ஆட்டையை போட்ட வடக்கு அமைச்சர்: நாளை வெடிக்கவுள்ள பூகம்பம்!

வடமாகாண சுகாதார அமைச்சர், தனது பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் மூக்கு கண்ணாடி வழங்கி, அதில் “திருவிளையாடல்“ செய்தார் என்பதை முதன்முதலில் தமிழ்பக்கம் வெளிச்சமிட்டிருந்தது. வடமாகாண கணக்காய்வு குழு அதை கண்டறிந்து, இந்த வருடம் அமைச்சரிற்கு ஒதுக்கப்பட்ட நிதியை வழங்காமல் விட்டது என்பதையும் குறிப்பிட்டிருந்தோம்.

இந்த விவகாரம் நாளைய வடமாகாணசபை அமர்வில் விஸ்பரூபம் எடுக்கவுள்ளது, அமைச்சரை குறிவைத்து சகல ஆவணங்களுடனும் மாகாணசபை உறுப்பினர்கள் குழுவொன்று களமிறங்குகிறது என்ற தகவலை தமிழ்பக்கம் பெற்றுள்ளது.

வருடா வருடம் அபிவிருத்தி மற்றும் உதவி திட்டங்களிற்கு 6 மில்லியன் ரூபா, பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியென்ற பெயரில் மாகாணசபை உறுப்பினர்களிற்கு வழங்கப்படுகிறது. அவர்கள் தெரிவுசெய்யப்பட்ட உதவித்திட்டங்களை அந்த நிதியில் நடைமுறைப்படுத்துவார்கள்.

வடக்கு சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன், கடந்த மூன்று வருடமாக கண்ணாடி வழங்கலில் முறைகேடுகளில் ஈடுபட்டிருந்தார் என வடக்கு கணக்காய்வு திணைக்களத்தின் குறிப்புக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தையே நாளை சபையில் சில உறுப்பினர்கள் பேசவுள்ளனர்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் திணைக்களம் ஊடாக மூக்கு கண்ணாடி கிட்டத்தட்ட 15 இலட்சத்திற்கும் கட்டம்கட்டமாக, கடந்த மூன்று வருடங்களில் வழங்கப்பட்டுள்ளது.

மூன்றாவது வருடமாக- இம்முறை கண்ணாடி வழங்கலில்- முறைகேடுகள் நடந்துள்ளதாக கண்டறியப்பட்டது. பெருந்தொகையாக கண்ணாடிகள் வழங்கப்பட்டபோதும், அதற்கான கேள்விகோரல் எதுவும் இடம்பெறவில்லை.

கொள்வனவு செய்யப்பட்ட ஒவ்வொரு கண்ணாடியும் 990 ரூபா வீதம் கொள்வனவு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த கண்ணாடிகள் ஒவ்வொன்றும் 350 ரூபா பெறுமதியானதென்று கணக்காய்வு திணைக்களம் குறிப்பிடுகிறது.

குறித்த கண்ணாடிகள் கொழும்பு, முல்லைத்தீவு பகுதியிலுள்ள கடைகளில் கொள்வனவு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அங்கு அப்படியான கடைகள் எதுவுமேயில்லையென்பதை கணக்காய்வு திணைக்களம் கண்டறிந்துள்ளது.

கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் கண்ணாடி கொள்வனவிற்காக ரூ 10 இலட்சத்திற்கும் அதிக தொகை செலவிடப்பட்டிருந்தது. அதில் 5 இலட்சம் ரூபா வரை மோசடி செய்யப்பட்டிருக்கலாமென கூறப்படுகிறது. இவ்வருடம் விடயம் அம்பலமானதையடுத்து, அந்த நிதி வழங்கப்படாமல், மாகாண திறைசேரியில் வரவு வைக்கப்பட்டு விட்டது.

நாளைய வடமாகாணசபை அமர்வில் இந்த விடயத்தை பூதாகாரமாக்க, வடக்கு எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா மற்றும் சில உறுப்பினர்கள் தயாராகி வருவதை தமிழ்பக்கம் அறிந்துள்ளது. இது குறித்த ஆவணங்களை பெறுவதில் இன்று வரை அவர்கள் தீவிரம் காட்டியதையும் அவதானிக்க முடிந்தது.

வடக்கு அமைச்சரவை சர்ச்சையேற்பட்டபோது, புதிய அமைச்சர் தெரிவில் ரெலோ தரப்பில் விந்தன் கனகரட்ணம் தெரிவாகியிருந்தார். எனினும், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தனது மைத்துனரான ஞா.குணசீலனை வடக்கு அமைச்சராக்கும்படி நேரடியாக முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்து, அமைச்சு பதவியை பெற்றுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

1 COMMENT

  1. அட போங்க இது என்ன பெரிய விசயம். எங்கள் காணியில் பத்து லட்சம் செலவில் விளையாட்டு மைதானம் செய்துள்ளார்கள்…அறுபது தூணும் ,ஒரு கேட்டும் நட்டுட்டு
    இரண்டு கோல் போஸ்டும் போட்டு,சுற்று வேலி போடாமல்.?????

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here