விடுதலைப்புலிகளின் நினைவிடத்தில் அரசியலா?: தீருவிலில் பொதுமக்கள் கொதிப்பு; ரெலோ பின்வாங்கியது!

விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகள் புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட பன்னிரண்டு போராளிகளின் நினைவுநாளான இன்று, அவர்களின் நினைவுத்தூபி அமைந்திருந்த இடத்தில் பிறிதொரு தூபி அமைக்க முயன்ற வல்வெட்டித்துறை நகரசபை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் விரட்டப்பட்டுள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை காலை வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் குமரப்பா, புலேந்திரனின் நினைவுத் தூபி அமைக்கப்பட்டிருந்த இடத்தில், அனைத்து இயக்கங்களில் இருந்தும் உயிரிழந்தவர்கள் நினைவாக தூபியை அமைப்பதற்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் அதனை எதிர்த்து வல்வெட்டித்துறை நகர சபையின் சுயேட்சைக் குழுவினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனால் இரு தரப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டு அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அடிக்கல் நாட்டவதற்கு வெட்டப்பட்ட குழியை மண்போட்டு மூடியதோடு அங்கு வந்திருந்தவர்களையும் விரட்டியதால் பரபரபான சூழ்நிலை நிலவியுள்ளது.

இதன்போது, அடிக்கல் நாட்டும் இடத்திற்கு வருகை தந்த சுயேட்சைக் குழு உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் குமரப்பா புலேந்திரனின் தியாகத்தில் அரசியல் செய்யக்கூடாது, இதனை நிறுத்த வேண்டுமென்று கோரினர்.

எதிர்ப்பிற்கு முகம் கொடுக்க முடியாத, ஆளும்கட்சி அணி அங்கிருந்து வெளியேறி சென்றது.

இதேவேளை, அந்த தூபி அமைக்கும் பணிக்கு எதிராக பொலிசார் பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்தில் இடைக்கால தடைகோரி விண்ணப்பம் செய்திருந்தனர். அதில் விடுதலைப்புலிகளின் தூபி அமைக்க மேற்கொள்ளப்படும் முயற்சியை இடைநிறுத்தும்படி கோரியிருந்தனர்.

இதையடுத்து, இன்று பகல் 12 மணிக்கு வல்வெட்டித்துறை நகரசபை தலைவரை மன்றில் முன்னிலையாகுமாறு பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டளையை அடிக்கல் நாட்டும் இடத்திற்கு வந்த பொலிசார், நகரசபை தலைவரிடம் கையளித்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here