சுமந்திரன் கொலை சதி வழக்கு: முன்னாள் போராளிகளிற்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனைக் கொலைசெய்ய முயற்சித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் போராளிகளான 5 சந்தேகநபர்களுக்கும் எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் இன்று (4) குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

எம்.ஏ.சுமந்திரனைக் கொலை செய்ய முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சியைச் சேர்ந்த காராளசிங்கம் குலேந்திரன், ஞானசேகரலிங்கம் ராஜ்மதன், முருகையா தவேந்திரன், வேலாயுதன் விஜயகுமார் மற்றும் லூயிஸ் மரியநாயகம் அஜந்தன் ஆகியயோர் 2017ஆம் ஆண் பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டனர்.

ஐவருக்கும் எதிராக போதைப்பொருள் தடுப்பு கட்டளை சட்டம், நிதிச் சலவைத் தடுப்பு சட்டம் , பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதி வழங்கல் மற்றும் ஊக்குவிப்புக்கு எதிரான சட்டம் மற்றும் அபாயகரமான ஆயுதங்கள் தடுப்பு சட்டம் உள்ளிட்டவையின் கீழ் கிளிநொச்சி நீதிவான் மன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நீதிவான் மன்றின் உத்தரவில் 5 பேரும் 9 மாதங்கள் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் பிணையில் விடுவித்தது.

பின்னர் கைது செய்யப்பட்டு, சுமந்திரன் கொலை சதி குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இன்று கொழும்பு, இலக்கம் – 6 சிறப்பு மேல் நீதிமன்றில் நீதிபதி சம்பத் ஜானகிய ராஜரத்ன முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, பிரமுகர் ஒருவரைக் கொலை செய்ய முயற்சித்தமை, சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் ஐவர் மீதும் தமிழ் மொழியில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

சந்தேகநபர்களுக்கு குற்றப்பத்திரிகை வாசித்துக் காண்ப்பிக்கப்பட்டது. அவர்கள் நிரபராதிகள் என மன்றுரைத்தனர்.

வழக்கை மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் முன்னெடுக்க சம்மதித்த சந்தேகநபர்கள், தங்களின் வழக்கை யாழ்ப்பாணத்திற்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்தனர்.

அவர்களது கோரிக்கையை நிராகரித்த மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் ஜானகிய ராஜரத்ன, தேவை ஏற்படும் பட்சத்தில் அரச செலவில் சட்டத்தரணிகளை ஒழுங்குப்படுத்தித் தருவதற்கு மன்று நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்தார்.

அத்துடன், வழக்கு விசாரணையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம் திகதிக்கு நீதிமன்று ஒத்திவைத்தது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here