புலிகளிற்கு ஆயுதம் கொடுத்த நாயகன் பட ஹீரோ வேலு நாயக்கர்!- இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 38

பீஷ்மர்

கமல்ஹாசன் நடித்த நாயகன் படத்தை பெரும்பாலானவர்கள் பார்த்திருப்பார்கள். வேலு நாயக்கர் என்ற தாதாவை மையப்படுத்திய திரைப்படம். வேலுநாயக்கராக கமல் நடித்திருப்பார். மும்பையை ஆட்டிப்படைத்த தாதா வேலு நாயக்கர். மும்பையில் சேரிகள் நிறைந்த தாராவி பகுதியில் ஒரு ராஜ்ஜியத்தையே அமைத்து, சிற்றரசர் போல வாழ்ந்த வரதா பாய் பற்றிய கதையை கற்பனை கலந்து நாயகன் படம் உருவானது. வரதா பாய்தான் படத்தில் வேலு நாயக்கர் ஆனார்.

சிலபல கற்பனை சம்பவங்களுடன் படத்தின் கதையும், முடிவும் அமைக்கப்பட்டிருந்தன. வரதா பாய் தமிழர். நிஜப்பெயர் வரதராஜ முதலியார். மும்பையில் வரதா பாயாக அறியப்பட்டார். அவர்தான் புலிகளிற்கு முதலில் ஆயுதங்கள் விற்றவர்!

இது சற்று ஆச்சரியமான தகவல்தான். அவரது தொடர்பின் மூலம்தான் புலிகளின் ஆயுதக்கடத்தல் வலையமைப்பு முளைவிட ஆரம்பித்தது. பின்னாளில் உலகத்திற்கே தலைசுற்றவைத்த வலையமைப்பின் தொடக்க புள்ளியாக வரதா பாயும் இருந்தார்.

விடுதலைப்புலிகளின் ஆயுதவிநியோக வலையமைப்பு எப்படி உருவாக்கப்பட்டது? யார் யார் சம்பந்தப்பட்டார்கள்? எப்படி இயங்கியது? எப்படி வீழ்ந்தது? என்பதை பற்றிய முழுமையான தகவல்களை அடுத்தடுத்த பகுதிகளில் குறிப்பிடவுள்ளோம்.

விடுதலைப்புலிகளை அழிப்பதென்றால், முதலில் எதை செய்ய வேண்டும் என்பதை சரியாக புரிந்து கொண்டு, அமெரிக்கா, கனடா புலனாய்வு அமைப்புக்கள் ஐரோப்பிய புலனாய்வு அமைப்புக்களுடன் இணைந்து கச்சிதமாக செய்ததே- புலிகளின் ஆயுத விநியோகத்தை நிறுத்தியது. இது புலிகளின் ஆணிவேரையே அறுத்தது.

தமது ஆணி வேர் அறுக்கப்பட்டமைக்கு புலிகளின் சில தவறான முடிவுகளும் காரணமாக அமைந்தன என்பதே இங்கு குறிப்பிட வேண்டிய விடயம். அவசரகதியில் புலிகள் எடுத்த சில முடிவுகள், சமநேரத்தில் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்களின் பிடி புலிகள் மீது இறுகியதெல்லாமே நடந்தது. சம்பவ ஒழுங்கில் இவை பற்றி பார்ப்போம்.

வரதா பாய்

புலிகளின் ஆயுதக்கொள்வனவு 1980களின் தொடக்கத்தில் நடந்ததென்பதை ஆரம்பத்திலேயே குறிப்பிட்டோம். அப்பொழுது புலிகள் உள்ளிட்ட எல்லா இயக்கங்களுமே இந்தியாவில் தங்கியிருந்தன. யாழ்ப்பாணத்தை சேர்ந்த செல்வராசாவை பத்மநாதன் (குமரன் பத்மநாதன்- கே.பி) ஆங்கில அறிவுடன் இருந்தார். அதனால் அவரையே இந்த பணிக்கு புலிகள் நியமித்தனர்.

இந்தியாவில் இருந்த சில கள்ளச்சந்தை வியாபாரிகளுடன் இவருக்கு ஏற்பட்ட தொடர்பின் மூலம், வரதா பாயின் அறிமுகம் ஏற்பட்டது. இந்த அறிமுகத்தை வளர்த்து, அவர் மூலம் ஆயுதங்களை கொள்வனவு செய்ய பிரபாகரன் விரும்பினார். வரதா பாயுடன் ஒரு டீலை முடித்து கொஞ்ச ஆயுதங்களை வாங்கும் பொறுப்பு கே.பியிடம் வழங்கப்பட்டது. இதுதான் கே.பி புலிகளின் ஆயுதக் கொள்வனவாளராக மாறிய சம்பவம். இந்த பணியில் அவர் தேர்ச்சியானவராக மாறி, உலகத்தின் கண்ணில் விரலை விட்டு ஆட்டியது பின்னர் நடந்தது.

1983களில் இது நடந்தது.

தமிழ் இளைஞர்களின் போராட்டத்தை வரதா பாய் (வரதராஜா முதலியார்) மனப்பூர்வமாக ஆதரித்தார்.  தமிழ் தேசிய உணர்வுள்ளவர். இந்தியாவில் தங்கியிருந்து இயக்கங்கள் தம்மை ஒழுங்கமைத்துக் கொண்டிருந்த சமயத்தில், அவர்களிற்கு பெரிய நிதித்தேவை இருந்தது. ஈழப்போராளிகளை ஆதரித்த தனவந்தர்கள், அரசியல் பிரமுகர்களை சந்தித்து ஒவ்வொரு அமைப்பும் நிதி சேகரித்துக் கொண்டிருந்தார்கள். ஈழப்போராளிகளை இந்தியாவில் மரியாதையாக பார்த்த காலம் அது. புகையிரதத்தில் டிக்கெற் இல்லாமல் போராளிகள் பயணிப்பார்கள். டிக்கெற் பரிசோதகர்கள் வந்தால், போராளிகளிற்கு தேனீர் வாங்கிக் கொடுத்துவிட்டு செல்லும் சம்பவங்களும் நடந்துள்ளன.

வரதா பாய் யாரும் கேளாமலே இயக்கங்களிற்கு உதவியர். புலிகள், புளொட் ஆகிய இரண்டு இயக்கங்களிற்கும் நிதியுதவி செய்தார். மும்பை தாராவி பகுதியில் போதைப்பொருள் கடத்தல், ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து என ஒரு முகத்தையும், மக்களின் காவலன், ஏழை எளியவர்களின் கல்வி, திருமணத்திற்கு நிதியுதவி அளிப்பது, வீடற்றவர்களிற்கு வரும் பிரச்சனைகளை சமாளிப்பதென இன்னொரு முகமுமாக ஒரு கலவையான ஆளுமையாக வாழ்ந்தவர் வரதா பாய். இயக்கங்களிற்கு நிதியளித்து, போராட்டத்தை ஊக்கப்படுத்தியது அவரது இன்னொரு பக்கம். சிங்களவர்களிடமிருந்து தமிழர்கள் விடுதலையடைய வேண்டுமென அவர் மனப்பூர்வமாக விரும்பினார்.

வரதா பாய்க்கு சட்டவிரோத பிஸ்னஸ்களில் மிகப்பெரிய நெட்வேர்க் இருந்தது. வரதா பாயின் இன்னொரு நண்பரான, மும்பையின் இன்னொரு புகழ்பெற்ற தாதா ஹாஜி மஸ்தான் (இவரும் தமிழர்தான்) ஆப்கானிஸ்தானில் இருந்து போதைப்பொருட்களையும் கடத்திக் கொண்டிருந்தார். வரதா பாய்க்கும் அப்படியான நெட்வேர்க் இருந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் இயக்கங்களிற்கு தன்னிடம் அப்படியான நெட்வேர்க் இருப்பதாக காட்டிக் கொள்ளவில்லை.

அப்பொழுது ஆப்கானிஸ்தானில் சோவியத் ஒன்றியப்படைகள் நிலைகொண்டிருந்தன. சோவியத் படைகளிற்கு எதிராக போரிட்ட ஆப்கான் முஜாகிதீன்களிற்கு பாகிஸ்தான் ஊடாக அமெரிக்க நிதியும், ஆயுதமும் அளித்துக் கொண்டிருந்தது. ஆப்கான், பாகிஸ்தானை மையமாக கொண்ட நிழல் உலக தாதாக்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்களிற்கு அந்த சமயத்தில் இன்னொரு வர்த்தகம் பிடிபட்டது. சோவியத்திற்கு எதிராக அமெரிக்கா தாராளமாக விநியோகித்த ஆயுதங்களை கள்ளசந்தையில் விற்பதே அது. அதுபோல சோவித் ஒன்றியத்தின் ஆயுதங்களும் ஆப்கானில் தாராளமாக வாங்க முடிந்தது. மொத்தத்தில் ஆயுதக்கடத்தல், விற்பனை சொல்லப்பட்ட பணமீட்டும் வழியாக ஆப்கானில் அறிமுகமானது. தென்னாசியாவின்- ஆப்கான், பாகிஸ்தானிற்கு அண்மையாக இருந்த தாதாக்கள் ஓஹோவென்ற வாழ்க்கை வாழ ஆரம்பித்தனர்.

வரதா பாய் அப்பொழுது அனைத்திலிருந்தும் ஒதுங்கி, சென்னைக்கு வந்துவிட்டார்தான். ஆனால் ஹாஜி மஸ்தான் ஊடாக சில தொடர்புகளை ஏற்படுத்தி இதை செய்து கொடுத்தார். புலிகளும், புளொட்டும் ஆயுதங்கள் வாங்க விரும்பியபோது, அவர் தயக்கமின்றி உதவினார். ஆப்கான், பாகிஸ்தான் கள்ளச்சந்தைகளில் இருந்து சிறிய தொகையான துப்பாக்கிகளையும், கையெறி குண்டுகளையும் இரண்டு இயக்கங்களும் வாங்கின. இப்படித்தான் புலிகளிடம் முதன்முதலில் அமெரிக்க தயாரிப்பான எம்.16 துப்பாக்கிகள் வந்தன. சோவியத்திற்கு எதிராக பாவிக்க அமெரிக்க கொடுத்த துப்பாக்கிகள், இந்தியா வழியாக இலங்கைக்கு வந்தது!

வரதா பாய் ஏற்படுத்திக் கொடுத்த லிங் வழியாக புளொட், புலிகள் இரண்டு இயக்கங்களை சேர்ந்தவர்களும் ஆயுதம் வாங்க அப்போது ஆப்கானிஸ்தான் சென்றார்கள். இதில் சுவாரஸ்யம் என்ன தெரியுமா?- இரண்டு இயக்கங்களிலும் ஆயுதம் வாங்க ஆப்கான் சென்ற பிரமுகர்கள் இன்றும் உயிருடன் இருக்கிறார்கள்!

ஆப்கான் லிங்கின் மூலம் அறிமுகமான சில கள்ள சந்தை வியாபாரிகள் மூலம், ஆர்.பி.ஜிக்களை ஆப்கானிஸ்தானிலிருந்து புலிகள் வாங்கினார்கள். புளொட்டும் ஆர்.பி.ஜி வாங்க முயன்றது. ஆனால் அப்பொழுது பாகிஸ்தானிலிருந்து அவர்களால் வாங்க முடியவில்லை.

ஆப்கான், பாகிஸ்தான் சந்தையிலிருந்து ஆயுதங்களை இரண்டு இயக்கங்களும் சிறியளவில்தான் வாங்கின. அதற்கு காரணம்- முதன்முதலில் அந்த உலகத்திற்குள் இயக்கங்கள் அப்பொழுதுதான் சென்றன. அனுபவம், பணம் போதியளவில் இருக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக ஆயுதம் வாங்கவாங்கத்தான் ஆர்வம் அதிகரித்தது.

சும்மா கோடு போட்டாலே றோடு போடும் ஆள் கே.பியென்பதை அப்பொழுதுதான் நிரூபித்தார். ஆப்கானிற்கு சில தடவை போய் வந்ததுமே, அவருக்கு நிறைய தொடர்புகள் கிடைத்து விட்டன. அதில் முக்கியமானது, தென்கிழக்காசிய கறுப்புச்சந்தை வியாபாரிகளின் தொடர்பு.

தாய்லாந்து, இந்தோனேசியா, பர்மா, கம்போடியாவை உள்ளடக்கிய தென்கிழக்காசிய நாடுகளும் அப்போது கறுப்புச்சந்தை வியாபாரிகளின் சொர்க்கபுரியாக இருந்தது. கம்போடியா, லாவோஸ், வியட்நாமில் நடந்த போர்களால் ஆப்கானை போலவே, அங்கும் மிகப்பெரிய கறுப்புச்சந்தை நெட்வேர்க் ஒன்று இயங்கியது. அந்த நெட்வேர்க் தொடர்பு கே.பிக்கு கிடைத்தது.

இதனால் 1984இன் தொடக்கத்திலேயே அவர் தாய்லாந்து சென்றுவிட்டார். இந்த தொடர்புகளின் மூல காரணம், வரதா பாய்தான்.

தென்கிழக்காசிய நாடுகளில் இருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்து அனுப்ப கே.பி முயன்று கொண்டிருந்தார். இந்த சமயத்தில் புளொட்டும் தாய்லாந்து வந்து விட்டது. இரண்டு இயக்கங்களிற்கும் கறுப்புச்சந்தை நெட்வெர்க்கை அறிமுகப்படுத்தியது வரதா பாய் என்பதால், இரண்டு இயக்கங்களின் ஆரம்ப தொடர்புகளும் கிட்டத்தட்ட ஒரேவிதமானவைதான்.

இதனால் இரண்டு இயக்கங்களிற்கும் மற்றவர் என்ன செய்கிறார், ஆயுதம் வாங்க முயல்கிறாரா என்பது தெரிந்தது. அதனால், யார் முதலில் ஆயுதம் வாங்கி இலங்கைக்கு கொண்டு போய் சேர்ப்பது என்பதில் பயங்கரமான போட்டி நிலவியது.

இரண்டு இயக்கங்களுமே ஆயுதம் வாங்கி, எப்படி இலங்கைக்கு கொண்டு வருவதென்பதை தீவிரமாக திட்டமிட்டுக் கொண்டிந்தன. இதில் முந்தியது புளொட்!

ஆனால் அவர்களிடம் சரியான திட்டமிருக்கவில்லை. முன் அனுபவமும் இல்லையென்றாலும், முறையாக திட்டமிட்டிருந்தால், இன்னும் பொறுப்பாக நடந்து கொண்டிருந்தால் புளொட்டின் ஆயுதங்கள் இலங்கைக்கு வந்திருக்கும். ஆனால் வரவில்லை. சென்னை துறைமுகத்தில் சுங்கப்பிரிவினால் தடுத்து வைக்கப்பட்டு விட்டது. 1984இல் இது நடந்தது.

அதற்கு அடுத்த வருடம்-1985 தொடக்கத்திலேயே புலிகள் ஆயுதங்களை கப்பலில் ஏற்றி வந்து கச்சிதமாக இறக்கினார்கள். இந்த இடத்தில்தான் கே.பியின் துல்லியமான திட்டமிடலும், புத்திசாலித்தனமும் வெளிப்பட்டது.

(தொடரும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here