விக்னேஸ்வரன் இன்னொரு கஜேந்திரகுமாரா?

பரசுராம்

இது அறிக்கைப் போர் காலம். தேர்தல் இன்னும் நெருக்கவில்லையென்பதால், மேடையில் ஏறி பேசாமல், அலுவலகங்களில் இருந்து அறிக்கைகளை தட்டிவிட்டு, பரபரப்பை ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள் அரசியல் கட்சியினர். தமிழ் தேசிய கூட்டமைப்பு, முதலமைச்சர் தரப்பு, ஈ.பி.டி.பி, வடக்கு எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா ஆகிய தரப்பினர் இந்த அறிக்கைப் போரில் முன்வரிசையில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். பொதுவாகவே பேஸ்புக், அறிக்கை விவகாரங்களில் பிய்த்து உதறும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரர்கள், இந்த விடயத்தில் திடீரென இவர்களின் விஸ்பரூபத்தை பார்த்து மிரண்டு விட்டார்கள் போல தெரிகிறது.

ஆயினும், முதலமைச்சர்தான் இதில் ஒரு அடி முன்னால் ஓடிக் கொண்டிருக்கிறார் போல தெரிகிறது. வாராந்த கேள்வி பதில், உரைகள், அவசர அறிக்கைகள் என பிய்த்து உதறிக் கொண்டிருக்கிறார்.

ஒரு காலத்தில் “சொல்லுக்கு முன்னால் செயல்“ இருக்க வேண்டும் என்ற வேத மந்திரத்துடன் இளைஞர்களும், யுவதிகளும் செத்து மடிந்து கொண்டிருந்த இனத்தில், தேசத்தில் இன்று அறிக்கைகளாலும், மேடைப் பேச்சுக்களாலுமே ஒரு அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட்டு கொண்டிருக்கிறது. செயல்களில் ஈடுபடாமல் சொல்களால் மட்டும் அரசியலை செய்யலாமென கருதும் ஒவ்வொருவருக்கும் வாய்ப்பான காலமாக இது மாறிவிட்டது.

அடுத்த மாகாணசபை தேர்தலிலும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படும் முதலமைச்சர் விக்னேஸ்வரனும், இதே பாரம்பரியத்தில் முன்னிலை வகிக்கிறார். தமிழ் தேசிய கூட்டமைப்பில் குறைபாடுகள் உள்ளதாக கடந்த வாரமும் நீண்ட அறிக்கையொன்றை வெளியிட்டு, இனியும் கூட்டமைப்பில் நீடிக்க தயாரில்லையென்பதை சூசகமாக குறிப்பிட்டு விட்டார்.

கடந்த இரண்டு வாரமாக முதலமைச்சர் தரப்பிலிருந்து வெளியான அறிக்கைகள், அவர் கூட்டமைப்பிலிருந்து வெளியில் சென்றுவிட்டார் என்ற செய்தியை தெளிவாக உணர்த்தியது. இம்மாதம் 07ம் திகதி கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் சந்திப்பொன்றிற்கு திட்டமிட்டிருந்த நிலைமையில், சம்பந்தனிற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் விதமான அறிக்கைகள் முதலமைச்சர் தரப்பிலிருந்து வெளியாகியிருந்தது. அதிகமும் இராஜதந்திர அணுகுமுறைகள் குறைந்த ஒரு நகர்வாக அது கணிக்கப்பட்டிருந்தது.

அறிக்கையாகவோ, கேள்வி பதிலாகவோ நாளாந்தம் முதலமைச்சர் அறிக்கைப் போரில் ஈடுபடுவது, அவர் அதை ஒரு அரசியல் செயற்பாட்டு முறைமையாகவே நம்புகிறாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடியது. வெறும் அறிக்கைகளின் மூலமே தமிழர்களின் அரசியல் பயணத்தை வடிவமைக்கலாம், அறிக்கை முறைமையே ஒரு அரசியல் வழியாகலமென அவர் கருதுகிறாரோ தெரியவில்லை.

2010இல் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கஜேந்திரகுமார் தரப்பு வெளியேறி சென்று, தமிழ் தேசிய மக்கள் முன்னணியை உருவாக்கியது. கடந்த எட்டு வருடங்களில் தன்னை மையப்படுத்திய ஒரு அரசியல் இயக்கத்தை பெருமளவிற்கு அது உருவாக்கியிருக்கவில்லை. அதற்கான பார்வையையும் அது கொண்டிருக்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதான விமர்சனமே ஒரு அரசியல் இயக்கமாக உருவாக முடியாது. ஆனால், தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதையே செய்து கொண்டிருந்தது. அண்மைய சில வருடங்களிலேயே அதில் சிறியளவிலான மாற்றம் தெரிந்தது. இதனாலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாற்றான சக்தியென்ற தனி அடையாளத்தை முன்னணியால் பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது.

கடந்த சில தேர்தல்களை- உள்ளூராட்சி தேர்தல் உட்பட- கவனமாக ஆராய்ந்து பார்த்தால் ஒரு உண்மை புலப்படும். தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறும் வாக்காளர்கள் அப்படியே தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சென்றடையவில்லை. முன்னணிக்கு சமமாக தென்னிலங்கையின் இரண்டு தேசிய கட்சிகளிற்கும் சென்றிருக்கிறார்கள். ஏதோ ஒரு நிலைப்பாடுடைய குறிப்பிட்ட வீதத்தினர் மட்டுமே முன்னணியை சென்றடைந்தார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சிப்பதையே ஒரு அரசியல் இயக்கமாக உருவாக்க முடியாதென்பதையே வரலாறு கற்றுத் தந்திருக்கிறது. அந்த வரலாற்றை கணக்கிலெடுக்காமல், எழுதப்பட்ட வரலாற்றையே மீளவும் நிகழ்த்த முதலமைச்சர் முற்படுகிறாரா என்ற கேள்வி உள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட எல்லா நிகழ்கால கட்சிகளின் மீதும் மக்களிற்கு விமர்சனங்கள் உள்ளதுதான். ஏற்கனவே குறிப்பிட்டதை போல, சொல்லுக்கு முன்னால் செயலிருந்த காலமொன்றை கடந்து வந்த மக்கள் கூட்டம் இது. கடந்த காலத்துடன் ஒப்பிட்டே நிகழ்காலத்தை எடைபோடும். அது செயல் வீரர்களின் காலம். இன்று செயல்வீரர்களென்று யாருமிருக்கிறார்களா என்பது கேள்விக்குறியே.

கூட்டமைப்பை விட கொள்கைரீதியில் வேறுபட்டு நிற்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கூட்டமைப்பு மத்தியுடன் இணக்கமாக உள்ளது, சமஷ்டி முறைமை குறிக்கப்பட்ட அரசியல்தீர்வு இல்லை, இராணுவம் வெளியேற்றப்படுவதில் போதிய அழுத்தம் இல்லையென முதலமைச்சர் குறிப்பிடுகிறார். அனேகமாக இவற்றை கொள்கைரீதியான வேறுபாடுகள் என்பதை விட அணுகுமுறை ரீதியான வேறுபாடுகள் என்பதே பொருத்தமானது. அணுகுமுறைகள் மாற்றமடைவதை கொள்கை மாற்றமாக குறிப்பிடுவது பொருத்தமில்லாதது.

இர்டு தரப்பிற்குமிடையில் கொள்கைரீதியான மாற்றம் இருப்பதாக வைத்தால் கூட, முதலமைச்சர் இந்த விடயங்களில் எப்படியான அணுகுமுறைகளையும், வரைபடங்களையும் வைத்திருக்கிறார் என்பது முக்கியமானது. முதலில் முதலமைச்சர் அதை தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.

எல்லா விடயங்களையும் எதிர்த்து பேசி, அறிக்கை விட்டபடி ஒரு அரசியல் இயக்கத்தை முன்னகர்த்தப் போகிறாரா? அல்லது, வேறு பரந்துபட்ட திட்டங்களை வைத்திருக்கிறாரா?, எப்படியான அரசியல் அணியை கற்பனை பண்ணி வைத்திருக்கிறார்? வெறுமனே தமிழரசுக்கட்சிக்கு எதிரான அணிகளின் சங்கமம் என்ற அடிப்படையிலான கூட்டணியா?- இப்படி பல கேள்விகள் உள்ளன.

அறிக்கைகள், எதையும் தீவிரமாக எதிர்த்தல் என்பவற்றால் தமிழ் தேசியத்தை கட்டமைக்க முடியாது, அந்த நிலைப்பாடுடைய சனத்திரளை ஒன்றிணைக்க முடியாதென்பதை கடந்த சில தேர்தல்கள் உணர்த்திக் கொண்டிருக்கிறது. தமிழ் தேசிய நிலைப்பாடுடைய சனத்திரளை சிதற விடாமல் ஒன்றிணைக்க வேண்டிய தேவை, அந்த கோசத்துடன் அரசியல் செய்யும் எல்லோருக்கும் உள்ளது. முதலமைச்சருக்கும் உள்ளது.

முதலமைச்சர் தமிழ் தேசிய அரசியலில் தொடர விரும்பினால், தமிழ் தேசிய வாக்காளர்களை சிதறடிக்காமல், ஒன்றிணைப்பவராகவே இருக்க வேண்டும். அதற்கு முதலமைச்சரிடம் பலமான அரசியல் அணுகுமுறைகளை கொண்ட, தெளிவான வரைபடம் இருக்க வேண்டியது அவசியம். காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுவிப்பு, இராணுவம் வெளியேற்றல், இனப்பிரச்சனை தீர்வு விடயங்களை எப்படி கையாளப் போகிறேன், அதற்கான வழிமுறைகள் என்னவென்பதை முதலமைச்சர் பகிரங்கமாக பேச வேண்டும்.

வெறுமனே கூட்டமைப்பை விமர்சிப்பதுதான் அரசியலென்றால் ஏற்கனவே இருக்கும் ஈ.பி.டி.பியும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியுமே அதற்கு போதும். அவர்களிலிருந்து எப்படி வேறுபடுகிறேன் என்பதை முதலமைச்சர் வெளிப்படையாக பேசுவதே ஆரோக்கிய அரசியலுக்கு வழிசமைக்கும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here