#MeToo: டாடா மோட்டர்ஸ் அதிகாரி மீது பாலியல் புகார்: கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவு

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்பரேட் கம்யூனிகேஷன் தலைவர் சுரேஷ் ரங்கராஜன் மீது பாலியல் புகார் எழுந்துள்ளதையடுத்து கட்டாய விடுப்பில் செல்லுமாறு அந்நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதை வெளியே சொல்லாமல் புழுங்கிக்கொண்டிருந்த பெண்கள், சமூகவலைதளங்களில், மீடூ இயக்கத்தின் மூலம் தற்போது தங்களுக்கு ஏற்பட்ட நிலையைக் கூறிவருகின்றனர். திரையுல பிரபலங்கள் தொடங்க பல்வேறு துறையிலும் நடந்த பாலியல் ரீதியான பாதிப்புகளை பெண்கள் வெளியிட்டு வருகின்றனர்.

மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பத்திரிகையாளர் உள்ளிட்ட பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் எம்.ஜே. அக்பருக்கு மட்டுமின்றி மத்திய அரசுக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா, அரசியலை தாண்டி தற்போது இந்த விவகாரம் தொழில் மற்றும் வர்த்தகதுறையிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்பரேட் கம்யூனிகேஷன் தலைவர் சுரேஷ் ரங்கராஜன் மீதும் பாலியல் புகார் எழுந்துள்ளது.

வோடாபோன், நிஸான் மோட்டர்ஸ், நீரவ் ராடியாவின் வைஷ்ணவி கம்யூனிகேஷன் உள்ளிட்ட நிறுவனங்களில் முன்பு பணியாற்றிய சுரேஷ் ரங்கராஜன் மீது அவரது சக பெண் ஊழியர்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான தகவல்கள் சமூகவலைதளங்களில் நேற்று முதல் வேகமாக பரவி வருகிறது.

‘மீடூ’ இயக்கம் பிரபலமடைந்து வரும் நிலையில் முன்பு பாதிக்கப்பட்ட அவர்கள் தங்கள் வேதனையை பதிவு செய்து வருகின்றனர். இதையடுத்து அவரை கட்டாய விடுமுறையில் செல்லுமாறு நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு பிரிவு தலைமை அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘‘பாலியல் விவகாரங்களை பொறுத்தவரை டாடா மோட்டர்ஸ் நிறுவனம் பொறுத்துக் கொள்ளாது.

நன்னடத்தை விதிமுறைகளை ஊழியர்கள் சரியான முறையில் பின்பற்ற வேண்டும் என்பதில் நாங்கள் முனைப்புடன் உள்ளோம். உள் விவகார புகார் கமிட்டி விசாரணைக்கு ஏற்கெனவே பரிந்துரைத்துள்ளோம். விசாரணையின் முடிவுக்கு காத்திருக்கிறோம். அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை விடுமுறையில் செல்லுமாறு அவரை அறிவுறுத்தியுள்ளோம்’’ என தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here