சபரிமலை; தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு இல்லை- பெண்களை தடுத்தால் கடும் நடவடிக்கை: பினராயி விஜயன் திட்டவட்டம்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்போவதில்லை, பெண் பக்தர்கள் வந்து செல்ல முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. 10 முதல் 50 வயதுடைய பெண்கள் 48 நாட் கள் விரதம் இருக்க முடியாது என்பதாலும், மாதவிடாய் காலத் தில் அவர்கள் கோயிலுக்குள் நுழையும்போது கோயிலின் புனிதத் தன்மை பாதிக்கப்படும் என்றும் காரணம் தெரிவித்து கோயில் நிர்வாகத்தால் அனுமதி மறுக் கப்பட்டு வந்தது.

இந்த நடை முறையை எதிர்த்து இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கடந்த 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், பெண்களின் வழிபாட்டு உரிமையை பறிப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. எனவே சபரிமலை கோயிலுக்கு செல்லும் உரிமை அனைத்து வயது பெண்களுக்கும் உள்ளது’’ என தீர்ப்பளித்தது. தீர்ப்புக்கு, ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தீர்ப்பை எதிர்த்து வரும் ஏராளமான ‘‘பெண்கள் 50 வயது வரை காத்திருக்க தயார்’’ எனக் கூறி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். தீர்ப்பை எதிர்த்து, பந்தளத்தில் நேற்று ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்ற பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

‘‘சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை. தீர்ப்பை முழு மனதுடன் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். சபரிமலை கோயிலுக்கு செல்லும் பெண்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும்.

சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோலவே சபரிமலை கோயிலுக்கு பெண்கள் வந்து செல்ல தேவையான வசதிகள் செய்துத்தரப்படும். இதுதொடர்பாக கோயில் நிர்வாகத்துக்கு ஏற்கெனவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன’’ எனக் கூறினார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here