வீரசிங்கம் மண்டபம் ரெடி: 24ம் திகதி தனிக்கட்சி அறிவிக்கிறாரா முதலமைச்சர்?

வடக்கு முதலமைச்சர் என்ன செய்ய போகிறார் என்ற கேள்வி போய், புதிய கட்சியை அறிவிக்கிறாரா? எப்பொழுது அறிவிக்கிறார் என்ற கட்டத்தில் வந்து நிற்கிறது. முதலமைச்சர் அடுத்து என்ன செய்ய போகிறார்?

24ம் திகதி வீரசிங்கம் மண்டபத்தில் நடக்கும் கூட்டத்தில் தனிக்கட்சி அறிவிப்பு வெளியிடுவாரா? என்ற கேள்விகளே இப்பொழுது அதிகம் பேசப்படுகின்றன.

முதலமைச்சரின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்த வரைபடத்தை ஓரளவிற்கு தமிழ்பக்கம் பெற்றிருக்கிறது. முதலமைச்சரின் ஆலோசகர்கள், அவரது அணியிலிருப்பவர்களுடன் பேசியதில் கிடைத்த தகவல்களின் ஒரு பகுதியை தமிழ்பக்க வாசகர்களிற்காக இப்பொழுது தருகிறோம்.

ஒக்ரோபர் 23ம் திகதி வடமாகாணசபையின் ஆயுள்காலம் முடிவடைகிறது. வடமாகாணசபையின் ஆயுள்காலம் முடிவதற்கு முன்னர், தனி அணி பற்றிய எந்த அறிவித்தலையும் விடுவதில்லையென்ற உறுதியான முடிவை முதலமைச்சர் எடுத்திருக்கிறார். காரணம், “தன்னை இந்த இடத்திற்கு அழைத்து வந்தது கூட்டமைப்பு. அந்த பதவியில் இருக்கும் வரை கூட்டமைப்பிற்கு எதிரான நகர்வுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பது முறையல்ல“ என முதலமைச்சர் நினைப்பதாக தெரிகிறது. அவருக்கு நெருக்கமானவர்களுடன் நடக்கும் கலந்துரையாடல்களிலும் இதை அழுத்திக் குறிப்பிட்டிருக்கிறார்.

கடந்த ஒரு மாதமாகவே, தனக்கு நெருக்கமானவர்கள்- அடுத்த தேர்தலில் தன்னுடன் இணைந்து நிற்பார்கள் என கருதுபவர்களுடன் பேச்சு நடத்தி வருகிறார். அப்படி சில மாகாணசபை உறுப்பினர்களுடனும் பேசியிருக்கிறார்.

அந்த சந்தர்ப்பத்தில்- “உடனடியாக கட்சி அறிவிப்பு விடமாட்டேன்“ என தெளிவாக சொல்லியிருக்கிறார்.

அப்படியானால் முதலமைச்சரின் நகர்வு என்ன என அவர்கள் சந்தேகத்துடன் கேட்க, தனது திட்டத்தை விபரமாக குறிப்பிட்டிருக்கிறார்.

“கட்சி, கூட்டணி பற்றி யாரும் சிந்திக்க தேவையில்லை. தேர்தலை இலக்கு வைத்து செயற்படவும் வேண்டாம். மாகாணசபை கலைந்ததும், தமிழ் மக்கள் பேரவையின் மூலம் ஒரு மக்கள் இயக்கத்தை கட்டியெழுப்புவோம். ஒவ்வொரு ஊருக்கும் செல்வோம். அரசியல்கைதிகள் விடுதலை, நில விடுவிப்பு, அரசியல்தீர்வு என போராடுவதற்கு நிறைய விசயங்கள் உள்ளன. அகிம்சைரீதியிலான போராட்டத்தை விடாமல் தொடர்வோம். போராட்டங்களை தொடர்ந்து கொண்டிருக்கும் சமயத்தில் ஏதாவது தேர்தல் வந்தால்- நாமும் அதில் போட்டியிட வேண்டுமென மக்கள் நினைத்தால்- போட்டியிடுவோம். அப்போது எமது நிலைப்பாட்டை ஏற்று யாரெல்லாம் எம்முடன் வருகிறார்களோ, அவர்களை ஏற்றுக்கொள்வோம். அவர் வேண்டாம், இவர் வேண்டாம் என்ற எந்த சிக்கலும் வேண்டாம்“ என்று தனது அணியிலுள்ள மிகச்சிலரிற்கு திட்டத்தை முதலமைச்சர் சூசகமாக தெரிவித்துள்ளார்.

ஆக, இப்போதைக்கு முதலமைச்சர் கட்சியையோ, கூட்டணியையோ அறிவிக்கும் எண்ணத்தில் இல்லை.

ஆனால், முதலமைச்சர்தான் அப்படி எண்ணத்தில் இல்லையே தவிர, தமிழ் மக்கள் பேரவைகாரர்கள் அப்படியான எண்ணத்துடன் மட்டுமே இருக்கிறார்கள். முதலமைச்சரை வைத்து எப்படியாவது கட்சியை தொடங்க வைத்து விட வேண்டுமென அவர்கள் விரும்புகிறார்கள்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எவ், மற்ற கட்சிகளில் இருந்து உடைந்து வருபவர்களை ஒன்றிணைத்து, முதலமைச்சர் தலைமையில் ஒரு கூட்டணி அமைக்கலாமென அவர்கள் முயற்சிக்கிறார்கள். இதற்காக பேரவை பிரமுகர்கள் ஒவ்வொரு வாரமும் தவறாமல் முதலமைச்சரை சந்தித்து இதை வலியுறுத்தி வருகிறார்கள். இந்த சந்திப்புக்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டாம் நிலை தலைவர் ஒருவரும் தொடர்ச்சியாக கலந்து கொண்டு வந்திருக்கிறார்.

இந்த நிலையில் மிக அண்மையில்- கஜேந்திரகுமார் ஜெனீவா புறப்படுவதற்கு முன்பாக- தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர்கள், முதலமைச்சரை சந்தித்து, சுரேஷ் பிரேமச்சந்திரனை இணைக்காமல் கூட்டணி அமைக்கலாமென தெரிவித்தனர். எனினும், தனது அணியில் சுரேஷ் ஒரு அங்கமாக இருப்பார் என்பதை முதலமைச்சர் கொஞ்சம் அழுத்தமாக தெரிவித்துள்ளார். இது பற்றிய பேச்சு நீள, முதலமைச்சர் வித்தியாசமான ஒப்ஷன் ஒன்றை முன்னணிக்கு கொடுத்துள்ளார்.

“நீங்கள் என்னுடன்தான் கூட்டணி வைக்கிறீர்கள். ஆசன பங்கீட்டில் இரண்டு தரப்பாக பிரிக்கலாம். அதில் பிரச்சனையில்லை. ஆனால் அதை நான் யாருக்கு பகிர்கிறேன் என்பதில் தலைபோடாதீர்கள். ஈ.பி.ஆர்.எல்.எவ் எனது தரப்பில்- எமது கட்சிக்குள்ளால்- களமிறங்கும். நீங்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியுடன் ஒப்பந்தம் செய்ய தேவையில்லை“ என்ற விளக்கத்தை கொடுத்து முன்னணியை மெர்சலாக்கியிருக்கிறார்.

இதற்குள் முதலமைச்சர் தரப்பில் கட்சியொன்றை வாங்கி பதிவுசெய்யும் முயற்சியும் நடக்கிறது. ஏனெனில் இப்பொழுது புதிய கட்சிகள் பதிவுசெய்ய முடியாது. பதிவுசெய்யப்பட்டவற்றை வாங்குவதே வழி. இதற்கு அதிக பணம் தேவை. இதனால்தான், முதலமைச்சர்களிற்குரிய வாகன அனுமதிப்பத்திரத்தை பெற முயன்றார்.

இதற்குள் திடீரென ஒரு பரபரப்பு இப்பொழுது தோன்றியுள்ளது. முதலமைச்சர் 24ம் திகதி தனிக்கட்சி அறிவித்தல் விடுவாரா? அன்று முக்கிய கூட்டமொன்றை கூட்டுவது எதற்காக? என்ற கேள்விகள் அரசியலரங்கில் தீவிரம் பெற்றுள்ளது.

முதலமைச்சர் தரப்பில் பேசியதில், இது பற்றியும் சில தகவல்களை பெற்றோம்.

23ம் திகதி மாகாணசபையின் ஆயுள்காலம் முடிவடைகிறது. அன்று மாலை தேனீர் விருந்துபசாரத்துடன் மாகாணசபை கலைகிறது. 23ம் திகதி அமர்வில் யாரும் வழக்கமான குழப்பமோ, குற்றச்சாட்டோ, குத்தல் கதைகளோ கதைக்க அனுமதிக்க மாட்டேன் என்று அவைத்தலைவர் கண்டிப்பாக உறுப்பினர்களிற்கு அறிவித்து விட்டார். இதனால் அஸ்மின், சயந்தன் அணியின் வழக்கமான நடவடிக்கை அன்று நடக்காதென நம்பலாம். பரஸ்பரம் பிரியாவிடை மட்டுமே அன்று.

அன்றிரவு (23) யாழ் நகரிலுள்ள விடுதியொன்றில் முதலமைச்சரின் இராப்போசன விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தன்னுடைய அதிகாரிகள், பணியாளர்கள் குழாமிற்கு முதலமைச்சர் விருந்தளித்து, நினைவுப்பொருட்கள் வழங்குகிறார்.

24ம் திகதி தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம்.

இதற்காக யாழ் வீரசிங்கம் மண்டபம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் முதலமைச்சர் தனது தனிக்கட்சி அறிவிப்பை வெளியிட வேண்டுமென தமிழ்மக்கள் பேரவை பிரமுகர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இனியும் தாமதிக்க முடியாதென்பது அவர்களின் நிலைப்பாடு. முதலமைச்சர் தனது மக்கள் இயக்கத்தின் மூலம்- பகிரங்க அறிவிப்பின்றி செயற்படுவோம்- என அவர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனால், இன்னும் 24ம் திகதி கூட்டத்தில் என்ன நடக்குமென்பது பற்றிய தெளிவான முடிவு எட்டப்படவில்லை. எனினும், முதலமைச்சர் தனது முடிவை இலகுவில் மாற்றமாட்டார் என்ற அடிப்படையில், அன்றைய தினம் சடுதியான அறிவிப்புக்களிற்கு வாய்ப்பில்லையென்றுதான் தெரிகிறது.

தனது எதிர்கால பயணம் எப்படியிருக்குமென்பது குறித்த ஒரு கொள்கை விளக்கம் மட்டுமே இடம்பெறுமென்பதே இன்று வரையான நிலைப்பாடு.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here