அரசியல்கைதிகளிற்கான கூட்டத்தை புறக்கணித்தது முன்னணி… கூட்டமைப்பிற்கு எதிராக கூச்சலிட்டது பிழைதான்: பாதர் சக்திவேல்!

தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலை தொடர்பான விடயங்களை ஆராய, நேற்று முதலமைச்சர் அலுவலகத்தில் ஒரு சந்திப்பு இடம்பெற்றிருந்தது. வழக்கமாக இப்படியான சந்திப்புக்களில்- மூடிய அறைக்குள்- என்ன பேசப்பட்டதென்பதை விலாவாரியாக குறிப்பிடும் தமிழ்பக்கம், இந்த சந்திப்பை பற்றி ஏன் மூச்சும் விடவில்லையென பல வாசகர்கள் கேட்டிருந்தார்கள்.

உச்சபட்சமாக, முதலமைச்சரின் உள்வீட்டு விசயங்களை வெளியிடகூடாதென்ற நோக்கமாக என்றும் சிலர் கேட்டிருந்தனர்.

உண்மையில் அப்படியான நோக்கங்கள் எதுவும் தமிழ்பக்கத்திற்கு கிடையாது. நேற்றைய சந்திப்பு இரகசியமான சந்திப்பல்ல. அவ்வளவு பெரிய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புமல்ல. அதனால், அதன் விபரங்களை விலாவாரியாக வெளியிடவில்லை. இருந்தாலும், வாசகர்கள் கேட்டிருப்பதால், அந்த சந்திப்பு குறித்தும் பேசுகிறோம்.

நேற்றைய சந்திப்பை அருட் தந்தை சக்திவேல் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள சில தனிப்பட்ட நபர்கள்தான் ஒழுங்கமைத்தார்கள். முதலமைச்சரையும் இதற்குள் இழுத்தால் ஒரு அரசியல் முக்கியத்துவத்தை ஈட்டலாமென்ற நோக்கத்துடன், நேற்று முன்தினம் முதலமைச்சரை சந்தித்து விடயத்தை கூற, முதலமைச்சரும் சந்திப்பிற்கு சம்மதித்தார்.

இதன் ஏற்பாடும் சிறப்பானவை அல்ல. காலை 10.30 மணிக்கு கூட்டம். 9 மணிக்குத்தான் அரசியல் கட்சிகளிற்கு தொலைபேசியில் அழைப்பு விடுக்கப்பட்டது.

முதலமைச்சர், ஈ.பி.ஆர்.எல்.எவ் அணியில் சுரேஷ் பிரேமச்சந்திரன், புளொட்டில் த.சித்தார்த்தன், பா.கஜதீபன், மற்றும் ஆசிரியர் சங்கம், பல்கலைகழக ஊழியர் சங்கம் மற்றும் பத்திரிகைகளில் கட்டுரைகளில் எழுதும் ஒரு சிலர்தான் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்த கலந்துரையாடலை புறக்கணித்திருந்தது. ஏற்பாட்டாளர்களால் முன்னணிக்கு அறிவிக்கப்பட்டும், அவர்கள் சார்பில் யாரும் கலந்துரையாடலிற்கு சமூகமளிக்கவில்லை.

வழக்கமாக செய்தியாளர்கள், கூட்டம் நடக்கும் இடத்திற்கு வெளியில் காத்திருப்பார்கள். நேற்று, யாழ் ஊடக மையமும் கூட்டத்தில் கலந்து கொண்டது. இது கொஞ்சம் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது.

நேற்றைய கூட்டத்தில் இரண்டுவிதமான அணுகுமுறை தெரிந்தது. முதலமைச்சர், த.சித்தார்த்தன், அருட்தந்தை சக்திவேல் போன்றவர்கள் அரசியல்கைதிகளின் உண்ணாவிரதத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்ற கோணத்தில் பேசினர். மற்றவர்கள் பெரும்பாலும், இந்த விவகாரத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பை “கொளுவிவிடும்“ கோணத்தில் பேசினார்கள்.

பொதுஅமைப்புக்கள் என்றாலே யாருக்கும் பொறுப்பு சொல்ல வேண்டிய தேவையில்லை. அரசியல்கைதிகள் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்தாலும் அவர்கள் நேரடியாக பொறுப்பு சொல்ல வேண்டியதில்லை. இந்த துயரமான உண்மையை நேற்றைய கூட்டத்தில் உணர முடிந்தது.

பொதுஅமைப்புக்கள் என்ற பெயரில் வந்தவர்கள், அரசியல்கைதிகளின் உண்ணாவிரதம் நிறுத்தப்படுவதை விட, இந்த விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பொறுப்புகூற வேண்டுமென்ற சாரப்பட பேசிக் கொண்டிருந்தார்கள். அரசியல்கைதிகளின் போராட்டத்தை நிறுத்தவேண்டுமென அருட்தந்தை சக்திவேல் பேசினாலும், கூட்டமைப்பின் மீது குற்றம்சுமத்தவும் தவறவில்லை.

ஒரு கட்டத்தில், வரவு செலவு திட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்த்து வாக்களிக்க வேண்டுமென அருட்தந்தை சக்திவேல் கூறினார். கூட்டத்திற்கு வந்திருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி சித்தார்த்தனை பார்த்து, நீங்கள் அதற்கான உறுதிமொழியை தர வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

“தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் என்னால் வாக்களிக்க முடியாது. அங்கு மூன்று கட்சிகள் உள்ளன. கூடிப்பேசித்தான் முடிவை அறிவிக்கலாம்“ என்றார்.

விடாக்கண்டனான சக்திவேல், “கூட்டமைப்பு இருக்கட்டும். நீங்கள்- புளொட்- எதிர்த்து வாக்களிப்போம் என இங்கு வாக்குறுதி தர வேண்டும்“ என வலியுறுத்தினார்.

அதை சித்தார்த்தன் மறுத்தார். “நாம் கூட்டமைப்பிற்கு கட்டுப்பட்டவர்கள். எல்லோரும் கூடி எடுப்பதே முடிவு. தேவையெனில் உங்கள் அபிப்பிராயங்களை கூட்டமைப்பிற்குள் வலியுறுத்தி பேசுவேன்“ என்றார்.

இதன்போது குறுக்கிட்ட ஒருவர்- “உங்கள் போராட்டங்களிற்கு கூட்டமைப்பு வருவதில்லையென்ற குற்றச்சாட்டு இருக்கட்டும். எல்லா விடயங்களிலும் கூட்டமைப்பை குற்றம்சாட்டுவதும் இருக்கட்டும். இப்படியெல்லாம் மல்லுக்கட்டிக் கொண்டிருக்க தேவையில்லை. நீங்கள் மக்களை திரட்டி பெரிய போராட்டமொன்றை செய்யுங்கள். மக்களை திரட்டுங்கள். மக்கள் கூட்டத்தை பார்த்தால் கூட்டமைப்பு பயப்பிடதா? அந்த மக்கள் கூட்டம் வலியுறுத்துவதை கூட்டமைப்பு செய்யாதா?“ என்றார்.

இது சக்திவேலிற்கு பிடிக்கவில்லை. கூட்டமைப்பு மீது சரமாரியாக குற்றம்சாட்டினார். பொதுஅமைப்புக்களாக தாங்கள் ஏற்பாடு செய்யும் போராட்டங்களில் கலந்துகொள்வதில்லையென குற்றம்சாட்டினார்.

இதன்போது குறுக்கிட்ட வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், “போராட்டங்களிற்கு கூட்டமைப்பு வருவதில்லையென்கிறீர்கள். இதுவரை உங்கள் போராட்டங்களிற்கு வந்த கூட்டமைப்பினருக்கு என்ன நடந்தது? கூச்சலிடுகிறீர்கள், சண்டைபிடிக்கிறீர்கள். நீங்கள் இப்படி நடந்தால், எப்படி உங்கள் போராட்டத்திற்கு வருவார்கள்?“ என்றார்.

இதனால் தர்மசங்கடமான அருட்தந்தை சக்திவேல், தமது போராட்டங்களில் சில தவறுகள் நடந்துள்ளன, இந்த குழப்பங்கள் எல்லாம் அந்தவகையானதே, அது பிழையான நடவடிக்கை என்றார். அந்த தவறுகளை சரிசெய்து கொண்டு வருகிறோம். இனிமேல் அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வோம் என்றார்.

இதன் பின்னரே, சில முடிவுகள் எட்டப்பட்டது. அரசியல்கைதிகளின் விடுதலையை முன்வைத்து அடுத்த வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென கூட்டமைப்பை வலியுறுத்துவது, நாளை (இன்று) அநுராதபுரத்திற்கு நேரில் சென்று உண்ணாவிரதத்தை கைவிட கோருவதென முடிவெடுக்கப்பட்டது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here