யாழில் இராணுவத்திற்கும் மீள்குடியமர்வா?: உயர்மட்ட கூட்டத்தில் சர்ச்சை!

வலி வடக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. மீண்டும் சந்திப்பதென முடிவாகியுள்ளது.

வலிவடக்கிலுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. தமிழரசுக்கட்சியின் மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், ஐ.தே.கவின் விஜயகலா மகேஸ்வரன் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், யாழ் மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி, கடல் மற்றும் விமானப்படை தளபதிகளும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

மற்றும் யாழ் மாவட்ட செயலக அதிகாரிகள், பிரதேச செயலாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

காணிகளை விடுவிப்பதெனில் இராணுவ முகாம்களை அகற்ற நிதி தேவை, மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக நிதி ஒதுக்கப்பட வேண்டுமென இராணுவம் வலியுறுத்தியுள்ளது.

எனினும், மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டால், இராணுவமும் மீள்குடியேற்றம் செய்யப்படுவதாக அர்த்தப்படும் என்பதால், இராணுவ முகாம் அகற்றல், மீள அமைத்தலிற்கு பாதுகாப்பு அமைச்சின் ஊடாகவே நிதி ஒதுக்கப்பட வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பு தரப்பினால் வலியுறுத்தப்பட்டது.

வடக்கு ஆளுனர் நாடு திரும்பியதும் இம்மாத இறுதியில் மீண்டும் சந்தித்து பேசுவதென்றும், அடுத்த மாதம் ஜனாதிபதி சந்தித்து படை முகாம்களை அகற்றுவதற்கு நிதி கோருவதென்றும் முடிவானது.

இதேவேளை, இந்த கூட்டத்தில் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என அரச அதிபர் அனுப்பிய அழைப்பில் குறிப்பிடப்பட்டிருந்த போதும், தமிழரசுக்கட்சி, ஐதேக தவிர்ந்த மற்றைய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லையென்பதை தமிழ்பக்கம் அறிந்திருந்தது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here