விடுவிக்கப்பட முடியாதென கூறப்பட்ட மூன்று அரசியல் கைதிகளும் யார்?… பின்னணி என்ன?

அரசியல் கைதிகளில் இருவரை புனர்வாழ்வளித்து விடுதலை செய்யவும், மூவரின் வழக்குகளை துரிதப்படுத்தி சாதகமான முடிவுகளை எடுக்கலாமென நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் உறுதியளித்த அரசு, மூன்று அரசியல் கைதிகள் விடயத்தில் கடுமையான முடிவுகளை எடுத்துள்ளது. அவர்களிற்கு எந்த சலுகையும் காண்பிக்க முடியாது என அரசு நேரடியாக தெரிவித்துள்ளது.

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் இலங்கையில் அனைத்து சிறைகளிலும் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்தும் நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், நீதி அமைச்சர் தலதா அதுக்கோரள மற்றும் சட்ட மா அதிபர் ஜயந்த ஜெயசூரிய ஆகியோருடன் பேச்சு நடத்தியிருந்தார். இதன்போதே இந்த விடத்தை சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகள் இராசதுரை திருவருள், மதியரசன் சுலக்சன், கணேசன் தர்சன் ஆகிய மூவரையுமே சலுகை வழங்கப்பட்டு விடுவிக்க முடியாது என்று அரச தரப்பால் கூறப்பட்டுள்ளது.

அநுராதபுரத்தில் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் சம்பந்தமாக சட்ட மா அதிபர் விளக்கங்களைக் கொடுத்துள்ளார். அதன் பிரகாரம், 4 பேருக்கு அவர்களுடைய கூட்டு ஒப்புதலை ஏற்றுக்கொண்டு அவர்கள் விண்ணப்பித்துள்ளவாறு புனர்வாழ்வுக்கு அனுப்பி விடுவிப்பதற்கு இணங்கியுள்ளனர்.

மூன்று பேர் தொடர்பாக எவ்வித மாற்றங்களும் செய்ய முடியாது என அறிவித்திருக்கின்றார்கள் என்று இந்த கலந்துரையாடலையடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

யார் அந்த மூவர்?

2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா மேல் நீதிமன்ற நியாதிக்க எல்லையான புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் 18 கடற்படை சிப்பாய்களுக்கும், 8 இராணுவச் சிப்பாய்களுக்கும் உயிரிழப்பை விளைவித்தனர் என்று தெரிவித்து பயங்கரவாத தடைக் கட்டளைச்சட்டத்தின் கீழ் இராசதுரை திருவருள், மதியரசன் சுலக்சன், கணேசன் தர்சன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனா்.

அவா்களில் ம. சுலக்சன், க. தர்சன் ஆகிய இருவருக்கும் எதிராக 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் திகதி வவுனியா மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் குற்றப்பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

முதலாம் எதிரியான இராசதுரை திருவருள் என்பவரை இந்த வழக்கிலே சேர்த்து 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் திகதி வவுனியா மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் குற்றப்பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கின் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் உள்ளதாகத் தெரிவித்து கடந்த செப்ரெம்பர் மாதம் வழக்கை அநுராதபுரம் மேல் நீதிமன்றுக்கு சட்டமா அதிபர் மாற்றினர்.

சட்ட மா அதிபர் திணைக்களத்தில் ஒவ்வொரு பிரிவு வழக்குகளையும் கையாள்வதற்கு தனித் தனியே மூத்த அரச சட்டவாதிகள் சட்டமா அதிபரின் கீழ் இருப்பார்கள். அவர்களே குற்றப்பத்திரிகை தயாரித்து வழக்கை முன்னெடுப்பர். மூத்த அரச சட்டவாதியின் வழிகாட்டலிலேயே மேல் நீதிமன்றில் பணியாற்றும் அரச சட்டவாதி வழக்கை நெறிப்படுத்துவார்.

அதேபோன்றே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான வழக்குகளைக் கையாள்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தில் மூத்த அரச சட்டவாதிகள் இருவர் உள்ளனர். அவர்களே இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை தயாரித்து வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்தனர்.

அவர்கள் இருவரின் அறிவுறுத்தலிலேயே இந்த வழக்கு வவுனியா மேல் நீதிமன்றிலிருந்து அநுராதபுரம் மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டது. எனினும் மேன்முறையீட்டு நீதிமன்றின் கட்டளையில் வழக்கு மீளவும் வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டது.

“இது சாதாரண குற்றம் அல்ல, பெரும் குற்றமாகும். சாட்சியங்கள் அவசியம் தேவை. குற்றஞ்சுமத்தப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க போதுமான சாட்சிகள் உள்ளன. எனவே குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்” என்று மூத்த அரச சட்டவாதிகளால் சட்டமா அதிபருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்தே, அவர்கள் மீது சட்டமா அதிபர் திணைக்களம் இந்த விவகாரத்தில் தீவிரம் காண்பித்து வருவதாக தெரிகிறது. அரசியல்கைதிகளின் விடுதலையை முன்னிறுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணி போராட்டங்களை முன்னெடுத்த நிலையில், சுலக்சனின் சகோதரி அந்த போராட்டங்களில் பங்கெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, புனர்வாழ்விற்கு உட்படுத்தவும், புனர்வாழ்விற்கு உட்படுத்துவது குறித்து சாதகமாக சிந்திக்கலாமென்றும் கூறப்பட்ட ஐந்து போராளிகளும் அநுராதபுரத்தில் அன்ரனோவ் விமானத்தை சுட்டு விழுந்தியது, இரணைதீவு கடலில் விமானத்தை சுட்டு விழுத்தியது, அனுராதபுரம் விமானப்படை முகாமை தாக்கியழித்த குற்றம்சாட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here