வெடுக்குநாறி, குருந்தூர் மலைகளிற்கு வந்த வீரவன்சவின் கட்சியினர்: எதிர்ப்பால் எஸ்கேப்!

முல்லைத்தீவு, குமுழமுனை குருந்தூர் மலையையும், நெடுங்கேணி வெடுக்குநாறி மலையையும் விமல் வீரவன்சவின்  தேசிய சுதந்திர முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்களுடன் இன்று நேரில் சென்று பார்வையிட்டனர். இதன்போது வெடுக்குநாறி மலையில் உள்ளூர் மக்களுடன் அவர்கள் முரண்பட்டு, பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேறி சென்றனர்.

குருந்தூர் மலையில் புத்தர் சிலை நிறுவும் பௌத்த பிக்குகளின் முயற்சி உள்ளூர் மக்களால் முறியடிக்கப்பட்டு நீதிமன்றம் வரை விவகாரம் சென்றுள்ள நிலையில் இனவாதக் கட்சியாக தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு சென்றிருந்தனர்.

தேசிய சுதந்திர முன்னணியின் மூத்த உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுமான பத்ம உதயசாந்த, ஜயந்த சமரவீர ஆகியோரும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளரான மொஹம்மத் முஸம்மில் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினை சேர்ந்த அதிகாரிகளும் குருந்தூர் மலைக்கும் வெடுக்குநாறி மலைக்கும் இன்று சென்றனர்.

இவர்களின் வருகையை அறிந்த உள்ளூர் மக்களும் அங்கு குழுமியிருந்தனர்.

வெடுக்குநாறி மலையின் வரலாற்றை திரித்து, தேசிய முன்னணியினருக்கு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை அவதானித்த பொதுமக்கள், தவறை சுட்டிக்காட்ட முனைய, இருதரப்பிற்குமிடையில் அங்கு முறுகல் ஏற்பட்டது. பதற்றமான சூழல் ஏற்பட்டதையடுத்து, தேசிய சுமந்திர முன்னணியினரை பொலிசார் பாதுகாப்பான அழைத்து சென்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here