சீனாவை புரட்டியெடுத்த நேபாளம்: 11 பந்தில் வெற்றி!


மக்கள் தொகையிலும், பொருளாதாரத்திலும் சீனா மிகப்பெரிய நாடாக இருக்கலாம், ஆனால், கிரிக்கெட்டில் இப்போதுதான் தடம் பதித்துள்ளதால், நேபாளம் கூட புரட்டி எடுத்து வருகிறது.

கத்துக்குட்டியாக களமிறங்கிய சீனாவை, குட்டி நாடான நேபாளம் புரட்டி எடுத்துள்ள சம்பவம் ஐசிசி டி20 ஆசிய மண்டலத்துக்கான தொடரில் நடந்துள்ளது.

ஐசிசி நடத்தும் ஆசிய மண்டலத்துக்கான டி20 போட்டிகளின் தகுதிச்சுற்றுப் போட்டிகள் கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த போட்டியில் வல்லரசு சீனாவும், குட்டி நாடான நேபாளமும் மோதின.

இதில் நாணயச்சுழற்சியில் வென்ற நேபாளம் அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் ஆடிய சீன அணி 13 ஓவர்களில் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் 8 சீன வீரர்கள் டக்அவுட்டில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.

தொடக்க ஆட்டக்காரர் யான் மட்டுமே 11 ரன்கள் சேர்த்தார். அதன்பின் அதிகபட்ச ஸ்கோர் உதிரிகள்தான் 9 ரன்கள் கிடைத்தன.

ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் இடம் பெற்ற நேபாள வீரர் லேமிசானே 4 ஓவர்கள் வீசியதில் ஒரு மெய்டன், 4 ரன்கள் கொடுத்து, 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

27 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நேபாள வீரர்கள், 11 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றனர்.

சீனா இந்த அளவுக்கு அடித்துத் துவைத்து தோற்கப்படுவது முதலாவதாக இல்லை. இதற்கு முன் சிங்கப்பூர் அணியிடம் 26 ரன்கள் சேர்த்து சீனா தோல்வி அடைந்தது. தாய்லாந்துக்கு எதிராக 35 ரன்கள், பூட்டானுக்கு எதிராக 45 ரன்கள், மியான்மருக்கு எதிராக 48 ரன்கள் சேர்த்தும் சீனா தோல்வி அடைந்தது. இந்தத் தொடரில் கத்துக்குட்டி அணிகள் கூட சீனாவை வெளுத்துவாங்கிவிட்டன.

2010-ம் ஆண்டு ஆசியக் கோப்பையில் இருந்துதான் சீனா கிரிக்கெட் போட்டிக்குள் இடம் பெற்றுள்ளது. தடகளப் போட்டிகளிலும், பிற விளையாட்டுகளிலும் சீனா சிறப்பாக இருந்தாலும் கிரிக்கெட்டில் இன்னும் அழுத்தமான தடத்தைப் பதிக்க முடியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here