ஏழைகளின் சமுர்த்தி பணத்தில் நடந்த கட்சி அரசியல்!

©தமிழ்பக்கம்

கடந்த 2015 ஆண்டு 100 நாள் வேலைத்திட்டம் ஆரம்பித்தபோது, வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சராக சஜித் பிரேமதாச பதவியேற்றார். பிரதி அமைச்சராக அமீர் அலி நியமிக்கப்பட்டிருந்தார்

அக்காலப்பகுதியில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை கருத்தில் கொண்டு சஜித் பிரேமதாசவால் திரிய சவிய என்ற திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஏழை மக்கள் தமது வாழ்வாதாரம் மற்றும் வீட்டுவசதி தேவையினை பூர்த்தி செய்து கொள்ளும் முகமாக சமுர்த்தி வங்கிகள் ஊடாக 4 வீத வட்டியில் ரூபா 100,000 வரையான கடன் திட்டத்தை கொண்டதே இந்த திட்டம். சமுர்த்திப் பயனாளிகள் அல்லாத ஏழை மக்களும் பயன் பெறும் வகையில் 3 ஆண்டுகளுக்குள் கடனை திரும்ப செலுத்தும் முறையில் குறித்த திட்டத்தினை நடைமுறைப்படுத்தியிருந்தார். இக்கடன் திட்டமானது சமுர்த்தி வங்கிகளில் உள்ள சேமிப்புக்களை பயன்படுத்தியே வழங்கப்பட வேண்டும் எனவும் 80 வீதத்திற்கு அதிகமான கடன்கள் சமுர்த்தி வங்கிகளில் வழங்கியிருந்தால் மேலதிக பணம் சமுர்த்தி திணைக்களத்தினால் வங்கிகளுக்கு மீள வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.

எனினும், இந்த கடன்திட்டம் மட்டக்களப்பில் ஒரு அரசியல் நிகழ்ச்சியை போலவே நடத்தப்பட்டது. புpரதியமைச்சர் அமீர் அலி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மேடைகளை அலங்கரித்தனர். பிரதேசசெயலக ரீதியாக நிகழ்வுகள் நடத்தப்பட்ன. சுற்றுநிருபங்களை மீறி சமுர்த்தி வங்கியல்லாத, பொது மண்டபங்களிலும் ஏனைய இடங்களிலும் அரசியல் கூட்டமாக நடத்தப்பட்டு கடன் வழங்கப்பட்டிருந்தன.

அவ்வாறு ஒரு நிகழ்வு போரதீவுபற்றில் இடம்பெற்றபோது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா, சமுர்த்தி வங்கிகளில் உள்ள கருப்பு பணத்தினை தாங்கள் கண்டு பிடித்து பிரதி அமைச்சரின் உதவியுடன் கடன் வழங்குவதாகவும் பேசியிருந்தார். இக்கடன் திட்டத்தினை சமுர்த்தி பயனாளிகள் அல்லாதோருக்கு வழங்குவதில் தயக்கம் காட்டிய சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள் சிலர் சமுர்த்தி பணிப்பாளர் மற்றும் அரசியல்வாதிகளால் இடமாற்றங்களுக்கும், பழிவாங்களுக்கும் உட்பட்டதாக குற்றம்சுமத்தியிருந்தனர்.

இதில் சமுர்த்தி பயனாளிகள் அல்லாதோர் என மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 90 வீதமான நபர்கள் பிரதி அமைச்சரின் இணைப்பாளர்கள், அமைப்பாளர்கள் மற்றும் அரசில் தெரிவுகளே. உள்ளூர் அரசியல் பிரமுகர்களாலும் பெயர்ப்பட்டியல் வழங்கப்பட்டதுடன், குறித்த பெயர்ப்பட்டியல்கள் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளரால் நேரடியாக சமுர்த்தி வங்கி முகாமையாளர்களுக்கு அனுப்பப்பட்டு, அவர்களிற்கு முன்னுரிமையளிக்கும்படி கோரப்பட்டிருந்தது.

இந்த சந்தர்ப்பத்தை சாதகமாக்கி கொண்ட சில சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சில சமுர்த்தி உத்தியோகத்தர்களும் தங்கள் உறவினர்கள், வெளிநாட்டில் பணிப்பெண்களாக சென்றவர்கள், மற்றும் சமுர்த்தி வங்கிகளில் பயிலுனராக வேலை செய்யும் பிள்ளைகள் போன்றவர்களின் பெயர்களையும் இணைத்து, தங்களால் முடிந்த அளவில் கடன் பெற்றுள்ளனர். ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் வேறு திணைக்களங்களை சேர்ந்த ஆசிரியர்களும், சமுர்த்தி கடன்களைப் பெற்று தற்போது வரை திரும்ப செலுத்தாமல் உள்ளனர்.

சமுர்த்தி வங்கிகளின் பெயரில் உள்ள நிலையான வைப்பு முதலீடுகளை மீளப்பெற்று குறித்த கடனினை வழங்குமாறு சமுர்த்தி பணிப்பாளர் அக்காலத்தில் அறிவுறித்தியிருந்தார்.


மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி வங்கிளின் எண்ணிக்கை 29. இந்த வங்கிகளில் திரிய சவிய திட்டத்தில் 4500 பயனாளிகள் கடன்பெற்றனர். இவர்களிடமிருந்து அறவிட வேண்டியுள்ள தொகை 96830000.00. இந்த 29 வங்கிகளில் 15 வங்கிகளிலேயே அதிகளவில் பணத்தை மீள பெற முடியாமல் உள்ளது. இந்த 15 வங்கிகளில் கடன் பெற்ற 450 பயனாளிகளில் இருந்து, அறவிட முடியாதுள்ள கடன் தொகை 9.5 மில்லியன் ரூபா!

இது சமுர்த்தி திணைக்கள புள்ளிவிபரங்களில் குறிப்பிடப்பட்டது. ஆனால் அறிக்கையில் காண்பிக்கப்படாத கடன் தொகை இன்னும் அதிகமானது. சமுர்த்தி வங்கிகளின் வருட இறுதி இலாபத்தில் தாக்கம் செலுத்தும் என்பதனால் சமுர்த்தி முகாமையாளர்களினால் இவை மறைக்கப்படுகின்றது.


இவ்வாறாக ஏழைகளின் பல வருட சேமிப்பு பணத்தினை அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் தேவைக்காக பயன்படுத்தியதன் விளைவாக தற்போது கணக்குகளில் காட்டப்பட்டதற்கு அமைவாக 9.5 மில்லியன் ரூபாவும் கணக்குகளில் காட்டப்படாமல் இன்னும் 8 மில்லியன் ரூபாய்களும் தற்போது சமுர்த்தி வங்கிகளில் மீள அறவிட்டுக் கொள்ள முடியாத நிலையில் உள்ளன. எதிர்காலத்தில் இந்த தொகை இன்னும் அதிகரித்து செல்ல வாய்ப்பு உள்ளது.

இதிலும் பிரதியமைச்சர் அமீர் அலியின் பிரதேசத்தில் உள்ள ஓட்டமாவடி சமுர்த்தி வங்கியில் வழங்கப்பட்ட கடனில் அறவிட முடியாமலுள்ள தொகை 3.5 மில்லியன். அங்கு 533 பயனாளிகளிற்கு 47,770,000 ரூபா வழங்கப்பட்டது.

மட்டக்களப்பில் திரிய சவிய திட்டத்தில் வழங்கப்பட்ட கடனை வழங்க பல முயற்சிகளை மேற்கொண்ட அரசியல்வாதிகள் தொடக்கம் அரச அதிகாரிகள் வரை 3 வருடங்கள் கடந்த நிலையிலும் கடனை அறவிட்டு ஏழைகளின் சேமிப்பு பணத்தினை பெற்றுக்கொள்ளாமல் மௌனம் காப்பதன் நோக்கம் என்ன?

சில வங்கிகளின் அறவிட முடியாத கடன்

ஓட்டமாவடி மேற்கு- 3.5 மில்லியன்
ஓட்டமவாடி மத்தி- 0.5 மில்லியன்
இருதயபுரம்- 0.5 மில்லியன்
சந்திவெளி- 0.7 மில்லியன்
கதிரவெளி- 0.4 மில்லியன்
வாழைச்சேனை- 0.6 மில்லியன்
எருவில்- 1.5 மில்லியன்

அண்மையில் மட்டக்களப்பில் ஒரு சமுர்த்தி வங்கிக்கு தீ வைக்கப்பட்டிருந்தது. சமுர்த்தி மோசடிகளிற்கும் அந்த தீவைப்புக்கும் ஏதேனும் தொடர்புகள் உள்ளதா என்ற சந்தேகத்தை, அதிகாரிகளின் அசமந்தங்களே உருவாக்குகின்றன.

 

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here