குடாநாட்டின் நீர்த்தேவைக்கு புதிய திட்டம்: பாலியாற்றிலிருந்து குடிநீர்!

யாழ் குடாநாட்டின் குடிநீர்ப்பிரச்சனையை தீர்ப்பதற்கு மன்னாரின் பாலியாற்று நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரும் யோசனையை உள்ளடக்கிய தீர்மான வரைபு மாகாணசபையின் இன்றைய அமர்வில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனையை ஆசிய அபிவிருத்தி வங்கி ஏற்றுக்கொண்டுள்ளதையடுத்து, இது மாகாணசபையில் தீர்மானமாக நிறைவேற்றப்படவுள்ளது.

யாழ் குடாநாட்டின் குடிநீர் சிக்கலை தீர்க்கும் வழிமுறைகள் ஒவ்வொன்றும் சிக்கலை தோற்றுவித்து வருகிறது. இரணைமடு குடிநீர் திட்டத்திற்கு கிளிநொச்சி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து வடமராட்சி கிழக்கிலிருந்து கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டது. இதற்கு வடமராட்சி கிழக்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையிலேயே பாலியாற்று யோசனை வைக்கப்பட்டுள்ளது.

மூன்று மாதங்களின் முன் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு மற்றும் வடக்கு அதிகாரகளுடனான அபிவிருத்தி முன்மொழிவு கூட்டமொன்றில் வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இந்த திட்டத்தை முன்மொழிந்தார்.

இதையடுத்து இந்த விடயத்தை கையிலெடுத்த அதிகாரிகள் ஆய்வை ஆரம்பித்தனர். கீழ்ப்பாலியாறு வடிநிலத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிதண்ணீர் மேற்கொள்ளும் திட்டம் தொடர்பாக தேசிய வழிநடத்தல் குழு கூட்டத்தில் ஆராயப்பட்டது. மாகாண நீர்ப்பாசன திணைக்களம், வவுனிக்குளம் திட்டத்தின் கீழ் பாலியாற்று வடிநிலத்தில் அண்ணளவாக 165 சதுரகிலோமீற்றர் அளவுடைய நீரேந்து பகுதியை குடாநாட்டிற்கு குடிநீர் விநியோகம் செய்ய சாத்தியமான பகுதியாக அடையாளம் கண்டுள்ளது.

மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தினால் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட சாத்தியப்பாடு ஆய்வின் அடிப்படையில், மன்னார் மாவட்டத்தின் பெரும்பரப்புக்குளத்தில் அண்ணளவாக 37 எம்.சி.எம் கொள்ளவுடைய நீர்த்தேக்கத்தை அமைப்பதன் மூலம் யாழ் குடாவிற்கு குடிநீரை குழாய் மூலம் விநியோகித்து, நீர்த் தேவையை பூர்த்தி செய்யலாமென கண்டறியப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தர்மான வரையே வடமாகாணசபையின் இன்றைய அமர்வில் முன்வைக்கப்படவுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here