யாழ் காப்பகத்தில் இருந்து குழந்தை வெளிநாட்டுக்கு விற்கப்பட்டதா?: அதிர வைக்கும் குற்றச்சாட்டு!

நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்களத்திடம் பாரப்படுத்தப்பட்ட குழந்தையொன்று வெளிநாட்டு தம்பதிக்கு விற்கப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. திணைக்களத்தின் உயரதிகாரியொருவர், காப்பகத்தின் கிறிஸ்தவ கன்னியாஸ்திரி ஆகியோர் இந்த விவகாரத்தில் சூத்திரதாரியென குற்றம்சாட்டப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அதிகாரிகளிற்கிடையிலான மோதல், உள்முரண்பாடுகளால் சில தகவல்கள் வெளியில் கசிவதுண்டு. அப்படியொரு சூழ்நிலையில் வெளியில் கசிந்துள்ளது இந்த விவகாரம்.

2015ஆம் ஆண்டு யாழிலிருந்து, குறிப்பிட்ட பெண் குழந்தையொன்று கடத்தப்பட்டு நுவரெலியாவில் வைத்து ஜேர்மன் தம்பதிக்கு ஒப்படைக்கப்பட்டதாக, வடக்கு நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்கள உயரதிகாரியொருவர் மீது துறைரீதியான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இது குறித்த எழுத்து மூல முறைப்பாட்டை வடக்கு பிரதம செயலாளரிற்கு அனுப்பிவைக்கும் நடவடிக்கைகள் நடந்து வருவதை தமிழ்பக்கம் அறிந்துள்ளது.

2015ஆம் ஆண்டு கிளிநொச்சியை சேர்ந்த யுவதியொருவர் குழந்தை பிரசவித்திருந்தார். அவர் குழந்தையை பொறுப்பேற்க விரும்பாததால், நீதிமன்ற உத்தரவிற்கமைவாக குழந்தை மல்லாகத்தில் உள்ள கிறிஸ்தக காப்பகம் ஒன்றிற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது, அந்த குழந்தையே விற்பனை செய்யப்பட்டது என்றே குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

குறித்த காலத்தின் பின் குழந்தையை நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு நிலையம் பதிவு செய்து, சான்றுபெற்ற சிறுவர் இல்லமொன்றில் ஒப்படைக்க வேண்டும். அந்த குழந்தையை பதிவுசெய்யாமல், ஒன்றரை வருடங்கள் வரை குறிப்பிட்ட காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு, கன்னியாஸ்திரி ஒருவரின் துணையுடன் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

காப்பகத்தில் இருந்து குழந்தை வவுனியாவிற்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் நுவரெலியாவிற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு வைத்தே ஜேர்மன் தம்பதிக்கு விற்பனை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here