‘தோழர்களை காப்பாற்ற தோட்டம் செய்தேன்’: சிவசக்தி ஆனந்தன் எழுதுகிறார்!

மக்கள் பிரதிநிதிகள், பொதுவாழ்வில் உள்ளவர்களின் அறியப்படாத பக்கங்களை புரட்டும் பகுதி இது. வாழ்வில் நடந்த… அடிக்கடி நினைக்கும்… மெய்சிலிர்க்கும் நிகழ்வுகளை இந்த பகுதியில் ஒவ்வொரு வாரமும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளார்கள் அவர்கள். மனதின் மூலைக்குள் மறைத்து வைத்திருந்த சம்பவங்களை முதன்முறையாக அவர்கள் எழுத்தில் பேசவுள்ளனர். நீங்கள் இதுவரை கேட்காத கதைகள் இவை. இந்தவாரம் அனுபவங்களை பேசுகிறார் சிவசக்தி ஆனந்தன். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) இயக்கத்தின் முக்கியஸ்தர். நான்குமுறை தொடர்ச்சியாக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றவர். வவுனியாவின் மக்கள் முகம். மக்கள் பிரச்சனைகளில் முதலாவதாக குரல் கொடுப்பதும்… மக்கள் போராட்டங்களில் முன்னணியில் நிற்பதும் இவர் இயல்புகள்.

இந்த பகுதியில் எழுத வேண்டுமென்றபோதுதான் ஒருகணம் நின்று நிதானித்து, கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கிறேன். 1980 களின் நடுப்பகுதியில் தொடங்கி இன்றுவரை இடையறாத போராட்டத்தையே வாழ்க்கையாக கொண்ட நீண்டகாலம் விரிந்து கிடக்கிறது. இதில் எதையெடுப்பது, எதை தவிர்ப்பதென்பது மிகச்சவால்தான். இப்படியான சமயங்களில்தான் கடந்தகாலத்தை அவசரமாகவேனும் திரும்பி பார்க்க ஒரு வாய்ப்பேற்படுகிறது. அந்தவகையில் மகிழ்ச்சிதான்.

சிவசக்தி ஆனந்தன் என்ற எனது பெயரை சிலர் சில வருடங்களாக அறிந்திருக்கலாம். பலர் கடந்த பத்து வருடத்தில்தான் அறிந்திருக்கலாம். வெகுசிலர்தான் 1980களின் நடுப்பகுதியிலிருந்து அறிந்தவர்கள். அப்படியான பல நண்பர்கள் இன்றில்லை. அவர்கள் மக்களின் விடிவிற்காக வீழ்ந்து விட்டார்கள். அந்த முகங்கள் ஒவ்வொன்றையும் நினைவில் நிறுத்திக்கொண்டு, கடந்தகாலத்திற்குள் நுழைகிறேன்.

எனது பிறப்பிடம் வவுனியாவின் சேமமடு. விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். சேமமடு சண்முகானந்தாவில் ஆரம்ப கல்வியை கற்று, பின்னர் காங்கேசன்துறை நடேஸ்வராவில் கல்வி கற்க சென்றேன். அந்தகாலப்பகுதியில் எமது பாடசாலையில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்) உறுப்பினர்கள் சிலர் பிரசாரத்திற்காக வந்து சென்றுள்ளனர். அப்போது நான் மாணவன். அதனால் அந்த பிரசாரங்கள் வேடிக்கையாக மட்டுமிருந்தன.

அந்த சமயத்தில்தான் 1983 கண்ணிவெடி தாக்குதல் நடந்தது. அதன்பின் ஏற்பட்ட நெருக்கடியால் என்னால் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து படிக்க முடியவில்லை. ஊருக்கே திரும்பி சென்றேன். அப்போதுதான் அமெரிக்காவின் புலனாய்வு உளவாளிகளான அலன் தம்பதிகளை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர் பிடித்தனர். அந்த செய்தி அப்போது பரபரப்பாக எல்லோர் மத்தியிலும் பேசப்பட்டது. விசாரணையின் பின் அலன் தம்பதி விடுவிக்கப்பட்டனர். ‘விசாரணைக்காலத்தில் எம்மை ஈழமக்கள் விடுதலை முன்னணியினர் நன்றாக கவனித்து கொண்டனர்’ என விடுதலையின் பின் அலன் தம்பதியினர் சொன்னார்கள். அந்த இயக்கத்தின் மீது எனக்கு ஈர்ப்பை ஏற்படுத்திய சம்பவம் இது.

1984 இல் பூவரசங்குளத்தை சேர்ந்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர் இருவர் எமது ஊருக்கு வருவார்கள். தமது இயக்கம், அதன் அரசியல், இராணுவ பிரிவு, தமிழர்களின் அரசியல் பிரச்சனை என பல விடயங்களை ஊரிலிருந்த இளைஞர்களான எம்முடன் பேசுவார்கள். நாங்கள் அவர்களை நிறைய கேள்விகள் கேட்போம். அவர்களும் சளைக்காமல் விளக்கம் தருவார்கள். உரையாடலில் ஏற்பட்ட திருப்தி, அந்த இயக்கத்தில் இணையலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. இதுதான் நான் ஈ.பி.ஆர்.எல்.எவ் இல் இணைந்த வரலாறு.

புதிதாக இணைபவர்களை யாழ்ப்பாணம் கொண்டு செல்வார்கள். ஈ.ஆர்.எல்.எவ் இன் இந்திய தொடர்பு மாதகல் கடற்கரை வழியாகவே இருந்தது. மாதகல் வழியாக தமிழகம் சென்று பயிற்சிகளை முடித்த பின்னரே, இலங்கைக்கு திரும்பி வந்து இயக்கப்பணிகள் செய்யலாம். வவுனியா, முல்லைத்தீவு பகுதிகளை சேர்ந்த 20 பேர் வரை பயிற்சிக்கு சென்றோம். இரவு 11.30 க்கு படகுப்பயணம் ஆரம்பித்தது. மாதகலில் இருந்து வேதாரண்யத்திற்கு கிட்டத்தட்ட இரண்டு மணித்தியால பயணம். நாங்கள் சென்ற சமயத்தில் அதிக அலை இருந்தது. ஐந்து மணித்தியாலம் பயணம் செய்தோம்.

எனக்கு படகுப் பயணம் புதிது. வாந்தி, தலைசுற்றல் என கிட்டத்தட்ட பாதி மயக்கத்திற்கு போய்விட்டேன். அங்கிருந்து கும்பகோணம் பயிற்சி முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டோம். அங்கு பயிற்சிக்காக ஏராளமானவர்கள் காத்திருந்தார்கள். அங்கு இடமில்லாததால் சேலத்திற்கு அனுப்பினார்கள். அங்கே நைனார் பாளையம் என்ற கிராமத்தில் பண்ணையார் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் எமக்கு பயிற்சியிடம் ஒதுக்கப்பட்டது.

அங்கு சென்ற முதல் அணி நாம்தான். அதனால் பயிற்சி முகாம் அமைக்கும் வேலையும் எம்முடையதுதான். அதுவரை அருகிலிருந்த பாடசாலையொன்றில் தங்கவைக்கப்பட்டோம். பாடசாலை நடக்கும் சமயத்தில் வெளியில் வந்துவிடுவோம். மீண்டும் இரவில் பாடசாலைக்குள் செல்வோம். சிலசமயங்களில் மழையில் நனைந்து கொண்டும் இருப்போம். நாம் போனது கார்த்திகை மாதமென்பதால் அடிக்கடி நனைய வேண்டியிருந்தது. இதனால் பலருக்கு காய்ச்சலும் வந்தது. எனக்கு வெள்ளம், மழை புதிதில்லை. நான் ஒரு மாத குழந்தையாக இருந்தபோதே சூறாவளிக்கால பெருவெள்ளமொன்றில் அம்மாவிடமிருந்து தவறிவிட்டேன். மழைக்கால கும்மிருட்டு சமயமாம் அது. எப்படியோ வெள்ளத்தில் தடவிதடவி அம்மா என்னை காப்பாற்றிவிட்டார். அதனாலோ என்னவோ மழையென்றால் எனக்கு அலாதி பிரியம்.

அப்போது எமது சாப்பாட்டையும் குறிப்பிட வேண்டும். சோறும், கறியும் தயார் செய்வோம். கறியெனப்படுவது, அளவான பரலில் தூள், நீர், 2 கிலோ தக்காளி என்பவற்றை போட்டு கொதிக்க வைப்பதே. இப்படி தங்கியிருந்து பண்ணையாரின் நிலத்தில் பயிற்சி முகாம் அமைத்தோம். 20×100 என்ற அளவில் பெரிய தங்குமிடம் அமைப்பதற்காக மண்சுவர்களை வைத்துவிட்டு, மரம்,தடி, கூரைவேய கரும்புஒலை சேகரிக்க செல்வோம். மாலையில் பாடசாலைக்கு தங்க வருவோம். மீண்டும் மறுநாள் பயிற்சிமுகாம் சென்றால், இரவு பெய்த மழையில் மண்சுவர் இடிந்து விழுந்திருக்கும். மீண்டும் அமைப்போம். பயிற்சிமுகாம் அமைத்தல், பயிற்சியென ஒரு வருடம் ஓடியது.

பயிற்சிமுகாமில்; இரவு, பகலாக கடுமையான பயிற்சியளிக்கப்பட்டது. ‘வந்து சிக்கிக்கொண்டேனோ’ என்று யோசித்த நாட்களுமுண்டு. அவ்வளவு கடுமையான பயிற்சிகள். ஒருமுறை மோட்டார் எறிகணை செலுத்தும் பயிற்சியளிக்கப்பட்டது. எறிகணையை சுடுகுழலில் போட்டபோது மருந்து உள்ளே எரிந்து தீபற்றி, பக்கத்தில் நின்றவர்களிற்கு தீக்காயம் ஏற்பட்டது. நான் பக்கத்தில் நின்றபோதும் நல்லவேளையாக தப்பித்துக் கொண்டேன்.

பயிற்சியின் பின்னர் மீண்டும் மன்னார் ஊடாக வவுனியா வந்து, கன்னாட்டி கணேசபுரத்தில் உள்ள எமது முகாமில் இருந்தேன். எனக்கு தொலைத்தொடர்பாடல் பணியே வழங்கப்பட்டது. இந்தகாலத்தில் இராணுவத்துடன் பலமுறை மோதல்கள் நடந்தது.

எமக்கும் புலிகளிற்குமிடையில் முரண்பாடு உருவானபோது, சக இயக்கங்கள் மீது ஆயதங்களை பாவிக்ககூடாதென எமது தலைமை உத்தரவிட்டிருந்தது. தமிழரும் தமிழரும் அடிபட்டு சாகக்கூடாதென்பதே இயக்க நிலைப்பாடு. அப்போது எமது ஊரில் என்னையும், வேறு சிலரையும் புலிகள் கைது செய்தார்கள். எமது நிலைப்பாட்டை அவர்கள் புரிந்ததன் காரணமாக எமக்குள் சிக்கல் ஏற்படவில்லை.

இதன்பின்னர்தான் எமது கட்சி 1988 மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டது. இனப்பிரச்சனை தீர்வு பேச்சுக்களை பலசுற்றுக்களாக அரசுடன் நடத்தினோம். ஆனால் பலன் கிட்டாததால், 19 அம்ச கோரிக்கையை முன்வைத்து வரதராஜபெருமாள் ஈழக்கோரிக்கையை வைத்துவிட்டு இந்தியா சென்றார்.

இதன்பின்னர் எமது கட்சிக்கும் புலிகளிற்குமிடையில் மீண்டும் முரண்பாடு எழுந்தது. 1990 இல் பலாலியில் இருந்து ஐந்து றோலர்களில் எமது உறுப்பினர்கள் இந்தியா பயணமானார்கள். இதில் மூன்று படகுகளை புலிகள் கைப்பறினர். ஏனைய இரண்டுமே வேதாரணிய கரையை அடைந்தது. அதில் சென்ற நாம் மண்டபம் அகதி முகாமில் தங்கவைக்கப்பட்டோம். அந்த காலப்பகுதியில்தான் பத்மநாபா சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். அன்றிரவு 12 மணிக்கு மண்டபம் அகதிமுகாம் தமிழக பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்டது. அங்கிருந்த 700 பேரையும் புழல் திறந்தவெளி சிறைச்சாலையில் அடைத்தார்கள். அங்கு ஒரு வருடம் இருந்தேன்.

1993 இல் மீண்டும் இலங்கைக்கு திரும்பி வந்தேன். பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு வழங்கப்பட்டிருந்த விடுதியில் தங்கியிருந்து கொண்டு, தோணிக்கல்லில் ஒரு தோட்டம் செய்ய ஆரம்பித்தேன். எம்முடன் பல கட்சி தோழர்கள் இருந்தார்கள். இவர்களின் பராமரிப்பு செலவை தோட்டத்தின் மூலம் சரிசெய்யலாமென்பதே திட்டம். அப்பொழுதே மக்கள் பணிகளையும் ஆரம்பித்தோம்.

2000 இல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட போதும் நான் வெற்றிபெறவில்லை. ஆனால் எனது மக்கள் பணிகள் நிற்கவில்லை. மக்களின் விடிவிற்காக உயிரையும் கொடுக்க தயாரான வாழ்க்கைக்குள் நுழைந்தவர்கள் நாங்கள். அதனால் வன்னியின் கிராமங்கள் ஒவ்வொன்றிலும் என் காலடியிருந்தது. ஒவ்வொரு பிரச்சனையிலும் முதற் குரலாக என் குரல் இருந்தது.

2001, 2004, 2010, 2015 தேர்தல்களில் வெற்றிபெற்றேன். இந்த வெற்றிகளையும், பதவியையும் மக்களின் பிரச்சனையை உலகறிய செய்யும் வழியாகத்தான் பார்க்கிறேன். இப்போதும், காணாமல் போனவர்கள் பிரச்சனை, நிலவிடுவிப்பு, வன்னி பல்கலைகழக விவகாரங்களில் இயன்றதெல்லாம் செய்து வருகிறேன். இவற்றையெல்லாம் பார்க்கும்போது, காலம் எனக்கு தந்த பணியை திருப்தியாக செய்தேன் என்ற நிறைவும் உள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here