டி.எம்.எஸ் இற்கு பதிலாக என்னையே பாடச்சொன்ன எம்.ஜி.ஆர்: இளையராஜா நினைவுகள்!

எம்ஜிஆர் உடனான நினைவுகளை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார் இளையராஜா.

இளையராஜாவின் 75வது பிறந்தநாள், தனியார் கல்லூரி சார்பில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாடினார் இளையராஜா.இதன்போது நிறைய பாடல்களைப் பாடிக்காட்டினார். தன் இசையனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது: இங்கே, பரிட்சை எழுதும் மாணவனோட மனநிலையில்தான் நிற்கிறேன். என்ன பேசுவதென்றெல்லாம் யோசித்துக்கொண்டு வரவில்லை. இங்கே இந்தக் கல்லூரி ஆர்ட் அண்ட் சயின்ஸ். ஆனா, ஆர்ட் மட்டும்தான் இருக்குது இப்போ. அதேசமயம் எல்லாரோட ஹார்ட்டும் இங்கேதான் இருக்கு. ஆர்ட்ல ஹார்ட் இல்லேன்னா, அது ஆர்ட்டே இல்ல.

ஆயிரம் படங்கள் தாண்டியாச்சு. இன்னும் படங்களும் பண்ணியாச்சு. இதோ.. இப்பவும் அடுத்த படத்துக்கான வேலைகள் நடந்துக்கிட்டிருக்கு. எந்தவொரு பாட்டு கம்போஸிங்குமே மூணு நிமிஷத்துக்கு மேல நான் எடுத்துக்கிட்டதே இல்ல. எந்தப் பாட்டா இருந்தாலும் மூணு நிமிஷத்துக்குள்ளே கம்போஸ் பண்ணி முடிச்சிருவேன்.

இந்தக் கல்லூரி ஒருகாலத்துல ஸ்டூடியோவா இருந்துச்சு. இங்கே எம்ஜிஆரோட எத்தனையோ படங்கள் ஷூட்டிங் நடந்திருக்கு. அந்த எம்ஜிஆருக்கு ரொம்ப நெருக்கமான இயக்குநர் கே.சங்கர். அவரோட படத்துக்கு “ஜனனி ஜனனி“ பாட்டு பண்ணினதும் பாடினதும் இன்னிவரைக்கும் உங்க மனசுக்கு நெருக்கமான பாட்டா இருக்கு.

இந்த சமயத்துல எம்ஜிஆரைப் பத்திச் சொல்லணும். எம்ஜிஆர், கடைசியா நடிச்சு வரவேண்டிய படம் உன்னைவிடமாட்டேன். வந்த படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன். இந்த உன்னை விட மாட்டேன் பாதியிலேயே நின்ன படம்.

இந்தப் படத்துக்கு நான்தான் இசையமைப்பாளர். முதல்ல ஒரு பாட்டு கம்போஸ் பண்ணினோம். டிஎம்எஸ் ஐயா, பாடுனாங்க. ஆனா எம்ஜிஆருக்கு ஏனோ திருப்தி இல்ல. வேற யாரையாவது போட்டு பாடவையுங்கன்னு எம்ஜிஆர் சொன்னார். அது மரியாதையே இல்லியேனு நினைச்சிக்கிட்டே, மலேசியா வாசுதேவனைப் பாடவைச்சேன். அந்தப் பாட்டைக் கேட்டுட்டும் வேணாம், வேற யாரையாவது பாடவைன்னு சொன்னார்.

அப்புறம் தடக்குன்னு, ஏன்… நீயே பாடிருன்னு சொன்னார். அண்ணா, அது நல்லாருக்காது. தப்பாயிரும்ணான்னு சொன்னேன். அதெல்லாம் பரவாயில்ல, பாத்துக்கலாம் நீயே பாடுன்னு சொன்னார் எம்ஜிஆர்.

நான் ரொம்பச் சின்னப்பையன். கிராமத்துக்காரன். அந்தக் குரல், உங்களுக்கு செட்டாகாதுண்ணான்னு சொன்னேன். அதெல்லாம் நான் பாத்துக்கறேன். நீ பாடுன்னு சொன்னார். அப்புறம் நான் பாடினேன்.ஆனா, அந்தப் படம் எடுக்கவே இல்ல.

இவ்வாறு இளையராஜா தெரிவித்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here