தமிழ் தேசிய மக்கள் முன்னணி பிரதேசசபை உறுப்பினருக்கு விளக்கமறியல்; இளைஞனை நையப்புடைத்தாரா?: சிசிரிவி காட்சிகள்!

இளைஞன் ஒருரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் உள்பட 6 பேரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

ஏழாலை மகா வித்தியாலய சூழலில் நின்ற கும்பல் ஒன்று சகோதரர்கள் இருவரை இரும்புக் கம்பிகளால் தாக்கியது என்று தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது. சம்பவத்தில் செல்வராசா அரவிந்தன் (வயது -25), செல்வராசா சஜீவன் (வயது -19) ஆகிய சகோதரர்கள் இருவரே படுகாயமடைந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர்.

இந்த மோதல் சம்பவம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் சிவரூபன் லகிந்தனும் தனியான முறைப்பாடு ஒன்றை தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் வழங்கினார்.

இருதரப்பு முறைப்பாடுகளையும் ஏற்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வலி. தெற்குப் பிரதேச சபை உறுப்பினர் சிவரூபன் லகிந்தன், அவரது சகபாடிகள் மூவர் மற்றும் காயமடைந்தவர்களில் ஒருவர் மற்றும் அவரது நண்பர் என 6 பேரை நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

சந்தேகநபர்கள் 6 பேரும் மல்லாகம் நீதிவான் ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் நேற்று மாலை முற்படுத்தப்பட்டனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் உள்பட சந்தேகநபர்கள் 4 பேர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்யுசிங்கம், சட்டத்தரணிகள் விஸ்வலிங்கம் மணிவண்ணன், சுகாஷ், றோய், சுபாஷ் ஆகியோர் முன்னிலையாகினர்.

காயமடைந்த சகோதரர்களில் ஒருவர் மற்றும் அவரது நண்பர் சார்பில் சர்மினி விக்னேஸ்வரன் முன்னிலையானார்.

“சந்தேகநபர்கள் இளைஞர்கள் இருவரையும் இரும்புக் கம்பிகளால் தாக்கியுள்ளார். அவர்கள் இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 300ஆம் பிரிவின் கீழ் கொலை எத்தனிப்பைச் செய்துள்ளார் என்பது புலனாகின்றது. அதனால் அவர்கள் நால்வர் மீதும் கொலை முயற்சிக் குற்றச்சாட்டை முன்வைத்து வழக்கு விசாரணையை முன்னெடுக்கவேண்டும்” என்று சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் மன்றில் விண்ணப்பம் செய்தார்.

அவரின் விண்ணப்பத்துக்கு ஆட்சேபனை தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணிகள் குழாம், சந்தேகநபருக்கு பிணை வழங்கவேண்டும் என்று சமர்ப்பணம் செய்தனர்.

இரு தரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா, சந்கேதநபர்கள் 6 பேரையும் வரும் 29ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இதேவேளை, காயமடைந்த சகோதரர்களில் ஒருவரை மோதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று முற்படுத்திய பொலிஸார், மற்றைய சகோதரர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகிறார் என்று குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்த தாக்குதல் சம்பவ சூழ்நிலை குறித்த சிசிரிவி கமரா காட்சிகளை தமிழ்பக்கம் பெற்றுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் உள்ளிட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்ட ஆறுபேரும், தாக்கப்பட்ட இளைஞனுடன் முரண்படும் வீடியோ காட்சிகள் பதிவாகியுள்ளன. அந்த இடத்திலிருந்து பிறிதொரு இடத்திற்கு அழைத்து சென்றே தாக்கப்பட்டதாக, காயமடைந்தவர்கள் வாக்குமூலமளித்துள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here