சுமந்திரனின் ஏக்கிய ராஜ்ஜிய பிழை; எக்ஸத் ரட்டவே சரி… 40,000 சவப்பெட்டியுடன் கஜேந்திரன் தப்பியோடி விட்டார்: டக்ளஸ் செய்தியாளர் சந்திப்பு (வீடியோ)

அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான வழிநடத்தல் குழுவின் இறுதி அமர்வில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா விளக்கமளித்துள்ளார். யாழ் நகரத்தில் உள்ள ஈ.பி.டி.பி தலைமையகத்தில் நேற்று (15) நடந்த செய்தியாளர் சந்திப்பில், இது தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

ஏக்கிய ராஜ்ஜிய என்றால் ஒன்றையாட்சி என்பதே சரி. ஒருமித்த நாடு என்றால் எக்சத் ரட்ட என்றே குறிப்பிடப்பட வேண்டும். சிங்களத்தில் ஏக்கிய ராஜ்ஜிய என குறிப்பிடப்பட்டால் தமிழில் ஒற்றையாட்சியென்றே குறிப்பிட வேண்டும். தமிழில் ஒருமித்த நாடு என்று குறிப்பிடப்பட்டால் சிங்கத்தில் எக்சத் ரட்ட என்றே குறிப்பிட வேண்டும். தமிழ், சிங்கள மக்களை ஏமாற்றும் செயற்பாடு பற்றியே நான் குறிப்பிட்டேன் என்றார்.

இந்த விடயங்களை குறிப்பிடாமல் ஊடகங்கள், ஒரு தலைப்பட்சமாக செய்தி வெளியிட்டதாக குறிப்பிட்டார்.

“தமிழரசுக்கட்சியிடம் போதிய அரசியல் பலம் இருந்தும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவில்லை, அதற்கான நடவடிக்கை எடுக்கப்படில்லை. பரந்துபட்டளவிலான பேச்சு, வேலைத்திட்டங்களின் மூலமே இதை சாதிக்கலாம். ஆனால் தமிழரசுக்கட்சியின் இரண்டு மூன்று பேர் மட்டுமே பேச்சுக்கள், சந்திப்புக்களில் ஈடுபடுகின்றனர்“ என்றார்.

“பல்கலைகழக மாணவர்களின் நடைபவனியின் பின்னணியில் இருந்த, நடைபவனியில் கலந்து கொண்ட கட்சியின் பொதுச்செயலாளர் முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். அவர் ஒருமுறை சொல்லியிருந்தார் 40,000 சவப்பெட்டியை தயார் செய்து வையுங்கள் என. அதை சொல்லிப் போட்டு வெளிநாட்டுக்கு ஓடி ஒளிந்து விட்டார்“ என்றார்.

மாகாணசபை முறைகளின் ஊடாக தீர்வு காணலாமென நாம் கூறி வந்தோம். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதை ஏற்கவில்லை. தும்புக்கட்டையால் கூட அதை தொட மாட்டோம் என்றார்கள். ஈ.பி.டி.பியிடம் மாகாணசபை போகப் போகிறது என்றதும் அவசரப்பட்டு தேர்தலில் போட்டியிட்டார்கள்.

மாகாணசபைக்கு அதிகாரமில்லையென்றார்கள். ஆனால் அதிகார துஷ்பிரயோகம் நடந்ததாக சொல்கிறார்கள். மத்தி நிதியை தரவில்லையென்கிறார்கள். ஆனால் நிதி துஷ்பிரயோகம் நடந்ததென்கிறார்கள். இது எப்படி சாத்தியம்?

மாகாணசபையில் ஒன்றுமில்லை, ஆயுதப் போராட்டத்தால்தான் எதுவும் சாத்தியமென கூறிய கட்சியொன்று இப்பொழுது மாகாணசபை தேர்தலில் போட்டியிட தயாராகிறது என்றும் குறிப்பிட்டார்.

வடமாகாணசபை தேர்தலில் ஈ.பி.டி.பியின் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கும் திட்டம் தன்னிடமிருப்பதாக தெரிவித்தார். கடந்த வடமாகாணசபை தேர்தலில் ஈ.பி.டி.பி ஆட்சியை பிடித்திருந்தால், ஒருவரை பதவிவிலக செய்து விட்டு, மாகாணசபையை பொறுப்பேற்றிருப்பேன். மாகாணசபையுடாக பல விடயங்களை செய்யலாம். மத்திய அரசியல் தங்கியிருக்க வேண்டிய அவசியம் இல்லையென குறிப்பிட்டார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here