ஒப்ரோபர் 13 காலை… அநுராதபுரம் சிறைச்சாலை… மாவை, அரசியல்கைதிகள்: நடந்தது என்ன?

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் முடிக்கப்பட்ட விதம், அன்றைய தினத்தில் நடந்தது என்ன என்பது தொடர்பான தகவல்களை தமிழ் பக்கம் திரட்டியுள்ளது.

நடைபயணம் சென்ற பல்கலைகழக மாணவர்கள் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று சேர்வதற்கு முன்பாகவே, அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் முடித்து விட்டார்கள் என்றும், அரசியல் கைதிகள் விவகாரத்தில் முடிவில்லையேல் வரவு செலவு திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதாக மாவை சேனாதிராசா கூறியதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால், இந்த தகவல்கள் “மிக நுணுக்கமாக“ சரியானவை அல்ல.

அப்படியானால், அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் நடந்தது என்ன? அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டதன் பின்னணி என்ன? இதைப்பற்றி கடந்த சில நாட்களாக தமிழ்பக்கம் திரட்டிய தகவல்களை தருகிறோம்.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பல்கலைகழக மாணவர்கள் மேற்கொண்ட நடைபயணம் கடந்த 13ம் திகதி அநுராதபுரத்தை சென்றடைந்தது. மதியளமவில் சிறைச்சாலையை சென்றடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காலையிலேயே மாவை சேனாதிராசா அநுராதபுரத்திற்கு சென்றிருந்தார். அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனும் சென்றிருந்தார்.

அரசியல் கைதிகள் சார்பில் சந்திப்பிற்காக மூவர் சென்றிருந்தனர்.

மாவையே பேச்சை ஆரம்பித்துள்ளார். “இன்று அரசியல்கைதிகளின் விவகாரம் வடக்கு கிழக்கில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. உங்களின் பின்னால் முழு தமிழர்களும் நிற்பதை எங்களால் உணரக்கூடியதாக உள்ளது“ என பேச்சை ஆரம்பித்துள்ளார்.

“உங்களை சாக விட முடியாது. நாங்கள் சில முயற்சிகள் எடுக்கிறோம். அவற்றை சொல்லி, உங்கள் உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைக்கவே வந்துள்ளேன்“ என முடித்தார்.

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளது, ஏற்கனவே சில முறை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டது எல்லாவற்றையும் அரசியல் கைதிகள் குறிப்பிட்டனர். இம்முறை தெளிவான முடிவில்லாமல் நிறுத்தப் போவதில்லையென குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது மாவை சேனாதிராசா- “அரசியல் கைதிகள் விடயம் தொடர்பாக வரும் 17ம் திகதி ஜனாதிபதியுடன் முக்கிய சந்திப்பு உள்ளது. பாதுகாப்பு என்ற தலைப்பிலேயே- பாதுகாப்பு தரப்பினரையும் உள்ளடக்கியதாக- இந்த சந்திப்பு நடக்கும். அன்று நாங்கள் அழுத்தம் கொடுப்போம். ஏற்கனவே மைத்திரியை சந்தித்து பேசிய போது உங்களை விடுவிக்க இணக்கம் தெரிவித்திருந்தார். பாதுகாப்பு தரப்பினரையும் உள்ளடக்கியதாக அந்த பேச்சு இருக்க வேண்டுமென்பதற்காகவே 17ம் திகதி அந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எங்களை நம்புங்கள். நீங்கள் உயிருடன் இருந்தால்தான் விடுவிக்கும் முயற்சியையும் எடுக்கலாம். அரசியல்கைதிகளை விடுவிக்காவிட்டால் நாங்கள் வரவு செலவு திட்டத்தையும் எதிர்க்க தயங்கமாட்டோம்“ என மாவை குறிப்பிட்டார்.

இதன்போது, அரசியல் கைதிகள் ஒரு வாக்குறுதியை கேட்டுள்ளனர். “வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதாக கூறியிருக்கிறீர்கள். சரி. அதை நீங்கள் ஒரு பகிரங்க அறிக்கையாக வெளியிட வேண்டும்“ என கேட்டனர்.

மாவை அதற்கு சம்மதித்தார்.

இதன்பின்னர் அரசியல்கைதிகள் தரப்பிலிருந்து- “சரி உங்கள் வாக்குறுதியையும் நம்பி நாங்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுகிறோம். ஆனால் இப்பொழுது கைவிடுவது பொறுத்தமற்றது. ஏனெனில் எமக்காக பல்கலைகழக மாணவர்கள் நடந்து வருகிறார்கள். எல்லோரும் ஒன்றாக வந்து கேட்டபோது உண்ணாவிரதத்தை கைவிடுவதாக செய்யலாம். நீங்கள் இப்போது போய், பல்கலைகழக மாணவர்களுடன் சேர்ந்து வாருஙகள்“ என கூறப்பட்டது.

“சரி நான் பல்கலைகழக மாணவர்களுடன் பேசி செய்கிறேன்“ என மாவை பதிலளித்திருந்தார்.

இதுதான் அரசியல்கைதிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டதாக கூறப்பட்ட அன்று நடந்த சம்பவம்.

அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து திரும்பிய மாவை சேனாதிராசா, வழியில் நடைபயணத்தை மேற்கொண்ட பல்கலைகழக மாணவர்களை சந்தித்தார். வாகனத்தில் இருந்து இறங்கி ஒரு ஓரமாக- வீதியின் மறுகரை- நின்று பார்வையிட்டு விட்டு சென்றார். டக்ளஸ் தேவானந்தாவும் இதேவிதமாக பார்வையிட்டு விட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

எனினும், மாவையுடன் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் மாணவர்களுடன் அநுராதபுரம் வரை சென்றிருந்தார்.

இதேவேளை, நாளை- 17ம் திகதி- நடப்பதாக குறிப்பிடப்படும் சந்திப்பு எது என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமைச்சுக்கள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாதாந்தம் நடப்பது வழக்கம். பாதுகாப்பு அமைச்சின் மாதாந்த ஆலோசனை கூட்டம் நாளை, ஜனாதிபதி தலைமையில் நடக்கவுள்ளது. “பாதுகாப்பு என்ற தலைமையில், உங்கள் விவகாரங்களை ஆராயவுள்ளோம்“ என மாவை சேனாதிராசா அரசியல்கைதிகளிற்கு வாக்களித்தது, பாதுகாப்பு அமைச்சின் வழக்கமான ஆலோசனை கூட்டத்திலா? அல்லது நாளைதினமே விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட பிறிதொரு கூட்டத்திலா என்பது தெரியவில்லை.

நாளை வழக்கமான பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனை கூட்டத்திலேயே அரசியல்கைதிகள் விவகாரம் ஆராயப்படவுள்ளதெனில், அரசியல் கைதிகள் விவகாரத்தில் மைத்திரிபால சிறிசேனா விசேட ஏற்பாடுகள் எதையும் செய்ய தயாராக இல்லையென்பதை புலப்படுத்தும். அரசியல் கைதிகளிற்காக ஒரு சந்திப்பையும் ஏற்பாடு செய்யவும் அவர் தயாராக இல்லையென்பது புலப்படும்.

மைத்திரிதான் அப்படியெனில், அந்த சந்திப்பு குறித்த அதீத எதிர்பார்ப்பை கூட்டமைப்பின் ஒரு சாரரும், சமூக வலைத்தளவாசிகளும் ஏற்படுத்துவது வீணாண நம்பிக்கைச்சிதைவை ஏற்படுத்துவதாக அமையாதா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here