அரசியல்கைதிகள் விவகாரம்: முதலமைச்சர் தலைமையில் அவசர கலந்துரையாடல்!

தமிழ் அரசியல்கைதிகளின் உண்ணாவிரதம் ஐந்தாவது வாரமாக தொடர்ந்து கொண்டிருக்கும் நிலைமையில், அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆராய்வதற்காக இன்று யாழில் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் அவசர கூட்டம் இடம்பெறவுள்ளது.

உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் உடல்நிலை மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதுவரை அவர்களிற்கு உருப்படியான தீர்வெதுவும் கிடைக்கவில்லை. கடந்த காலங்களில் பலமுறை உண்ணாவிரதம் இருந்து, பல வாக்குறுதிகளின் அடிப்படையில் அவை கைவிடப்பட்டிருந்தன. எனினும், அரசியல்கைதிகள் விவகாரத்தில் உருப்படியாக எதுவும் நடைபெறவில்லை. இதனால், இம்முறை போராட்டத்தை கைவிடப் போவதில்லையென்பதில் அரசியல் கைதிகள் உறுதியாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில், அரசியல்கைதிகளின் விடுதலை, அவர்களின் உயிர்பாதுகாப்பு தொடர்பில் அவசரமாக ஆராய இன்றைய சந்திப்பு ஏற்பாடாகியுள்ளது. முதலமைச்சர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறும்.

அரசியல்கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்திரு எம்.சக்திவேல், பொதுஅமைப்பின் பிரதிநிதிகள் நேற்று முதலமைச்சரை சந்தித்திருந்தனர். இதன்பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த சக்திவேல் அடிகளார், “அரசியல்கைதிகளின் விடுதலையில் அரசும், அவர்களுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எடுக்கவில்லை. ஆகவே பொதுஅமைப்புக்கள் ஒன்றிணைந்து முதலமைச்சர் தலைமையில் வெள்ளிக்கிழமை (இன்று) முற்பகல் 11 மணிக்கு விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

அரசியல்கைதிகளின் விடுதலையை விரும்பும் யாரும்- கட்சி பேதமின்றி- இதில் கலந்து கொள்ளலாம்“ என தெரிவித்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here