அன்ரன் பாலசிங்கத்தின் இடத்தை குறிவைத்தே புலிகளிற்குள் நுழைந்தேன்: சிவராமின் இரகசிய வாக்குமூலம்!

சிவராம் கொலை இரகசியம்- மினி தொடர் 05

பீஷ்மர்

தமிழ்நெற் இணையத்தளம் அதிதீவிர தமிழ் தேசியம் பேசும் இணையத்தளம், அது விடுதலைப்புலிகளின் பின்னணியில் உருவானது என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். தமிழ்பக்கத்தில் கடந்த பாகத்தை படித்த பின்னர்தான் பலருக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அந்த இணைய குழாமை சேர்ந்த ஊடகவியலாளர்களிற்கு தமிழ்பக்கத்தில் ஒரு காய்ச்சலும் ஏற்பட்டு விட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவாக அவர்களால் இயக்கப்படும் இணையங்களில் இதுவரை, தமிழ்பக்கத்தை சுமந்திரனின் நிதியுதவியில் இயங்கும் ஊடகம் என்ற குண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். அண்மையில் வடக்கு எதிர்க்கட்சி தலைவரின் அறிக்கையை பிரசுரிக்கும்போது, புளொட் ஊடகம் என அடித்து விட்டார்கள்.

இந்த.. இந்த ஆட்களைத்தான் நாம் குறிப்பிட்டோம்- சிவராம் கொலை விவகாரத்தில் உண்மை தகவல்கள் தெரியாமல், யானை பார்த்த குருடன் போல, அந்த சம்பவத்தை எழுதி வருகிறார்கள் என.

சரி, விசயத்திற்கு வருகிறோம்.

சிவராம், புளொட் அமைப்பிற்கு நேர்மையாக செயற்படவில்லை. அச்சு ஊடகங்களைவிட, இணையத்தள ஊடகங்களே எதிர்காலத்தில் செல்வாக்கு செலுத்தும் என்பதை உணர்ந்து புளொட் அமைப்பு 1996 இன் இறுதியிலேயே இணையத்தளம் ஆரம்பிக்கும் முடிவை எடுத்தார்கள். 3 இலட்சம் ரூபா அப்பொழுது வழங்கப்பட்டது.

அந்த பணத்தை வாங்கிக்கொண்டு தமிழ்நெற்றை சிவராம் ஆரம்பித்தார். ஆனால் அதை விடுதலைப்புலிகள் சார்பானதாக படிப்படியாக மாற்றினார். எனினும், அவரை கட்டுப்படுத்த முடியாமல் புளொட் திண்டாடியது.

இந்த சமயத்தில்தான் பத்திரிகை ஒன்றை- அதுவும் ஆங்கிலத்தின் ஆரம்பிக்கும் ஐடியா சிவராமிற்கு ஏற்பட்டது. பத்திரிகை ஆரம்பிப்பதென்றால் பெரிய முதலீடு தேவை. அது சிவராமிடம் இல்லை. அதற்கு முதலிடவும் சிவராம் அணுகியது புளொட்டிடம்தான்!

தமிழ்நெற்றிற்கு நடத்த கதையை சொல்லி, பணம் கொடுக்க புளொட் மறுத்துள்ளது. தமிழ்நெற் தீவிர தமிழ்தேசிய நிலைப்பாடு எடுத்தாலும், தேவையான சமயத்தில் புளொட்டை ஆதரிக்கும், இப்பொழுதும் அது புளொட்டிற்கு சொந்தமான இணையத்தளம்தான் என சமாளித்துவிட்டார். ஆங்கிலத்தில்- இலங்கையை மையமாக வைத்து அச்சு ஊடகமொன்றை ஆரம்பிப்பது, புளொட் தொடர்பான வெளிநாட்டு தூதரங்களிற்கு அதிக சாதகமான அபிப்பிராயத்தை ஏற்படுத்தலாம் என்றும் சிவராம் கூறினார். அனைத்தையும் கூட்டிக்கழித்து பார்த்துவிட்டு, மீண்டும் அச்சு ஊடகத்திற்காக சிவராமிடம் புளொட் பணம் கொடுத்தது.

அந்த பத்திரிகைதான்- northern herald!

இரண்டாயிரங்களின் தொடங்கத்தில் கொழும்பில் வெளியான ஆங்கில பத்திரிகை. சிறிதுகாலத்தில் நிறுத்தப்பட்டு விட்டது. அந்த பத்திரிகைக்கும் புளொட்டிற்குமான உறவு- ஆரம்பிப்பதற்கான முதல் கொடுத்தது என்றவில் மட்டுமேயிருந்தது. பின்னர் சிவராம் தன்னிஷ்டப்படி- புளொட்டின் கட்டுப்பாட்டில் இருக்காமலேயே நடத்தினார். ஒன்றுமே செய்ய முடியாத நிலைமையில் கோயில் உண்டியலில் போட்ட பணமாக அந்த பணத்தை நினைத்துக் கொண்டனர் புளொட்காரர்கள். அந்த பத்திரிகையில் பணியாற்றி பெரும்பாலானவர்களிற்கு புளொட் அமைப்பின் பணத்தில் இயங்கிய பத்திரிகையில்தான் பணியாற்றினோம் என்பது இன்றுவரை தெரியாது!

உங்களிற்கு இயக்கங்களின் இயல்பு தெரிந்திருக்கும். யாரும் இப்படி பணத்தை ஆட்டையை போட்டால், இயக்கங்கள் சகித்துகொள்ளாது. போட்டுத்தள்ளிவிட்டு போய்க்கொண்டேயிருப்பார்கள். ஆனால் சிவராம் விசயத்தில் புளொட் அப்படியயொரு வில்லங்கமான முடிவையும் எடுக்கவில்லை!

சிவராமின் தனிப்பட்ட வாழ்வில் தொடர்புடைய ஒரு பெண் தமிழ் பத்திரிகையாளர் இருக்கிறார். அந்த சமயத்தில் அவர் வெளிநாட்டில் இருந்தார். விடுதலைப்புலிகளுடன் அவர் நெருக்கமானவர். அவர் மூலமாகவே விடுதலைப்புலிகளுடன் சிவராமிற்கு முதல் நெருக்கம் ஏற்பட்டது. சிவராம் திருணமாகியிருந்தாலும், அதையும் தாண்டிய உறவு அந்த பத்திரிகையாளருடன் இருந்தது.

இந்த தொடரில் சில சுயதணிக்கைகளையும் செய்துகொள்கிறோம் என்பதையும் வாசகர்களிடம் தெரிவித்து கொள்கிறோம். சிவராம் பற்றிய வரலாற்று பதிவுக்கு குந்தகம் ஏற்படாத விதத்தில்- சில தனிப்பட்ட விசயங்கள் தொடர்பான தகவல்களில் இந்த சுய தணிக்கையை கடைப்பிடிக்கிறோம். அதனால், அந்த பெண் பத்திரிகையாளர் குறித்த தகவல்களை இத்துடன் முடித்துக் கொள்கிறோம்.

சிவராமின் மிக நெருக்கமான நண்பர்கள், சில விவகாரங்களில் அவருடன் ஒன்றாக பணியாற்றியவர்கள், விடயங்களில் சம்பந்தப்பட்டவர்கள் என, சிவராமுடன் தொடர்புடைய முதல்வட்ட ஆட்களுடன் பேசி, தகவல் திரட்டி தயாரான இந்த பகுதியில் இடம்பெறும் தகவல்கள் சிவராமை மேலோட்டமாக அறிந்தவர்களிற்கே அதிர்ச்சியாக இருக்கும். சிவராமை செய்தியில் மட்டுமே அறிந்திருந்தவர்களிற்கு இன்னும் பேரதிர்ச்சியாக அமையும்.

விடுதலைப்புலிகள் அமைப்பிற்குள் சிவராம் நுழைந்தது மிக திட்டமிட்டு, நோக்கம் ஒன்றை அடைவதற்காகவே. இப்படி நாம் மேலோட்டமாக சொன்னால் குழப்படைவீர்கள். விபரமாக சொல்கிறோம்.

மேலே நாம் சொன்ன அந்த வெளிநாட்டிலுள்ள தமிழ் பத்திரிகையாளருடனான நெருக்கத்தால், புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் தொடர்பு சிவராமிற்கு ஏற்பட்டது. அன்ரன் பாலசிங்கம் அப்பொழுது இலண்டனில் இருந்தார்.  அந்த பத்திரிகையாளரின் உதவியுடன் அன்ரன் பாலிசிங்கத்துடன் பேச ஆரம்பித்து, தகவல்களை பெற்றுக்கொள்ளும் ஒரு சோஸாக பாலசிங்கத்தை உருவாக்கினார் சிவராம்.

இதன்பின்னர்தான், சிவராம் வன்னியில் தொடர்புகளை ஏற்படுத்தினார். வன்னியில் சிவராம் தொடர்புகளை ஏற்படுத்த தொடங்கியபோது, அவரது மிக நெருங்கிய வட்டத்தில் இருந்த சிலர் எச்சரிக்கை செய்தபடியிருந்தனர். இராணுவம், புலிகள், புளொட் என்ற தரப்பையும் சமாளித்து நடப்பதென்பது, எப்படியான வில்லங்கமான விசயம் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.

1990களின் இறுதிக்காலத்தில் ஒருநாள். வெள்ளவத்தைக்கும் பம்பலப்பிடிக்கும் இடையில் கடற்கரையோரமாக ஒரு மதுபானச்சாலையுள்ளது. அதில் ஒருமுறை சிவராமும், அவரது மிக நெருக்கமான இரண்டு நண்பர்களும் முன்னிரவில் மது அருந்திக் கொண்டிருந்தனர். சிவராமிற்கு மிகமிக நெருக்கமானவர்கள்- அவர்களை விட்டால் சிவராமிற்கு நெருக்கமானவர்கள் இந்த உலகில் யாருமே கிடையாது- என்ற வகைக்குள் அடங்குபவர்கள் அவர்கள். இராணுவம், புலிகள், புளொட் என்ற முக்கோண தொடர்பு சிவராமிற்கு ஆபத்தை ஏற்படுத்துமென அப்பொழுதும் அவர்கள் எச்சரித்தனர். அப்பொழுது சிவராம் சொன்னது- “எனது உயிருக்கு எந்த பிரச்சனையும் வராது. எந்த இடத்தில் எப்படி காய்நகர்த்தி வைத்திருக்க வேண்டுமோ, அப்படி நகர்த்தி வைத்திருக்கிறேன். அதனால் எனக்கு ஒன்றும் ஆகாது. அன்ரன் பாலசிங்கம் நோயாளியாகி விட்டார். அவரது ஆயுள் சில வருடங்கள்தான். அதன்பின் புலிகள் அமைப்பிற்குள் அவரது இடம் வெற்றிடமாகவே இருக்கும். நான் குறிவைத்துள்ள இடம் அதுதான்“!

இதை கேட்டதும், சிவராமுடன் கூட இருந்த இருவருக்கும் தூக்கிவாரி போட்டது. கொஞ்சமாக ஏறியிருந்த போதையும் கலைந்துவிட்டிருந்தது!

இந்த சம்பவத்தை ஏன் குறிப்பிட்டோம் என்றால், தனது நகர்வுகளை சிவராம் மிக திட்டமிட்டே செய்தார். புலிகளுடனோ, இராணுவத்துடனோ அவர் தொடர்பை பேணினார் என்றால், ஏதோ ஒரு நீண்டநோக்கம் பின்னால் இருந்தது.

தனது இந்த நெருங்கிய நண்பர்களிடம், அதற்கு பின்னர் பலமுறை சிவராம் இதைப்பற்றி பேசியிருக்கிறார். அப்பொழுதெல்லாம் அக்கறை கலந்த எச்சரிக்கை செய்தபடியிருந்தனர் நண்பர்கள்.

சிவராம் மட்டக்களப்பை சேர்ந்தவர். வன்னியிலுள்ள விடுதலைப்புலிகளுடன் தொடர்பை ஏற்படுத்துவதைவிட, மட்டக்களப்பிலுள்ள புலிகளுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதற்கு புவியியல் காரணங்கள் சாதகமாக இருந்தது. சிவராமும் மட்டக்களப்பை சேர்ந்தவர். அவரிடம் இருந்த கிழக்கு பிரதேசவாதம் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். ஆகவே, அவர் கிழக்கில் கருணாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

சமாதானகாலத்தில் விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பிரமுகர்களுடன் நல்ல நெருக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அது புலிகள் அமைப்பிற்குள் உயர்நிலையை பெற்றுக்கொள்ளும் அளவான தொடர்புகளுமல்ல. புலிகளுடன் அவர் வைத்த தொடர்புகளின் அளவு, அவரது மனதில் இருந்த கற்பனை இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால், அவர் புலிகள் அமைப்பை பற்றி சரியாக புரிந்துகொள்ளவில்லையென்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

மட்டக்களப்பு நகரத்திற்கு செல்லும் ஊடகவியலாளர்கள் எப்படியோ இராணுவத்தின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு படுவான்கரைக்கு புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்கு செல்லும் வாய்ப்பிருந்தது. இப்படி அடிக்கடி படுவான்கரைக்கு சென்று, கருணாவை சந்தித்து வந்தார் சிவராம். இந்த தொடர்புகளின் பின்னரே தமிழ் தேசிய  கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சிகள் நடந்தன.

விடுதலைப்புலிகளிற்கும் சிவராமிற்குமிடையிலான தொடர்புகள் பற்றி மேலோட்டமாக இதுவரை குறிப்பிட்டோம். இந்த இடத்தில் இதை நிறுத்திவிட்டு, சிவராமிற்கும் இராணுவத்திற்கும் இருந்த தொடர்பைபற்றி அடுத்ததாக குறிப்பிடுகிறோம்.

இலங்கை இராணுவத்தின் உளவுப்பிரிவுடன் சிவராமிற்கு நல்ல நெருக்கமிருந்தது. அப்போதைய உளவுப்பிரிவு தலைவராக இருந்த ஹபில ஹெந்தவிதாரணவுடன்  சிவராம் தொடர்பில் இருந்தார். அவர் மூலமாக தனது பாதுகாப்பை உறுதிசெய்துகொண்டார். தனக்கு இராணுவத்தரப்பில் இருந்து எந்த ஆபத்தும் நிகழாதென அந்த அதிகாரி வாக்களித்திருந்ததாக சிவராம் சொல்லிக்கொள்வார்.

உண்மையை சொன்னால், விடுதலைப்புலிகளுடன் எவ்வளவு நெருக்கத்தை பேணிணாரோ, அதேயளவு நெருக்கத்தை இராணுவத்திடமும் பேணினார். தனது ஊடகத்துறைக்கான தகவல்களை திரட்டவே புலிகளின் பகுதிக்கு சென்றுவருவதாக, புலிகளின் முக்கியஸ்தர்களுடன் தொடர்பை பேணுவதாக சிவராம் அந்த அதிகாரிகளிடம் கூறியிருந்தார்.

அந்த அதிகாரிகள் சாதாரண ஆட்கள் இல்லையே, அவர்கள் பழம் தின்று கொட்டை போட்டவர்கள். ஒவ்வொருவரையும் எப்படி பயன்படுத்துவது என்பதை அந்த அதிகாரிகள் அறிந்திருந்தார்கள். ஒருவரால் தமக்கு பலனிருக்குமென்றால், அவரை எந்த எல்லை வரையும் செல்ல அனுமதிப்பார்கள். அவரைப்பற்றிய முழுமையான கண்காணிப்பை இரகசியமாக செய்தபடி, அவரை எதிர்தரப்பிற்குள்ளும் நுழைய அனுமதிப்பார்கள். புலிகளிற்குள் இராணுவம் நுழைந்து தகவல் திரட்டுவதென்பது அவவ்ளவு சுலபமான விசயம் கிடையாது. இப்படியான சோஸ்கள் மூலம் தகவல்களை திரட்டுவது சுலபம். அதற்காக ஆட்களை இப்படி உள்நுழைந்து பழக அனுமதிப்பார்கள். இதனால் சிவராம் புலிகளின் பகுதிக்குள் நுழைந்து வருவதை கண்டும்காணாமலுமிருந்தது இராணுவம்.

கிழக்கில் கருணாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி, பின்னர் சமாதான உடன்படிக்கை ஆரம்பித்த பின்னர் வன்னிக்கு சென்று புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டம்மான், அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் போன்றவர்களையெல்லாம் சந்தித்து பேசினார் சிவராம். அவரை மட்டுமல்ல, இலங்கையின் பல பகுதிகளிலும் தமிழ் தேசிய உணர்வுடன் செயற்பட்ட பத்திரிகையாளர்களை பொட்டம்மான், தமிழ்ச்செல்வன் ஆகியோர் சந்தித்திருந்தனர்.

விடுதலைப்புலிகளின் பல துறையை சேர்ந்தவர்களுடன் சிவராம் தொடர்பை ஏற்படுத்தியிருந்தாலும், மட்டக்களப்பு மாவட்ட அணியினருடன்தான் அவருக்கு அதிக நெருக்கமிருந்தது. இது இயல்பாக ஏற்பட்டது. சில சமயம் ஏற்படுத்தப்பட்டதாககூட இருக்கலாம். இது வெறும் ஊகம்தான். இந்த ஊகத்தை பற்றி பின்னர் குறிப்பிடுகிறோம்.

சிவராமிற்கும் கருணாவிற்கும் இடையில் மிக நெருக்கமான பிணைப்பு ஏற்பட்டிருந்தது. அது எவ்வளவு நெருக்கமென்றால்… கிழக்கு தளபதியாக இருந்த கருணாவை ஓவர் த போனில் நினைத்த நேரத்தில் தொடர்புகொள்ளக்கூடிய அளவில்!

சிவராம் இரண்டு அமைப்பை அழித்தவர் என ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தோம். முதலாவது புளொட். உமா மகேஸ்வரன் கொலையுடன் புளொட் பெருமளவு பலவீனப்பட்டு விட்டது. உமாமகேஸ்வரன் கொலையென்பது, கிட்டத்தட்ட புளொட் மீதான அழிப்பு நடவடிக்கைதான்.

சிவராம் அழித்த இரண்டாவது இயக்கம்- விடுதலைப் புலிகள்!

இது சிலருக்கு ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கும்.

கருணாவுடன் தொடர்பை ஏற்படுத்திய பின்னர், மட்டக்களப்பிற்கு வந்து மருதம் முகாமில் சிலநாட்கள் தங்கிச்செல்வது அவரது வழக்கம். ஆனால் கருணாவுடன் சந்தித்து பேசுவதை ஆரம்பத்திலிருந்தே சக ஊடகவியலாளர்களிடம் மறைத்து வந்தார் சிவராம். அதுபற்றி பலர் பகிரங்கமாகவும் எழுதியிருக்கிறார்கள்.

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிரிந்தது பற்றிய விலாவாரியான தகவல்களை இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன பகுதியில் ஏற்கனவே தந்திருக்கிறோம். இதனால் அது பற்றி மேலதிகமாக எதுவும் சொல்லவில்லை.

விடுதலைப்புலிகள் அமைப்பை விட்டு கருணா பிரிந்தபோது, அதற்கு தத்துவ விளக்கமளித்து, கருணாவின் பிளவை இன்னொரு நிலைக்கு உயர்த்தியவர் சிவராம். கருணா விடுதலைப்புலிகளை விட்டு பிரிவதாக அறிவித்த சமயத்தில், சிவராமும் கருணாவுடனேயே இருந்தார். கருணா தரப்பின் ஒருசில அறிக்கைகளையும் தயார்செய்து கொடுத்தார்.

உமா மகேஸ்வரன் 1984 இல் சிவராமை எப்படி கணித்திருந்தார் என்பதை குறிப்பிட்டிருந்தோம். அவர் பிரதேசவாதி, அவதானமாக இருக்க வேண்டுமென எச்சரித்த உமா மகேஸ்வரன், அவரை திம்பு பேச்சுக்கு அனுப்பாமல் தடுத்து நிறுத்தியிருந்தார். அவர் எச்சரித்து 20 வருடங்களின் பின்னர், புலிகள் அதன் பலனை அனுபவித்தனர் என்பது எவ்வளவு பெரிய நகைமுரண்!

கருணாவுடன் சிவராமும் தங்கியிருப்பதை விடுதலைப்புலிகள் அறிந்ததும், கடும்தொனியில் அவருக்கு எச்சரிக்கை அனுப்பித்தான் மட்டக்களப்பை விட்டு வெளியேற்றினார்கள். விடுதலைப்புலிகளின் எச்சரிக்கை வந்தபோது, படுவான்கரையில் தங்கியிருந்தார். எச்சரிக்கையையடுத்து, கருணா அணிக்கு சொல்லாமல் மாலைவேளையில் அங்கிருந்து நழுவிவிட்டார். சிவராம் நழுவியது மறுநாள் காலையில்தான் கருணாவிற்கு தெரியும். சிவராம் தன்னை ஏமாற்றிவிட்டதாக கருணா திட்டியதாக கருணாவின் உதவியாளர்கள் சிலர் குறிப்பிட்டனர்.

கருணாவை விட்டு தப்பியோடியதும், புலிகளை சமரசப்படுத்த கொழும்பு தமிழ் பத்திரிகை ஒன்றில் கருணாவிற்கு பகிரங்க மடல் ஒன்றை எழுதினார். அந்த மடலின் மூலம், சிவராம் கருணாவுடன் இல்லையென வெளியுலகம் நம்பியிருக்கும் என்பதால், சிவராமிற்கு புலிகள் மன்னிப்பளித்தனர். கருணா பிரிவின்போது, புலிகள் சொன்னதும் கருணாவை விட்டு பிரிந்து வந்தவர்களிற்கு புலிகள் தண்டனையளிக்கவில்லை.

கருணா பிளவின் பின்னர் மட்டக்களப்பு தளபதியாக இருந்த ரமேஷிற்கும் இந்த பிரிவைப்பற்றி தெரியும். அதுபற்றிய கலந்துரையாடல்களில் எதுவும் பேசாமல்தான் இருந்தார். மௌனத்தின் மூலம் அதை அங்கீகரித்தவர். ஆனால் விடுதலைப்புலிகள் அவரை வன்னிக்கு வரச்சொன்னதும் வந்துவிட்டார். அவருக்கு தண்டனையெதுவும் வழங்கப்படவில்லை. ஆனால், கருணாவின் கீழ் இரண்டாம் மட்ட தளபதியாக இருந்த ஜிம்கெலி, ராபர்ட் உள்ளிட்ட பலர் சரணடைந்த பின்னர் புலிகளால் கொல்லப்பட்டனர்.

இதை ஏன் குறிப்பிட்டோம் என்றால்- சிவராமிற்கு ஏன் புலிகள் மன்னிப்பளித்தனர் என்பதை புரிய வைக்க.

(தொடரும்)

Loading...

1 COMMENT

  1. அப்போ சிவராமைக் கொன்றது யார்? சிவராமை பின்னால் இருந்து இயக்கியது எவர்கள்? கூ்டமைப்பினை புலிகள் அங்கிகரிக்க வைத்த உண்மை நோக்கம் என்ன?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here