நாடாளுமன்றத்திற்குள் நடக்கும் ஜனநாயக படுகொலை: அம்பலப்படுத்தினார் சிவசக்தி ஆனந்தன்!

ஆட்சிமாற்றத்தின் பின்னர் ஜனநாயகம், நல்லாட்சி என்று பேசப்பட்டாலும், நாடாளுமன்ற உறுப்பினருக்கான பேச்சுரிமை சபைக்குள்ளேயே மறுக்கப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினரான எனக்கு பத்து மாதங்களுக்கும் அதிகமாக சபையில் நேரம் மறுக்கப்பட்டு வருகின்றது. இது எனது சிறப்புரிமையை மீறும் செயலாகும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை மீறலை வெளிப்படுத்தும்போதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்- “வன்னி தேர்தல் மாவட்டத்தில் மக்களின் ஆணை பெற்று எட்டாவது நாடாளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருக்கின்றேன். எமது ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஸ்தாபக பங்காளிக்கட்சியாகும். அந்தக்கட்சியின் செயலாளர் நாயகமாக நான் பதவி விகிக்கின்றேன். கடந்த தேர்தலில் எமது கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து இலங்கை தமிழரசுக்கட்சியின் சின்னத்தில் போட்டியிருந்தது.

அதன்பின்னர் கூட்டமைப்பால் நடத்தப்பட்ட புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை பற்றி பயிற்சிப்பட்டறை ஒன்றில் எமது கட்சி பங்கேற்கவில்லை. அது எமது கட்சியின் தனிப்பட்ட முடிவு. அவ்வாறிருக்கையில், இடைக்கால அறிக்கை சம்பந்தமான விவாதம் உட்பட அதற்கு பின்னரான முழுப் நாடாளுமன்ற சபை நடவடிக்கைகளிலும் எனது கருத்துக்களை முன்வைப்பதற்கான நேர ஒதுக்கீட்டை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன் வழங்குவதை தவிர்த்து வருகின்றார் என்பதை நான் ஏற்கனவே பல தடவைகள் தங்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன். இருப்பினும் அதற்கான தீர்வு இதுவரையில் கிடைக்கவில்லை.

யுத்தத்தின் உக்கிரத்திற்கு முகங்கொடுத்த வன்னி வாழ் மக்களின் குரலாக அவர்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் எனக்கான பேச்சுரிமை மறுக்கப்பட்டிருக்கின்றது. இது அடிப்படை மனித உரிமை மீறலாகும். அதுமட்டுமன்றி நான் பிரதிதிநிதித்துவப்படுத்தும் மக்களின் பிரச்சினைகளை, தேவைகளை, கோரிக்கைகளை, எதிர்பார்ப்புக்களை வெளிப்படுத்த இடமளிக்காது அவர்களின் குரலை நசுக்கும் ஒரு செயற்பாடகவே கருத வேண்டியுள்ளது.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் பரந்துபட்ட ஜனநாயகம், நல்லாட்சி என்று பேசப்படும் காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினருக்கான பேச்சுரிமை சபைக்குள்ளேயே மறுக்கப்படுவதை எந்தவகைக்குள் கொள்வது என்ற கேள்வியை எமக்கு எழச் செய்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் பத்து மாதங்களுக்கும் அதிகமாக சபையில் எனக்கான நேரம் மறுக்கப்பட்டு வருகின்றது. இது எனது சிறப்புரிமையை மீறும் செயலாகும்.

உறுப்பினர்களுக்கான நேர ஒதுக்கீட்டை சபாநாயகர் என்ற அடிப்படையில் தாங்கள் பெற்றுக் கொடுப்பதற்கு உரித்துடைவராகின்றீர்கள். சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேர ஒதுக்கீட்டை பெற்றுகொடுத்த வரலாறும் சபைக்கு உள்ளது. ஆகவே தாங்கள் எந்தவொரு கட்சியையும் சாராது நடுநிலைமையுடன் செயற்பட்டு வருகின்றவர் என்ற அடிப்படையில் இவ்விடயம் சம்பந்தமாக உரிய கவனம் எடுத்து விரைந்து பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்“ என சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here