மணல் வியாபாரிகளுடன் கூட்டா?: வடமாகாணசபை உறுப்பினர் மீது பொலிஸ் நிலையத்தில் புகார்!

வடமாகாணசபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரனால் அச்சுறுத்தப்பட்டதாக, முல்லைத்தீவை சேர்ந்த ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அத்துடன், வடக்கு முதலமைச்சரிடமும் விடயத்தை கவனப்படுத்தியுள்ளார்.

முல்லைத்தீவின் உடையார்கட்டை சேர்ந்த ஒருவரே மாகாணசபை உறுப்பினர் மீது புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை புதுக்குடியிருப்பு பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடந்தது. இதன்போது, உடையார்கட்டு பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத மணல் வியாபாரம் குறித்தும் பொதுமக்கள் முறையிட்டனர். இதேவேளை, அனுமதிக்கப்பட்டவர்களும் இங்கு மணல் அள்ளுகிறார்கள். இதனால் ஏற்படும் பாதிப்புக்களை சுட்டிக்காட்டிய மக்கள், உடையார்கட்டிலிருந்து வெளியிடங்களிற்கு மணல் கொண்டு செல்ல வேண்டாமென, வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த கோரிக்கை கடிதத்தை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் சமர்ப்பித்து, மணல் வெளியிடங்களிற்கு கொண்டு செல்வது தடுக்கப்பட வேண்டுமென ரவிகரன் வலியுறுத்தினார்.

இதன்போது, வடமாகாணசபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் தனது கையடக்க தொலைபேசியில் அந்த கடிதத்தை படம் பிடித்திருந்தார்.

அந்த கடித விபரத்தை மணல் வியாபாரிகளிடம் அவரே கொடுத்தார் என்றும், அதன்மூலம் மணல் வியாபாரிகள் நேரில் வந்து கடிதத்தின் கீழ் கையொப்பமிட்டவர்களை அச்சுறுத்தினார்கள் என்றும் பிரதேச இளைஞர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர். மணல் வியாபாரிகளால் அச்சுறுத்தப்பட்ட ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.

இது தொடர்பில் வடக்கு முதலமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here