அரசியல்கைதிகள் விவகாரம்: தமிழரசுக்கட்சியை சிரித்தபடி அனுப்பிய மைத்திரி!

தமிழ் அரசியல்கைதிகள் விவகாரத்தில் ஜனாதிபதிக்கும், தமிழரசுக்கட்சிக்குமிடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் உருப்படியான எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை. மீண்டும் சந்தித்து பேசலாம் என்றளவில் மட்டுமே முடிவு எட்டப்பட்டுள்ளது.

தமது வழக்குகளை துரிதப்படுத்த வேண்டும், அல்லது புனர்வாழ்விற்குட்படுத்தி விடுவிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல்கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

அண்மையில் நடைபெற்ற வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி கலந்துரையாடலின் பின்னர், அரசியல் கைதிகள் விவகாரத்தை ஜனாதிபதியுடன் பேசப்போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்திருந்தது. எனினும், அன்றையதினம் ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில்- நின்றுகொண்டே- இந்த விடயம் பேசப்பட்டு, பின்னர் பேசலாமென முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து, ஜனாதிபதியை சந்திக்க நேரம் கேட்டு வருவதாகவும், அவர் தரவில்லையென்றும் தமிழரசுக்கட்சி பிரமுகர்கள் பகிரங்கமாக புகார் கூறிவந்தனர்.

இந்தநிலையில் நேற்று மாலை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியை சந்தித்து பேசியது தமிழரசுக்கட்சி. இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தமிழரசுக்கட்சி தரப்பில் கலந்து கொண்டனர்.

மகாத்மா காந்தியின் 150வது பிறந்ததினத்தை முன்னிட்டு நேற்று நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த விவாதத்தில் உரையாற்ற ஜனாதிபதி நாடாளுமன்றம் வந்திருந்தார். இதன்போது சுமார் 15 நிமிடத்திற்கும் குறைவான நேரம், ஜனாதிபதி அறையில் சந்திப்பு நடந்தது.

தமிழ் அரசியல்கைதிகளை விடுவிக்க வேண்டுமென தமிழரசுக்கட்சி தரப்பில் வலியுறுத்தப்பட்டதாகவும், அரசியல் தீர்மானம் ஒன்றை இந்த விடயத்தில் எடுக்கும்படி வலியுறுத்தியதாகவும் எதிர்க்கட்சி தலைவர் அலுவலக பிரமுகர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

இதன்போது, “எல்லோரையும் விடுவிக்கத்தான் வேண்டும்“ என ஜனாதிபதி சிரித்தபடியே பதிலளித்துள்ளார்.

வரும் 17ம் திகதி பாதுகாப்புசபை கூட்டம் முடிந்த பின்னர், இந்த விடயம் தொடர்பில் மீண்டும் பேசலாமென கூறி, தமிழரசுக்கட்சி பிரதிநிதிகளை ஜனாதிபதி அனுப்பி வைத்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here