அரசு பஸ்சின் அவலநிலை குறித்து, ‘வீடியோ’ வெளியிட்ட டிரைவர் விஜயகுமாரின், ‘சஸ்பெண்ட்’ உத்தரவு ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழநி அரசு போக்குவரத்து கிளையைச் சேர்ந்த டிரைவர் விஜயகுமார். சில நாட்களுக்கு முன், பஸ்சில் பணிபுரியும்போது, பஸ்சுக்குள் மழைநீர் ஒழுகுவதாகவும், ஷட்டர், பிரேக் சரிவர செயல்படவில்லை, அதிகாரிகளிடம் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை எனப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதனால், விஜயகுமாரை தற்காலிக பணி நீக்கம் செய்து, திண்டுக்கல் பொதுமேலாளர் ராஜேஸ்வரன் உத்தரவிட்டார்.
இந்நிலையில் விஜயகுமார், ‘பஸ் இயக்கும்போது, ஏற்படும் சிக்கல்களை கூறினேன். அதை ஒருவர் வீடியோ எடுத்து பரப்பியுள்ளார்.’பஸ்சை இயக்கும்போது அலைபேசியில் பேசினால் தான் தவறு. அவ்வாறு நான் பேசவில்லை. சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்றார்.
இது குறித்தும் ஊடகங்கள், பத்திரிகைகளில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, டிரைவரின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
விஜயகுமார் கூறுகையில், ”சஸ்பெண்ட் உத்தரவை ரத்துசெய்து, நேற்று முதல் வழக்கம்போல பணிக்கு வர கிளை மேலாளர் தெரிவித்துஉள்ளார்” என்றார்.