மைத்திரி, ரணில் இணைந்தால் இன்னும் ஜோராக இருக்கும்!

சமூக அபிவிருத்தியை காணும் ஜனாதிபதியும், பொருளாதார அபிவிருத்தியை காணும் பிரதமரும் ஒன்றிணைந்தால் இந்த நாடு மேலும் சுபீட்சம் காணும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியா கல்வி வலயத்தில் கோட்டம் மூன்றின் ஆசிரியர்களை ஒன்று திரட்டி ஒழுங்கு செய்திருந்த சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வு இன்று (06) கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தலைமையில் லிந்துலை மெராயா யுனிவர்சல் பாடசாலையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு எதிர்காலத்தில் மாணவர்கள் நாட்டிக்கு எவ்வாறான பிரஜையாக உருவாக வேண்டும் என்பதனை எடுத்துக்காட்டும் வகையிலும் எமது பாராம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளை பிரதிபலிக்கும் வகையிலும் மெராயா ஆலயத்திற்கு அருகாமையிலிருந்து நடை பவனி ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

அத்தோடு ஆசிரியர்களுக்கு விளையாட்டு போட்டிகள், கலை இலக்கிய போட்டிகள் வைக்கப்பட்டு அவர்களுக்கு பரிசில்கள், சான்றிதழ்கள், பதக்கங்கள் ஆகியன வழங்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் திரு.முத்துகுமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு நுவரெலியா கல்வி வலயத்தின் கல்விப் பணிப்பாளர் பியதாச, உதவிக்கல்விப் பணிபாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் அமைச்சர் உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது,

இன்று எமது நாட்டின் ஜனாதிபதி பல்வேறு சமூக நோக்காக கொண்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களையே முன்னெடுத்து வருகிறார். கல்விக்காக அதிக பணத்தினை செலவு செய்கிறார். பல திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். சமூகம் சார்ந்த பல திட்டங்கள் அவரிடம் காணப்படுகின்றன. மரம் நடுகை பசுமையான இலங்கையாக இருக்க வேண்டும் என்பது ஒரு கொள்கை, இந்த நாட்டிலே போதை வஸ்து இருக்க கூடாது என்பது மற்றுமொரு கொள்கை.

இன்று மதுபானம், சிகரட் போன்றவை ஒழிக்கப்பட வேண்டும். சமூக பொருளாதார கொள்கையிலே மக்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். அது மட்டு மல்லாது  போதை வஸ்து சீறுநீரக நோய், போன்றவற்றினை ஒழிப்பதற்கு பாடுபட்டு வருகிறார். இப்படி சமூக சிந்தனையான அவரது செயற்பாடுகளை நாங்கள் பாராட்டாமல் இருக்க முடியாது.

நிச்சயமாக பாராட்டபட வேண்டும். அதே நேரம் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பொருளாதார அபிவிருத்தியிலே இந்த நாட்டை சீர் செய்வது எப்படி என்று பல நாடுகளின் உதவியுடன் முன்னெடுத்து வருகிறார் என்பதை நாங்கள் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

ஆகவே எமது நாட்டிற்காக இந்த இரண்டு பேரும் நல்ல திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து செய்தால் இந்த நாட்டில் புரையோடிக்கொண்டிருக்கின்ற இனப்பிரச்சினைக்கும் தீர்வு கிட்டுவதோடு இந்த நாடு சுபீட்சம் காணும் என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here