விசாரணை கைதி உயிரிழப்பு: 2 உதவி ஆய்வாளர்கள் பணி மாற்றம்

சென்னையில் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 2 உதவி ஆய்வாளர்கள் உள்பட மூன்று பேர் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை வியாசர்பாடி பிவி காலனியை சேர்ந்தவர் கார்த்திக் (27). இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கூட்டாளிகளுடன் கத்தியுடன் சுற்றித் திரிந்த கார்த்திகை பிடித்த மகாகவி பாரதியார் நகர் போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, போலீசார் தாக்கியதில் தான் கார்த்திக் உயிரிழந்து விட்டார் என அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். ஆனால், உடல்நலக் கோளாறு காரணமாகவே அவர் உயிரிழந்தார் என உறவினர்களின் குற்றச்சாட்டுக்கு போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

எனினும், அதை ஏற்க மறுத்த கார்த்திக்கின் உறவினர்கள், அவரது மரணத்திற்கு நீதி கிடைக்காவிட்டால் சடலத்தை வாங்க போவதில்லை என்றும் கூறி வந்தனர். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எம்கேபி நகர் காவல் நிலையம் உள்பட சுற்று வட்டார பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், எம்.கே.பி. நகர் காவல் உதவி ஆய்வாளர்களான ஜெகதீசன், ராஜா, கொடுங்கையூர் காவல் நிலைய காவலர் ஷியாம்சுந்தர் ஆகியோரை ஆயுதப்படை பிரிவுக்கு பணி மாற்றம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here