மன்னார் புதைகுழியில் புதைக்கப்பட்டது ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினர்களா?: முதற் தகவல் கிடைத்தது!

மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வுப்பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்று புதன்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த விசேட சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ இதுவரை 175 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஏனைய அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளை மீட்கும் பணி இடம்பெற்று வருவருவதுடன், மீட்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகளின் மாதிரிகளை அமெரிக்காவிற்கு காபன் பரிசோதனைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று 84 ஆவது தடவையாக அகழ்வுப்பணிகள் இடம்பெற்றன. இதுவரை குறித்த வளாகத்தில் 175 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.அவற்றில் 169 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த புதைகுழியில் மீட்கப்பட்ட உடல்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் போராளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடைதாக இருக்கலாமோ என்ற ஐயம் எழுப்பப்பட்டு வந்த நிலையில், அதற்கு வாய்ப்பில்லையென்றே தெரிகிறது.

1990இல் இந்தியப்படைகள் இலங்கையை விட்டு வெளியேறிய போது, திருகோணமலையிலிருந்து பெரும்பாலான ஈ.பி.ஆர்.எவ் அமைப்பினர் கப்பல் மூலம் இந்தியாவிற்கு சென்றனர். ஏனைய பகுதியில் தங்கியிருந்தவர்கள் மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து படகுகளில் இந்தியாவிற்கு சென்றிருந்தனர்.

மன்னார் ஊடாக இந்தியா செல்ல முயன்ற ஒரு அணியும், அவர்களின் குடும்பங்களும் தள்ளாடிக்கு அருகில் இலங்கை இராணுவத்தாலோ, அல்லது விடுதலைப்புலிகளாலோ கைதாகி கொல்லப்பட்டிருக்கலாமென்ற கருத்து நிலவியது.

எனினும், அந்த ஊகத்திற்கு வாய்ப்பில்லையென்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிப்பதாக, புதைகுழி ஆய்வில் ஈடுபட்ட தரப்புக்கள் தெரிவித்துள்ளனர். சில தினங்களின் முன்னர் அகழ்வு பணியின் போது, பிஸ்கட் பக்கற் ஒன்றும் மீட்கப்பட்டது. அதன் விற்பனை விலை மட்டும் அழியாமல் இருந்தது. விற்பனை விலையாக 5 ரூபா குறிக்கப்பட்டிருந்தது.

குறித்த பிஸ்கட் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு, அது குறித்து வினவியபோது, 1995ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே தமது உற்பத்திகள் 5 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். இதன்மூலம், இந்த புதைகுழி 1995ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு உரியதாக இருக்கலாமென ஊகிக்கப்படுகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here