சின்மயிக்காக ஹோட்டல் வாசலில் காத்திருந்த வைரமுத்து: அடுத்தடுத்து வெடிக்கும் சர்ச்சை!

கவிஞர் வைரமுத்து மீதான பாலியல் புகார் உண்மை தான் என்று கூறியுள்ள பாடகி சின்மயி, இதுகுறித்து மேலும் பல ஆதாரங்களைத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் ரீதியான தொல்லைகள் குறித்து #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். ஹாலிவுட் திரையுலகில் பல சர்ச்சைகளைக் கிளப்பிய இந்த விவகாரம் தற்போது இந்திய திரை உலகிலும் தொடங்கி உள்ளது. கடந்த சில மாதங்களாக #metoo மூலம் பல திரைப்பிரபலங்கள் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதற்குப் பிறகு பல நடிகைகள் குரல் கொடுக்கத் தொடங்கினர். பெண்கள் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குயின் படத்தின் இயக்குநர், எழுத்தாளர் சேத்தன் பகத் எனத் தொடங்கிய இந்திய #MeToo பிரச்சாரம் பாடகி சின்மயி மூலம் சினிமா விமர்சகர் பிரசாந்த் வரை வந்தது.

இந்நிலையில், ‘ஒரு முறை சுவிட்சர்லாந்தில் பாட்டுக் கச்சேரிக்கு சென்றிருந்தோம். நிகழ்ச்சி முடிந்து அனைவரும் சென்றுவிட்டார்கள். நானும் என் அம்மாவும் மட்டும்தான் இருந்தோம்.. அப்போது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஒருவர் வந்து, கவிஞர் வைரமுத்து உங்களுக்காக ஹோட்டல் ரூமில் வெயிட் பண்ணுகிறார் எனத் தெரிவித்தார். நான் அப்போதே அவர் முகத்திரையைக் கிழித்திருப்பேன். அவர் மீது திரையுலகம் வைத்திருந்த மரியாதைக்காக விட்டுவிட்டேன்’ என்று தன் டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

‘அவரை பற்றி 0.2 சதவீதமே பேசி உள்ளேன். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டால் வைரமுத்துவின் பல லீலைகள் தெரியும் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த உண்மையைச் சொல்வதால் திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு மறுக்கப்பட்டாலும் கவலையில்லை’ என சின்மயி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், சின்மயிக்கு நடிகரும் அவரது கணவருமான ராகுல் ரவிந்திரன் ஆதரவு தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “நான் ஒரு நடிகர் மற்றும் இயக்குநர். நான் உன்னுடன் நிற்கிறேன். உன்னுடன் தொடர்ந்து பணியாற்றுவேன். வைரமுத்துவால் எதையும் தடுக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here