ஆபாச படத்தை காட்டி இந்திய ஏவுகணை இன்ஜினீயரை மடக்கிய ஐஎஸ்ஐ: போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு ஆபாச வீடியோக்களை காட்டி தங்களது வலைக்குள் இன்ஜினீயர் நிஷாந்த் அகர்வாலை விழவைத்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பிரம்மோஸ் ஏவுகணை ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றியவர் இன்ஜினீயர் நிஷாந்த் அகர்வால். இவரை ராணுவத்தின் உளவுப் பிரிவு, மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸ் இணைந்து நேற்று முன்தினம் கைது செய்தது.

பிரம்மோஸ் ஏவுகணையின் தொழில்நுட்பத்தை பாகிஸ்தான், அமெரிக்கா உள்பட பிற நாடுகளுக்கு தெரிவித்ததாக இன்ஜினீயர் நிஷாந்த் அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய தனிப்பட்ட லேப்-டாப்பில் அதிகமான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதுபோன்ற முக்கிய தகவல்களை அவர் வைத்திருப்பதற்கு அதிகாரம் கிடையாது என தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் அவரை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நாக்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பேஸ்புக் சமூக வலைதளத்தில் ஆபாச வீடியோக்கள் மூலம் நிஷாந்த் அகர்வாலை கவர்ந்திழுத்த பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு, அவரை தங்கள் வலைக்குள் விழவைத்து வேவு பணிக்கு பயன்படுத்தியிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த 2017-18-ம் ஆண்டில் சிறந்த இளம் விஞ்ஞானி விருதை நிஷாந்த் அகர்வால் பெற்றவர் ஆவார்.

சமூக வலைதளங்களில் ஆர்வமாக இருந்த நிஷாந்த் அகர்வாலை, ஐஎஸ்ஐ உளவு அமைப்பு, ஆபாச வீடியோக்களை பதிவிட்டு அதன் மூலம் தங்களது வலையில் அவரை விழவைத்துள்ளது.

கனடாவைச் சேர்ந்த சேஜல் கபூர் என்ற பெண்ணுடன் நிஷாந்த் அகர்வால், பேஸ்புக் மூலம் சாட்டிங் செய்து வந்துள்ளார். மேலும் நிஷாந்தை லிங்க்டு இன் வலைதளம் மூலம் தொடர்பு கொள்ளுமாறு கூறி அவருக்கு ஒரு இணைய லிங்க்கை சேஜல் கபூர் அனுப்பியுள்ளார். அந்த லிங்க்கை நிஷாந்த் கிளிக் செய்தவுடன், அதிலிருந்து ஒரு வைரஸ் நிஷாந்த் கம்ப்யூட்டரில் டவுன்லோடு ஆகியுள்ளது. அந்த வைரஸ் மூலம் நிஷாந்தின் கம்ப்யூட்டரிலிருந்த விவரங்களை சேஜல் கபூர் எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. அதுபோலவே நேஹா சர்மா என்ற பெண்ணுடனும் நிஷாந்த் இணையத்தில் சாட்டிங் செய்த விவரமும் தெரியவந்துள்ளது.

தனது கம்ப்யூட்டரில் இருந்து முக்கிய தகவல்கள் திருடு போன விவரம் நிஷாந்துக்கே முதலில் தெரியவில்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here