துணிக்கடை.. வாட்ச்மேன்- பரியேறும் பெருமாள் வெற்றி!

முதல் படமே முத்தானப் படமாக எத்தனை இயக்குநர்களுக்கு அமையும்? மாரிசெல்வராஜுக்கு அமைந்திருக்கிறது. சமூக சமத்துவத்தின் அவசியத்தை கடைசி ஃப்ரேமில் இரண்டு டீ கிளாஸ்களின் மூலம் சொல்லி, ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் கவனத்தையும் தன் பக்கமாக திருப்பியிருக்கிறார் ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் இயக்குநர்.

இந்தாண்டு கோலிவுட்டின் நம்பிக்கைக்குரியவரான இவர், இயக்குநர் ராமின் சீடர். சிறுகதை மற்றும் கட்டுரைத் தொகுப்புகள் என்று தமிழ் வாசகர்களுக்கு ஏற்கனவே பரிச்சயமானவர்தான். எளிமையே வெல்லும் என்கிற சித்தாந்தத்துக்கு ஏற்ப மிகவும் எளிமையான தோற்றத்தில், சற்று கூச்சமாக, ஆனால் கண்களில் தீர்க்கமான ஒளியுடன் பேச ஆரம்பித்தார் மாரிசெல்வராஜ்.

“இப்போ குடியாத்தத்தில் வசிக்கிறேன். என்னோட மனைவி திவ்யா, இங்கே இருக்கிற ஒரு ஸ்கூலில் டீச்சரா வேலை பார்க்குறாங்க. என்னோட கதைகள், கட்டுரைகளை பத்திரிகைகளில் வாசிச்சி வாசகியா அறிமுகமானாங்க. அவங்க பாராட்டுக் கடிதங்கள் எழுதறதும், நான் பதிலுக்கு நன்றி தெரிவிச்சி எழுதறதுமா பழகினோம். ஒருக்கட்டத்தில் காதலா இந்தப் பழக்கம் மலர்ந்தது. இப்போ எங்க அன்புக்கு சாட்சியமா அழகான குழந்தை இருக்கு.

என்னையும், என்னோட படத்தையும் ரொம்ப சிநேகமா கவனிச்சிக்கிட்டவங்க திவ்யா. எந்த விவாதமா இருந்தாலும், நியாயத்தின் பக்கமா மட்டும்தான் அவங்க பேசுவாங்க. என்னோட சொந்த ஊர், தூத்துக்குடி மாவட்டம் புளியமங்கலம். ரொம்பவும் சாதாரணக் குடும்பம்தான். ‘பரியேறும் பெருமாள்’ மாதிரி நானும் சட்டக்கல்லூரி மாணவன்தான். வறுமை என்னை துரத்து துரத்துன்னு துரத்திச்சி. வேற வழியில்லாமே படிப்பை பாதியில் நிறுத்திட்டு, சென்னைக்கு போய் எப்படியாவது பொழைச்சுக்கலாம்னு ரயில் ஏறினேன்.

இங்கே வந்தப்புறம்தான் வாழ்க்கையை நடத்துறது அத்தனை சுலபமில்லைங்கிற யதார்த்தத்தை உணர்ந்தேன். ஊரை விட்டு வந்துட்டோம். எதுவும் சாதிக்காம என்னோட பிணம்கூட ஊர் பக்கம் போயிடக் கூடாதுன்னு ரொம்ப வைராக்கியத்தோடு வேலை தேட ஆரம்பிச்சேன். பதிமூணு வருஷத்துக்கு முன்னாடி தி.நகர் ரங்கநாதன் தெருவில் இருக்கும் பிரபலமான துணிக்கடையில் வேலை செஞ்சேன். என்னாலே அங்கே நாலு மாசம்கூட தாக்குப் பிடிக்க முடியலை. அப்புறம் நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் பக்கத்திலே ஒரு பெட்ரோல் பங்கில் நைட் வாட்ச்மேன் வேலை. ஆயிரம் ரூபாதான் சம்பளம். மூணு மாசம் அங்கிருந்தேன். அப்புறம் ஒரு வீட்டில் உதவியாளரா வீட்டு வேலைகள் செஞ்சிக்கிட்டிருந்தப்போ டெவலப் பண்ணின அறிவுதான் சினிமா.

அந்த காலக்கட்டத்தில் ‘காதல்’, ‘ஆட்டோகிராப்’, ‘அழகி’ன்னு தமிழில் ரொம்ப அருமையானப் படங்கள் அடுத்தடுத்து வெளிவந்து அதிர்வை ஏற்படுத்திக்கிட்டு இருந்தது. எனக்குள் அந்தப் படங்கள் ரொம்பவே ஆழமா ஊடுருவிச்சி. நாம படம் எடுத்தா, இந்தமாதிரி அழுத்தமான கதையம்சம் இருக்கிறப் படத்தைதான் செய்யணும்னு விரும்பினேன். அப்போதான் என்னோட குருநாதர் ராம் சார், ‘கற்றது தமிழ்’ படத்தை ஆரம்பிச்சிருந்தார். அந்தக் கம்பெனியில் நான் ஆபீஸ்பாயா வேலைக்குச் சேர்ந்தேன். யதேச்சையா எங்கிட்டே பேசிக்கிட்டிருந்த ராம்சார், என்னோட எழுத்துத் திறமை, இலக்கிய அறிவைப் பத்தியெல்லாம் தெரிஞ்சுக்கிட்டாரு. என்னை உடனே உதவி இயக்குநரா ஆக்கினார். ‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’, ‘தரமணி’, ‘பேரன்பு’ன்னு அவர் இயக்கிய நான்கு படங்களிலும் உதவி இயக்குநரா வேலை பார்த்தேன்.

‘கற்றது தமிழ்’ படத்தில் ஒரு காட்சியில் தலை காட்டியிருப்பேன். சொந்த ஊர்க்காரங்க, ‘மெட்ராசுக்கு போய் என்னத்தைக் கிழிச்சேன்’னு கேட்டா, அதுக்கு ஆதாரமா எதையாவது காட்டணும் இல்லையா. அதுக்காகதான் நடிச்சேன். நிஜத்தில் எனக்கு நடிப்பில் துளிகூட ஆர்வமில்லை. ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் பாட்டு எழுதியிருக்கேன். எனக்குத் தொடர்ந்து பாட்டு எழுதவும் விருப்பமில்லை. வித்தியாசமான கதையோடு, புதுமையான சினிமா தரணும் என்பது மட்டுமே என்னோட இலக்கு. மாற்று சினிமாவுக்கான விதையை இங்கே நட்டிருக்காங்க. அதை செடியா வளர்த்து, மரமாக்கி, பூ பூத்து காய் காய்க்கவைக்கிற அதிசயத்தைப் பார்க்கணும். அதுலே என்னோட பங்கும் அணில் அளவுக்குதான் இருக்கணும். இது மட்டுமே என்னோட விருப்பம்.

முதன்முதலா ‘பரியேறும் பெருமாள்’ கதையை எழுதிட்டு தனுஷுக்கு சொல்லுறதுக்குதான் முயற்சி பண்ணினேன். அலைஅலைன்னு அலைஞ்சும் அவரோட நிழலைக்கூட என்னாலே நெருங்க முடியலை. அதுக்கப்புறம் நடிகர் ஜெயராமனோட மகன் காளிதாஸைப் பார்த்து, இந்தக் கதையைச் சொன்னேன். அவருக்கு என்னவோ இந்தக் கதை கொஞ்சம்கூட பிடிக்கலை. இந்த சூழலில்தான் கதிர் எனக்கு போன் பண்ணினார். இந்தக் கதையைக் கேள்விப்பட்ட அவர், ‘நானே தயாரிச்சு நடிக்கிறேன்’னு கூட ரிஸ்க் எடுக்க முனைந்தார். நல்லவேளையா டைரக்டர் பா.ரஞ்சித் என்னை தத்தெடுத்துக்கிட்டார். என் மேலே முழுசா நம்பிக்கை வெச்சு படத்தை தயாரிச்சி இருக்காரு. இப்போ எல்லாப் பக்கத்திலிருந்தும் நல்ல மாதிரியாதான் படத்தைப் பற்றி சொல்லுறாங்க. ஒடுக்குமுறைக்கு வன்முறை தீர்வாகாது, தொடர்ந்து விவாதம் செய்தே ஒடுக்கப்பட்டோரின் நியாயத்தை புரிய வைக்க முடியும் என்கிற பாசிட்டிவ்வான இந்தப் படத்தோட முடிவு, எதிர்கருத்து வெச்சிருக்கிறவங்களையும் எங்களோட விவாதிக்க வைக்குது. என்னோட அடுத்தப் படத்திலும் சமூக அக்கறை நிச்சயமா வெளிப்படும். படைப்புன்னாலே அதில் சமூக அக்கறை இருந்துதான் ஆகணும்” என்கிறார் மாரி செல்வராஜ்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here