர்களிற்கு பரிட்சயமான மொழியில் ஆவணங்கள் அனுப்பி வைக்க வேண்டும். குற்றவியல் விடயங்களுடன் தொடர்புபட்டுள்ள நிலையில் பரிட்சயமான மொழியில் அவற்றை சமர்ப்பிப்பதே சரியானது. பிரதிவாதி வேறு இடங்களில் பிறபாஷைகளில் உரையாடியமையை இந்த விடயத்தில் கவனத்தில் கொள்ள முடியாது. அது பிரச்சனைக்குரிய விடயமும் அல்ல.

இந்த வழக்கில் அனந்தி சசிதரன் வேண்டுமென்றே இணைக்கப்பட்டிருப்பதாலும், முறையற்ற விதத்தில் புதியதொரு விடயத்தில் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை சுமத்தியிருப்பதாலும், வழக்கு ஆவணங்களை பரிட்சயமான மொழியில் வழங்க தவறியிருப்பதாலும் அவர் மீதான குற்றச்சாட்டுக்களை நீதிமன்றம் இரத்து செய்ய வேண்டுமென கோருகிறேன்“ என தனது நீண்ட ஆட்சேபணையை முன்வைத்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here