மனநலம் பாதிக்கப்பட்ட மனைவியை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற கணவன்; அல்லோலகல்லோலப்பட்ட பேஸ்புக்: இன்று யாழில் நடந்தது இதுதான்!

யாழில் இன்று இளம் யுவதியொருவர் முச்சக்கர வண்டியில் கடத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவிய செய்தியால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகமானவர்கள் முகப்புத்தகத்தில் பகிர்ந்த நிலையில், அந்த தகவல் தவறானது என பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

நாவற்குழி பாலத்தில் முச்சக்கர வண்டியொன்றிற்குள் இளம் யுவதிகள் இருவரை கையை கட்டி கடத்தி செல்வதை மோட்டார் சைக்கிளில் சென்ற வயதான ஒருவர் அவதானித்ததாகவும், அதையடுத்து அவர் முச்சக்கர வண்டியை துரத்தி சென்றதாகவும், திருநெல்வெலியில் முச்சக்கர வண்டியை நெருங்கிய போது, முச்சக்கர வண்டிக்குள் இருந்தவர்கள் சிறுமியொருவரின் சடடையை கழற்றி துரத்தி சென்றவர் மீது வீசியதாகவும், இதனால் துரத்தி சென்றவர் நிலைகுலைந்து விட்டதாகவும், இந்த சந்தர்ப்பத்தை பாவிதது முச்சக்கர வண்டி தப்பி சென்றதாகவும் செய்தி பரவியது.

இதையடுத்து ஒன்லைனில் தேடி, வாகன சாரதியின் விபரங்களை பெற்று சமூக ஊடகங்களில் வெளியிட்டு, அதிகம் பகிருங்கள் என பரபரப்பை கிளப்பியிருந்தனர்.

இந்த நிலையில், கோப்பாய் பொலிஸ் நிலையத்துடன் தமிழ்பக்கம் தொடர்பு கொண்டு பேசியது. அந்த செய்தியையடுத்து, முச்சக்கர வண்டி சாரதியை கைது செய்து பொலிசார் விசாரணைக்குட்படுத்தினர் என்பதை தெரிவித்தனர்.

“அந்த தகவல் பரவியதையடுத்து சாரதியை உடனடியாக கைது செய்து விசாரித்தோம். குறிப்பிட்ட நபரின் மனைவி மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். கிறிஸ்தவரான அவர், நாவற்குழியில் உள்ள கிறிஸ்தவ போதகர் ஒருவரிடம் சமய சடங்கிற்கு கூட்டிச் சென்றிருக்கிறார்.

அங்கு போன பின்னர் அவருக்கு மேலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு போதகர் ஆலோசனை சொல்லியுள்ளார். போதகர், மகள் ஆகியோருடன் மனநலம் பாதிக்கப்பட்ட மனைவியை பின்னால் இருக்க வைத்த சாரதி, வேகமாக சென்றுள்ளார். அவரை கட்டுப்படுத்த முடியாத நிலைமை வந்தபோது கையை கட்டியுள்ளார்கள்.

குறிப்பிட்ட பகுதியிலுள்ள சிசிரிவி கமராவை ஆய்வு செய்தோம். முச்சக்கரவண்டி அதிவேகமாக தப்பி செல்வதை போலவோ, மோட்டார்சைக்கிள் விரட்டுவதை போலவோ காட்சிகள் பதிவாகவில்லை.

கையை கட்டியிருந்த பாவடை தவறுதலாக வெளியில் வீசப்பட்ட சமயத்தில், பின்னால் விரட்டியதாக சொல்லப்பட்டவர் மீது பட்டிருக்கலாம். ஆனால் பினனால் ஒருவர் விரட்டியதை முச்சக்கர வண்டியில் இருந்த யாரும் தெரிந்திருக்கவில்லை“ என பொலிசார் குறிப்பிட்டனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தற்போது தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here