இன்று நீதிமன்றில் சுமந்திரன் VS மணிவண்ணன்: சதீஸின் இடைக்கால தடை நீடிப்பு!

வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் கந்தசாமி சதீஸை, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கும் கட்சித் தலைமையின் தீர்மானத்துக்கு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடை இன்றும் மீண்டும் நீடிக்கப்பட்டது.

தமிழ் அரசுக் கட்சி சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், மன்றில் தோன்றி இடைக்கால தடையை நீக்கவேண்டும் என்று வாதத்தை முன்வைத்தார். எனினும் எதிர்மனுதாரரின் சமர்ப்பணம் தொடர்பான கட்டளையை வரும் 29ஆம் திகதி வழங்குவதாக அறிவித்த யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் அன்றுவரை இடைக்கால தடையை நீடித்தது.

தமிழீழ விடுதலைக் கழகம் (ரெலோ) கட்சியைச் சார்ந்த கந்தசாமி சதீஸ், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ரெலோவின் கட்டுப்பாடுகளிலிருந்து விலகிச் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் அந்தக் கட்சியின் பரிந்துரையின் பேரில் சதீஸை தமிழ் அரசுக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து அந்தக் கட்சி நீக்கியது.

இந்த நடவடிக்கையின் ஊடாக அவரை நகர சபை உறுப்புறுமையிலிருந்து நீக்குமாறு யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளருக்கும் தமிழ் அரசுக் கட்சி சார்பில் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழ் அரசுக் கட்சியின் தலைமை எடுத்துள்ள தீர்மானத்துக்கு ஆட்சேபனை தெரிவித்தும் அதனை வெற்றும் வறிதானதுமாக்கும் கட்டளையை வழங்கக் கோரியும் கந்தசாமி சதீஸ் சார்பில் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனால், யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் நீதிப் பேராணை மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

மனுவின் பிரதிவாதிகளாக தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, செயலாளர் கி.துரைராசசிங்கம் மற்றும் பொருளாளர் பொ.கனகசபாபதி ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அந்த மனு கடந்த மாதம் 18ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்ப மாவட்ட நீதிபதி வி.இராமகமலன் கட்டளை வழங்கினார்.

மனுதாரரின் இடைக்கால நிவாரணமான, தமிழ் அரசுக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கும் பிரதிவாதிகளின் அறிவித்தலுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்ற மாவட்ட நீதிமன்றம், 14 நாள்கள் என்ற அடிப்படையில் இரண்டு தடவைகள் இடைக்காலத் தடை உத்தரவை வழங்கியது. மனு மீதான விசாரணை இன்று 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மனு இன்று 15ஆம் திகதி திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றில் தோன்றினார்.

“மனுதாரர் தனது மனுவில் தான் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். அதனால் தமிழ் அரசுக் கட்சியின் நடவடிக்கைக்கு எதிராக வழங்கப்பட்ட கட்டாணையை நீதிமன்றம் நீக்கவேண்டும்” என்று ஜனாதிபதி சட்டத்தரணி நீண்ட வாதத்தை மன்றில் முன்வைத்தார்.

எனினும் மனுதாரர் சார்பான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் இடைக்கால தடை நீடிப்பை மன்றில் வலியுறுத்தி சமர்ப்பணம் செய்தார்.

இருதரப்பு விவாதங்களையும் ஆராய்ந்த யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்ற நீதிபதி வி.இராமகமலன், பிரதிவாதிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனையை ஆராய்ந்து வரும் 29ஆம் திகதி கட்டளை வழங்குவதாக அறிவித்தார். அன்றுவரை மனு மீதான நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டு இடைக்கால தடையை மன்று நீடித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here