போராட்டத்தை நாம் பொறுப்பேற்கிறோம்; நீங்கள் கைவிடுங்கள்: நாளை நேரில் செல்கிறது குழு!

தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்தை நாம் பொறுப்பேற்கிறோம். அரசியல்கைதிகள் விடுதலையின் பின்னரும் உடல்நலத்துடன் சாதாரண வாழ்க்கை வாழ வேண்டும். அதனால் உடனடியாக போராட்டத்தை முடித்துக் கொள்ள வலிறுத்துவோம். இப்படி இன்று முதலமைச்சர் தலைமையில் நடந்த கலந்துரையாடலில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் அலுவலகத்தில் நடந்த இந்த கலந்துரையாடலில் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

அரசியல்கைதிகளின் விடுதலை தொடர்பாக நீண்ட கலந்துரையாடல்கள் நடந்தன. இதன் பின்னர் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அரசியல்கைதிகளின் உண்ணாவிரத போராட்டத்தை உடனடியாக நிறுத்திக் கொள்ள கேட்டுக் கொள்வது. அவர்களின் போராட்டத்தை நாம் பொறுப்பேற்கிறோம் என்ற உத்தரவாதத்தை கொடுப்பது.

அரசியல்கைதிகளை எந்த நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டுமென்ற கோரிக்கையை அரசிடம் வைக்கும்படி தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அழுத்தம் கொடுப்பது. அரசியல்கைதிகளை நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்காவிட்டால் அடுத்த வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் (வாக்களிப்பை பகிஸ்கரிப்பது அல்ல). மக்கள் மத்தியில் இது தொடர்பான விழிப்புணர்வையும், தொடர் பரப்புரையையும் செய்து, வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கும் அழுத்தத்தை கூட்டமைப்பிற்கு ஏற்படுத்துவது. சமநேரத்தில், அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வெகுஜன போராட்டங்களை நடத்துவது என இன்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட வெகுஜன பிரதிநிதிகள் ஐவர் நாளை அநுராதபுரம் புறப்பட்டு செல்கிறார்கள். அங்கு கைதிகளுடன் பேசி, உண்ணாவிரதத்தை முடித்து வைக்கவுள்ளனர்.

பல்கலைகழக மாணவர்களும் அநுராதபுரம் நோக்கி நடைபயணம் செல்வதால், அவர்களின் போராட்டத்திற்கும் மதிப்பளித்து, அவர்களுடன் ஒன்றாக அநுராதபுரம் சென்று, போராட்டத்தை முடித்து வைப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here