வாகன அனுமதிப்பத்திரத்தில் என்ன நடந்தது?: நடந்ததை விளக்குகிறார் முதலமைச்சர்!

முதலமைச்சரின் வாகன அனுமதிப் பத்திரம் தொடர்பாக ஊடகங்களில் செய்தி தவறாக திரித்து வெளியிடப்பட்டதையடுத்து, முதலமைச்சர் அலுவலகம் அது குறித்த விளக்கமொன்றை அனுப்பி வைத்திருக்கிறது.

வாகன அனுமதிப்பத்திர விவகாரத்தின் உண்மையான பின்னணி அதில் விளக்கப்பட்டுள்ளது.

“இரண்டரை வருடங்கள் பூர்த்தி செய்த வடமாகாணசபையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் இறக்குமதித் தீர்வை நீக்கிய வாகன அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்த இறக்குமதித் தீர்வை நீக்கிய வாகன அனுமதிப் பத்திரங்களினூடாக 40,000 அமெரிக்க டொலருக்கு குறைவான வாகனமொன்றை தீர்வை நீக்கி இறக்குமதி செய்து பயன்படுத்த முடியும். முதலமைச்சர் என்ற வகையில் நான் கூடுதல் பெறுமதியுடைய 65,000 அமெரிக்க டொலர் பெறுமதியுடைய இறக்குமதித் தீர்வை நீக்கிய வாகனமொன்றை பெற்றுக்கொள்வதற்கு தகுதியுடையவனாக இருந்த போதும் எனக்கும் 40,000 அமெரிக்க டொலருக்குக் குறைவான அனுமதிப்பத்திரமே வழங்கப்பட்டிருந்தது. மற்றைய உறுப்பினர்களைப் போன்று எனக்கு இந்த அனுமதிப்பத்திரம் தரப்பட்டிருந்தது.

அதன் பின் தற்செயலாகவே முதலமைச்சருக்கு வழங்கப்பட வேண்டிய வாகனம் 65000 அமெரிக்க டொலர் பெறுமதியுடைய இறக்குமதித் தீர்வை நீக்கிய அனுமதிப்பத்திரமே என்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே முன்னைய குறைந்த பெறுமதிக்குரிய அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்து எனது பதவிக்கு உரித்தான 65,000 அமெரிக்க டொலர் பெறுமதியுடைய இறக்குமதித் தீர்வை நீக்கிய அனுமதிப் பத்திரத்தை வழங்கி உதவுமாறு கோரிக்கை விடுத்திருந்தேன். நாட்டின் மற்றைய முதலமைச்சர்கள் யாவருக்கும் இந்தக் கூடிய பெறுமதி வாய்ந்த வாகன அனுமதிப்பத்திரமே வழங்கப்பட்டிருந்தது.

அமைச்சின் கோரிக்கைக்கு இணங்க குறைந்த பெறுமதி வாகனத்திற்கான எனக்குத் தரப்பட்ட அனுமதிப்பத்திரம் அவர்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டு அது இரத்து செய்யப்பட்டது. எனக்கு கூடிய பெறுமதியுடைய வாகன அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் என்றும் இது சம்பந்தமாக தவறு நேர்ந்திருந்தமையும் அமைச்சினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. அந்தத் தவறைத் திருத்த அமைச்சர்கள் குழாம் முன் அனுமதி பெற வேண்டியிருந்ததால் அதனைப் பெற்றுத் தருவதாக அமைச்சினால் கூறப்பட்டது. 40000மோ 65000மோ அனுமதிப்பத்திரமானது இறக்குமதித் தீர்வை மட்டுந்தான் நீக்கியது. வாகனமானது குறித்த பணத்தைச் செலுத்தியே இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. அதற்கான பணத்தை நான் என் மகனிடம் இருந்து பெற இருந்தேன்.

ஆனாலும் அமைச்சு அலுவலகங்களில் எனது அனுமதிப் பத்திரம் தொடர்பான கோரிக்கை பல மாதங்களாகக் கிடப்பில் போடப்பட்டு கடந்த வாரமே அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

அதே காலகட்டத்தில் இந்த அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் இறக்குமதித் தீர்வை நீக்கிய வாகனங்களை இறக்குமதி செய்வது ஒருவருட காலத்திற்கு அரசினால் பிற்போடப்பட்டிருந்தது. எனவே அமைச்சர் கௌரவ பைசர் முஸ்தாபா அவர்கள் குறித்த அனுமதிப்பத்திரத்திற்கு வடமாகாணசபை முதலமைச்சர் உரித்துடையவர் என்பதை அமைச்சரவைக்குக் கூறி அனுமதி பெற விழைந்த போது கௌரவ மங்கள சமரவீர அவர்கள் இறக்குமதி பிற்போடப்பட்டுள்ளதால் அனுமதிப்பத்திரம் வழங்கலாகாது என்று கூறியதால் அமைச்சரவை அனுமதிப்பத்திரத்தை வழங்குவதைத் தடை செய்ததாகக் கேள்விப்படுகின்றேன்.

ஆனால் வடமாகாண முதலமைச்சரின் உரித்து வேறு, அதை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் வேறு என்பதை கௌரவ மங்கள சமரவீர அவர்கள் சரியாகப் புரியாது விட்டுள்ளார் என்றே தோன்றியது. அதனால் அவருக்கு உடனே கடிதம் எழுதி அனுமதிப்பத்திரம் எனக்கு வழங்க வேண்டியது சட்டப்படி எனது உரித்து என்றும் ஆனால் அதனை ஒரு வருடத்திற்கு நடைமுறைப்படுத்தாது வைத்திருப்பது எனது கடமை என்றும் கூறி அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு கேட்டுள்ளேன்.

மற்றைய உறுப்பினர்களுக்கு அவர்களுக்குரிய குறைந்த தொகையிலான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு அவர்கள் ஏற்கனவே நடவடிக்கைகளில் இறங்கிவிட்டார்கள் என்று அறிகின்றேன். என்னுடைய குறைந்த பெறுமதி வாகன அனுமதிப்பத்திரமோ அமைச்சினால் திரும்பப் பெற்று அது ரத்துச் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு ரத்துச் செய்தமைக்குக் காரணம் அமைச்சரவை கூடிய பெறுமதிக்குரிய அனுமதிப்பத்திரத்தைக் கட்டாயம் வழங்கும் என்ற அவர்களின் திடமான நம்பிக்கையே. தற்போது கூடிய பெறுமதிக்குரிய அனுமதிப் பத்திரமும் தடைசெய்யப்பட்டுள்ளது.

இதனை சில கொழும்பு சிங்களப் பத்திரிகைகள் சரியாக பிரசுரித்த போதும் ஆங்கிலப் பத்திரிகைகளும் தமிழ்ப் பத்திரிகைகளும் தங்கள் தங்கள் கைவண்ணங்களையும் இந்த அறிக்கையுடன் சேர்த்து புதிய கோணத்தில் நான் ஏதோ வரிச்சலுகை அடிப்படையில் வழங்கப்படுகின்ற அனுமதிப்பத்திரத்திற்காக ஏங்கித்தவிப்பதாகவும் அது கிடைக்காததால் நான் குழப்பத்தில் உள்ளதாகவும் வர்ணனை செய்திருப்பது வருத்தத்திற்குரியது. அவ்வாறு வரிச்சலுகை அனுமதிப் பத்திரத்தின் மீது அவ்வளவு ஈடுபாடுடையவனாக நான் இருந்திருப்பின் கிடைத்த அந்த அனுமதிப் பத்திரம் கைவசம் வந்தவுடனேயே அதனைப் பயன்படுத்தியிருப்பேன் அல்லது உயர் பெறுமதியுடைய புதிய அனுமதிப் பத்திரத்திற்காக உடனேயே விண்ணப்பித்திருப்பேன். தமது தவறை ஏற்று அமைச்சு அதனை சீர் செய்ய முன்வந்ததால்த்தான் நான் இதுகாறும் வாளாதிருந்தேன்.

எனினும் கடைசியாக அமைச்சர் அவைக்கு மேற்படி விடயம் வந்த போது திரு.பாஸ்கரலிங்கம் அவர்களிடம் அனுமதிப்பத்திரம் பெறுவது எனது உரித்து என்றும் தடையை நடைமுறைப்படுத்துவது எனது கடமை என்றுங் கூறியிருந்தேன். அதற்கு அவர் அமைச்சர்களுக்கு அது தெரியுந்தானே என்றார். அதனால் நான் நிம்மதியாக இருந்தேன். ஆனால் அமைச்சர்களுக்கு அது புரியவில்லை என்று இப்பொழுதுதான் அறிந்து கொண்டேன்.

அரசியல் ரீதியாக என்மீது ஏதாவது கோபங்களிருப்பின் எனது அரசியல் பற்றி நேரடியாக எந்தப் பத்திரிகையாக இருந்தாலும் விமர்சிக்க வேண்டும். அதனை விடுத்து இது போன்ற அற்பத்தனமான செய்திகளைப் பிரசுரித்து உங்கள் பத்திரிகையின் கௌரவத்தையும் பத்திரிகைத் தர்மத்தையும் குறைத்துக் கொள்ளாதீர்கள் என குறிப்பாக தமிழ்ப் பத்திரிகைகளிடமும் ஆங்கிலப் பத்திரிகைகளிடமும் அன்புடன் வேண்டுகின்றேன்.

கௌரவ அமைச்சர் மகிந்த சமரசிங்க அவர்கள் வடமாகாணசபை முடியுங்காலத்தில் விக்னேஸ்வரனுக்கு வாகனம் ஏன் என்று கேட்டிருப்பதாக இன்று பத்திரிகையில் வாசித்தேன்.

அவர் அவர்களின் பதவிக்கேற்றவாறு குறிப்பிட்ட காலம் பதவியில் இருந்தவர்களுக்கே தீர்வை நீக்கிய வாகனங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. மற்றவர்கள் போல் எனக்கிருக்கும் உரித்தை நான் கேட்டேனே ஒளிய விசேடமாக எந்த ஒரு சலுகையையும் நான் கேட்கவில்லை. சிரேஷ்ட அமைச்சரான அவரும் என் நண்பர் அமைச்சர் இராஜித சேனரத்தினவும் என்னை உண்மைக்குப் புறம்பாக விமர்சிப்பதைப் பார்த்தால் எனக்கு அனுமதிப்பத்திரம் வழங்காமைக்குப் பின்னணியில் அரசியல் நோக்கங்கள் இருந்துள்ளனவோ என்று எண்ண வேண்டியுள்ளது.

பொதுவாகத் தமிழ்த் தலைவர்களைத் தமது வழிக்குக் கொண்டுவரும் யுக்திகளில் ஒன்றை அவர்கள் பாவித்திருக்கின்றார்களோ என்று எண்ணவேண்டியுள்ளது. உரித்துக்கும் சலுகைக்கும் வித்தியாசம் தெரியாதவர்களாக கௌரவ காமினியும் கௌரவ இராஜிதவும் இருக்க முடியாது என்பதே எனது அனுமானம்“ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here